பிலிப்புவைப் போல் என்னையும் அனுப்பும் ஆண்டவரே!| ஆர்.கே. சாமி | VeritasTamil

பாஸ்கா 3-ம் வாரம் – வியாழன்
தி.பணிகள் 8: 26-40
யோவான் 6: 44-51
பிலிப்புவைப் போல் என்னையும் அனுப்பும் ஆண்டவரே!
முதல் வாசகம்.
நமது முதல் வாசகத்தில், திருத்தொண்டர் பிலிப்புவை கடவுளின் தூதர் எத்தியோப்பிய அரசியான கந்தகியின் நிதியமைச்சரிடம் அனுப்புகிறார். அவர் ஆண்மை அற்றவர் என்று லூக்கா குறிப்பிடுகிறார். அப்போது, இந்த எத்தியோப்பிய புறவினத்தாரான அமைச்சர், எசாயா இறைவாக்கினர் எழுதிய ஒரு பகுதியை வாசித்துக்கொண்டிருந்தார். அவரிடம் சென்ற பிலிப்பு ‘நீர் வாசிப்பதின் பொருள் உமக்குத் தெரிகின்றதா?” என்று கேட்க, அந்த நிது அமைச்சரோ “யாராவது விளக்கிச் சொன்னாலொழிய எவ்வாறு என்னால் தெரிந்துகொள்ள முடியும்?” என்ற கேள்வியோடு, தேரில் ஏறித் தன்னோடு அமருமாறு பிலிப்பை அழைத்தார்.
பின்னர், வாசித்தப் பகுதிக்கு திருத்தொண்டர் பிலிப்புவின் விளக்கத்தை ஏற்றுக்கொண்டு ஒரு நம்பிக்கையாளராக மாறுகிறார். அவர் உடனடியாக திருமுழுக்குப் பெற்று, கிறிஸ்து இயேசுவின் செய்தியை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு தனது பயணத்தைத் தொடர்கிறார்.
நற்செய்தி.
நற்செய்தியில், கடந்த சில நாட்களாக நாம் கேட்ட வாழ்வளிக்கும் உணவு " என்ற தமது மறையுரையை இயேசு தொடர்கிறார். தமக்கும் தம்முடைய தந்தைக்கும் இடையே உள்ள நெருங்கிய உறவை அவர் விவரிக்கிறார்.
இயேசு, “விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு நானே” என்று சொன்னதும், கூடியிருந்தோர் மனதில் “இவர் யோசேப்பின் மகன்தானே, இவருடைய தாயும் தந்தையும் நமக்குத் தெரியாதவர்களா? அப்படியிருக்க இவர், நான் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தேன்’ என்று சொல்கிறாரே என்று முணுமுணுக்கத் தொடங்குகிறார்கள் என்று யோவான் நற்செய்தியாளர் குறிப்பிடுகிறார்.
மக்களின் குறிப்பாக யூதர்களின் முணுமுணுத்தலுக்கு மற்மெழியாக இயேசு. ‘கடவுள்தாமே அனைவருக்கும் கற்றுத் தருவார்’ என்ற இறைவாக்கினர் எசாயாவின் வார்த்தைகளான, ‘“உன் குழந்தைகள் அனைவருக்கும் ஆண்டவர்தாமே கற்றுத்தருவார்; உன் பிள்ளைகள் நிறைவாழ்வு பெற்றுச் சிறப்புறுவர்.” (எசா 54:3). என்பதை மேற்கோள்காட்டி அவர்களின் அறியாமைக்கு விளக்கமளிக்கிறார்.
சிந்தனைக்கு.
இன்றைய முதல் வாசகத்தில் எத்தியோப்பிய நீதியமைச்சர், பிலிப்புவிடம் “யாராவது விளக்கிச் சொன்னாலொழிய எவ்வாறு என்னால் தெரிந்துகொள்ள முடியும்?” என்ற கேள்வியை முன்வைக்கிறார். ஆண்டவர் இயேசு இறையரசு என்பது மனித சிந்தனைக்குப் புலப்படாத ஒன்று என்பதால் உவமைகளைக் கொண்டு எளிதாகப் புரிய வைத்தார் என்பது நாம் அறிந்த ஒன்று. ஆம், இறையரசுக்கான இறைவார்த்தைகள் எடுத்துச் சொல்லப்பட வேண்டும்.
அந்த எத்தியோப்பிய நீதியமைச்சரைப்ல போன்றுதான் பலரும் ஆண்டவரின் வார்த்தையை வாசிக்கிறாரகள் அல்லது வாசிக்கக் கேட்கிறார்கள். அதனை புரிந்துகொள்வது கடினமாக உள்ளதால் சோர்வடைகிறார்கள். சில வேளைகளில் சிலரின் தவறான விளக்கங்களால் அல்லது இறைவார்த்தையைத் திரித்துக் கூறுபவர்களால் பலர் குழப்பம் அடைவதும் உண்டு.
இன்றைய நற்செய்தியில் இயேசு, “என்னை அனுப்பிய தந்தை ஈர்த்தாலொழிய எவரும் என்னிடம் வர இயலாது” என்று கூறுகிறார். இந்த நற்செய்தி வசனத்தின் மூலம் இயேசு மனமாற்றத்தைப் பற்றிப் பேசுகிறார் என்பது மிகவும் தெளிவாகத் தெரிகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மனமாற்றம் என்பது கடவுளின் முன்முயற்சி. கடவுளே மன்னமாற்றத்தைத் தொடங்குகிறார். நாம் அவரைத் தேடுவதில்லை. எப்போதும் நம்மைத் தேடி, நம்மை மனமாற்றத்திற்குக் கொண்டு வருபவர் அவரே என்பதால், அவரது வார்த்தைகளைக் கேட்பதோடு நின்று விடாமல், அவரது வார்த்தைகளை நம்மில் செயல்பட உள்ளக் கதவைத் திறக்க வேண்டும்.
மேலும், ‘ஆண்டவர் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே’ என்கிறார். இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்” என்றுரைக்கிறார்.
நம்மைத் தேடி வந்த ஆண்டவர் அவரையே நமக்கு ஆன்மீக உணவாக அளிப்பதை நாம் கடவுளின் பெரும் கொடையாகப் பெறுகிறோம். ஆகவே, நாம் ஏற்கும் நற்கருணை புரியாதார் கூறுவதைப்போல் வெறும் அப்பம் அல்ல. இது என் உடல் என்று இயேசுவே கூறுவதால் அது அவரது உடல் என்பதை மறுக்க நாம் யார்? கடவுள் அழைத்த மக்களுக்கு ஆன்மீக உணவாக இயேசு நறகருணையில் உருமாற்றம் பெறுகிறார். நாம் மனத்தாழ்மையுடன் அவரை ஏற்க வேண்டும். நற்கருணையைப் புறக்கணித்து நம்மால் எதுவும் செய்ய முடியாது என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும்.
நற்கருணையின் வழி, தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இயேசுவுடனும் தந்தையுடனும் நாம் கொண்டுள்ள உறவில் நாம் மகிழ்ச்சியுடன் உற்சாகமாக இருப்பதை உலகத்தார் பார்க்க வேண்டும்.
இறைவேண்டல்.
ஆண்டவரே, உமது தூய ஆவியாரின் இயக்கத்திற்கு நான் ஒத்துழைக்கவும், அவரது விருப்பத்திற்கு இசைந்து பிலிப்புவைப் போல் நற்செய்திப்பணி செய்யவும் என்னைத் திடப்படுத்துவீராக. ஆமென்.
ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
அலைப்பேசி +6 0122285452
Daily Program
