எதிர்ப்பைக் காணா கிறிஸ்தவம் தழைக்காது! | ஆர்.கே. சாமி | VeritasTamil

24 மார்ச் 2025
தவக்காலம் மூன்றாம் வாரம் - திங்கள்
2 அரசர் 5: 1-15
லூக்கா 4: 24-30
எதிர்ப்பைக் காணா கிறிஸ்தவம் தழைக்காது!
முதல் வாசகம்.
முதல் வாசகம் தொழுநோயால் அவதிப்பட்ட சிரியா தளபதி நாமானின் கதையை விவரிக்கிறது, அவர் ஒரு எளிய நம்பிக்கை மற்றும் கீழ்ப்படிதலுக்குப் பிறகு இறைவாக்கினர் எலிசாவால் குணப்படுத்தப்பட்டார்.
சிரியா மன்னனின் படைத்தலைவனான நாமான், தன் தலைவனிடம் சிறப்பும் நன்மதிப்பும் பெற்றிருந்தார். அவர் வலிமை மிக்க வீரர், ஆனால் தொழுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். சிரியா நாட்டினர் ஒருமுறை கொள்ளையடிக்கச் சென்ற பொழுது, இஸ்ரயேலைச் சார்ந்த ஒரு சிறுமியைக் கடத்திச் சென்றனர். அவள் நாமானின் இல்லத்தில் பணிப்பெண்ணாகப் பணிபுரிந்து வந்தாள். .
வந்த பணிப்பெண் கூறிய ஆலோசனையின்படி நாமான் சிரியாவை விட்டு, சமாரியாவுக்குச் சென்று, அங்கு எலிசா இறைவாக்கினரின் சொல் கேட்டு, யோர்தான் நதியில் ஏழு முறை குளித்ததன் மூலம் தொழுநோயிலிருந்து குணமடைந்தார். ஆனால், உள்நாட்டு சமாரியா அரசனுக்கு முதலில் யோர்தான் ஆற்றில் மூழ்கினால் குணம் பெறலாம் என்ற நம்பிக்கை இல்லை.
நற்செய்தி.
நற்செய்தி வாசகத்தில், இயேசு அவர் வளர்ந்த ஊராகிய நாசரேத்தில் போதித்து வருகிறார், ஆனால் இயேசு கூறிய நற்செய்தியைக் கேட்க மக்கள் தயாராக இல்லாததால், அவரது செய்தி அவர்கள் மத்தியில் ஏற்கப்படவில்லை. இயேசு யார் என்று அவர்களுக்குத் தெரியும் என்று அவர்கள் நினைத்து அவரது போதனையை ஏற்க மறுத்தனர்.
எனவே, “நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை’ என்று அவர்களுக்குக் கூறினார். தொடரந்து, முதல் வாசகத்தில் நாம் வாசித்த செய்தியான, ‘இறைவாக்கினர் எலிசாவின் காலத்தில் இஸ்ரயேலரிடையே தொழுநோயாளர்கள் பலர் இருந்தனர்; ஆயினும் அவர்களுள் எவருக்கும் நோய் நீங்கவில்லை. சிரியாவைச் சார்ந்த நாமானுக்கே நோய் நீங்கியது” என்று புறவினத்தாரிடையே காணப்பட்ட நம்பிக்கையை பெரிதுபடுத்திப் பேசினார். இயேசு இவ்வாறு கடவுள் மேல் கொண்ட புறவினத்தாரின் நம்பிக்கையை உயர்வாகப் பேசியதால் அவர்கள் எழுந்து, அவரை ஊருக்கு வெளியே துரத்தி, அவ்வூரில் அமைந்திருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட இழுத்துச் சென்றனர். அவர் அவர்கள் நடுவே நடந்து சென்று அங்கிருந்து போய்விட்டார் என்று லூக்கா விவரிக்கிறார்.
சிந்தனைக்கு.
முதல் வாசகத்தில் நாமானின் கதையில், கடவுள் எவ்வாறு ஒரு வித்தியாசமான வழியில் செயல்படுகிறார் என்பதை அறிந்தோம். நாமானின் மனைவியின் வேலைக்காரி இஸ்ரேலைச் சேர்ந்த ஒரு பெண் என்பது தற்செயலாக அமைந்த ஒன்றல்ல. அது முற்றிலும் கடவுளின் ஏற்பாடு. இஸ்ரயேலின் கடவுளின் இறைவாக்கினர் எலிசாவைப் பற்றி நாமான் அறியும் வகையில் அது கடவுளின் முன் ஏற்பாடாக இருந்தது.
தொழுநோயாளியான நாமான் குணமடைய இஸ்ரேலுக்குச் செல்ல தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கிறார். அவர் வந்தவுடன், கடவுள் தொழுநோயாளியைக் குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை இஸ்ரயேல் அரசனுக்கும் இல்லை. ஆனால், நம்பிக்கை கொள்வோருக்குக் கடவுளால் இயலும் என்பது அவருக்கு வெளிப்படுத்தப்பட்டது.
ஆம், நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் கடவுள் எப்போதும் நம்மோடு இருக்கிறார். அந்த இஸ்ரயேல் அரசனைப்போல் நாம் அதை உணர மறுக்கிறோம். மீட்பின் நற்செய்தியை எடுத்துரைக்க இயேசு முயன்றும் அவருடைய பணியை ஆதரிக்க சொந்த ஊர் மக்களே அவரை மறுப்பதுதோடு ஊரை விட்டு விரட்டியது, அவருக்கு எவ்வளவு மனவேதனையாக இருந்திருக்கும்?
எனவேதான், ‘உங்களை எனக்குத் தெரியும். உங்களிடம் இறையன்பு இல்லை’ (யோவான் 5:42) என்று இயேசு வெளிப்படையாகக் கூறினார். அந்த பணிப்பெண்ணுக்கு எலிசா மீது இருந்த நம்பிக்கை கூட இஸ்ரயேலருக்கு, அதிலும் அவரது சொந்த ஊர் மக்களுக்கு இயேசுவின் மீது இல்லை. அவர்கள் மத்தியில் பணிவு இல்லை, மாறாக இறுமாப்பு அல்லது மமதை தாட்டவமிட்டது.
பணிவு என்பது நம்பிக்கை கலந்த உண்மை. நம்பிக்கை கலந்த உண்மை எப்போதும் நம்மை விடுவிக்கும்.
நாமான் அவரது நாடான சிரியாவில் ஆறுகள் பல இருக்க யோர்தான் நதியில் ஏன் அவர் ஏழுமுறை மூழ்கி எழ வேண்டும் என்று தொடக்கத்தில் தயங்கினாலும். இறுதியில் அவர் யோர்தானில் மூழ்கியதால் நலமடைந்தார். கடவுள் நம்மை பெரும் செயல்கள் வழி அல்ல அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் சிறு சிறு நிகழ்வுகள் வழியே நம்மில் செயலாற்ற விரும்புகிறார். நாம் அதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
நாங்கள் கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்ட மக்கள் எனும் இறுமாப்பில் இருந்த வட நாடான இஸ்ரயேல் அரசனுக்கு, அவரது நாட்டிலேயே ஒரு புறவினத்தாரான நாமானைக் குணப்படுத்தி கடவுள் அனைவருக்குமானவர் என்பதை வெளிப்படுத்தினார். ஆம், கடவுள் நம்மிலும் நம்பிக்கை கலந்த உண்மை வாழ்வை எதிர்ப்பார்க்கிறார். பதிலுரைப் பாடலில் ‘என் நெஞ்சம் உயிருள்ள இறைவன்மீது தாகம் கொண்டுள்ளது’ என்பதை போல் அவரை நாடுவோம்.
இறைவேண்டல்.
ஆண்டவரே, உமது சொந்த ஊர் மக்கள் போல் உம்மை ஏற்றுக்கொள்ள மறுப்போர் மத்தியில், என்னை உமக்கான சான்று வாழ்வு வாழும் சீடராக என்னை தினமும் திடப்படுத்துவீராக. ஆமென்.
ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
