தூய ஆவியானவர் நம்மை புதுப்பிக்கும் கடவுள்!| ஆர்.கே. சாமி | VeritasTamil

பொதுக்காலம் 3ஆம் வாரம் - திங்கள்

எபிரேயர் 9: 15, 24-28
மாற்கு  3: 22-30

 
தூய ஆவியானவர் நம்மை புதுப்பிக்கும் கடவுள்!

 
முதல் வாசகம்.


 இவ்வாசகத்தில், கடவுளால் அழைக்கப்பட்டவர்கள் அவரால் வாக்களிக்கப்பட்ட, என்றும் நிலைக்கும், உரிமைப் பேற்றைப் பெறுவதற்கென்று உண்டானது புதிய உடன்படிக்கை என்று நமக்கு இன்று நினைவூட்டப்படுகிறது. இந்த புதிய உடன்படிக்கையானது, இயேசு கறிஸ்துவின் சிலுவை மரணத்தால் விளைந்தது என்கிறார் ஆசிரியர்.

பழைய உடன்படிக்கையை  மீறிச் செய்த குற்றங்களிலிருந்து இயேசவின் திருஇரத்தால் அவர் பெற்றுத் தந்த மீட்பு நம்மை விண்ணுலகிற்குள்ளேயே நுழையும் அரிய வாப்பைப் பெற்றுத் தந்துள்ளது என்கிறார் ஆசிரியர். மேலும், இயேசு ஏற்படுத்திய புதிய உடன்படிக்கையானது, அவர்  தம்மையே ஒரே முறை பலியாகக் கொடுத்தன் பலன் என்கிறார். அவர்  மீண்டும் மீண்டும் தன்னை பலிகொடுக்கவில்லை என்றும், மனிதரும்   ஒரே முறை சாவுக்கு உட்படுவர் என்றும்  பின்னர் இறுதித் தீர்ப்பு வரும் என்றும் அறிவுறுத்துகிறார் இத்திருமுகத்தின் ஆசிரியர். 


நற்செய்தி.


எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞர், “இவனைப் பெயல்செபூல் பிடித்திருக்கிறது” என்றும் “பேய்களின் தலைவனைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான்” என்றும் ஒரு புதியக் குற்றச்சாட்டை முன்வைக்கிறார். 

இங்கே இரண்டு குற்றச்சாட்டுகள் இயேசுவின் மீது சுமத்தப்படுகிறது. 

1.    இயேசு ‘பெயல்செபூல்’ அதாவது பேய்களின் தலைவனால் ஆட்கொள்ளப்பட்டிருக்கிறார். 

2.    இயேசு, பேய்களின் தலைவனைக் கொண்டுதான்  பேய்களை ஓட்டுகிறார்.  

மேறகண்ட இரு குற்றச்சாட்டுகளையும் செவிமடுத்த இயேசு, ஓர் உவமையின் வாயிலாக அவர்கள் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் கற்பிக்கிறார். சாத்தானுக்கும்  அரசு உள்ளது. அப்படியென்றால், “சாத்தான் சாத்தானை எப்படி ஓட்ட முடியும்? தனது அரசுக்கு எதிராகத் தானே பிளவுபடுதத்தும் வேலையைச் செய்யுமா? என்று வினவுகிறார். ஏனெனில் பிளவுப்படும் எந்த அரசும் காலத்துக்கும் நிலைத்து நிற்காது. எனவே,   சாத்தானின் கூட்டம் தன்னை தானே அழித்துக்கொள்ள விழையாது என்கிறார்.  

தீய ஆவியைப் பற்றி விவரித்த இயேசு அடுத்து, தூய ஆவியைப் பற்றி அறிவுறுத்துகிறார். உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தூய ஆவியாரைப் பழித்து உரைப்பவர் எவரும் எக்காலத்திலும் மன்னிப்புப் பெறார்; அவர் என்றென்றும் தீராத பாவத்திற்கு ஆளாவார் என்ற எச்சரிக்கையை முன்வைக்கிறார்.


சிந்தனைக்கு.


இன்றைய நற்செய்தி வாசகத்தின் முடிவில் ஓர்  அறிக்கை உள்ளது,  அது, மக்களுடைய  எல்லா  பாவங்களும் அவர்களின் எல்லா இறை  நிந்தனைகளும் மன்னிக்கப்படும்,  ஆயினும்கூட, ஒருபோதும் மன்னிக்கப்படாத ஒரு பாவம் இருப்பதாக இயேசு கூறுகிறார். அது தூய ஆவியானவரை நிந்திக்கும் பாவமாகும்.

இன்றைய நற்செய்தியில்,  இயேசுவின் மூலம்  செயல்படும் வல்லமை தூய ஆவியின் வல்லமையல்ல, மாறாக சாத்தானின் வல்லமை என்று மறைநூல் அறிஞர்கள் கூறுகின்றனர்.    இந்த பெயல்செபூல் என்பது  அன்னியரின் தெய்வம்.
சமூகத்தில் ஒருவரைப் பார்த்து,  பேய் பிடித்தவன் இல்லது பேய் பிடித்தவள் என்று கூறுவது,  அவரை இழிவுபடுத்துவதாகவே கருதப்படும். 

மறைநூல் அறிஞர் முன்வைத்த குற்றச்சாட்டைக் கேட்டதும்,  இயேசு சினமுற்றதாவோ, அவரை எதிர்த்ததாகோ மாற்கு குறிப்பிடவில்லை.  அவர் நினைத்திருந்தால்,  நான் பெயல்செபூலுக்கு உரியவன் அல்ல மாறாக,  நான் தூய ஆவியினால் பிறந்தவன் என்று வாதிட்டு இருக்கலாம்.

மெசியாவாக  இயேசு நோயுற்றவர்களைக் குணப்படுத்தி, பிசாசுகளைத் துரத்தினதைக் கண்டிருந்தும்   மறைநூல் அறிஞர்களின்   இதயத்தில் திறந்த மனப்பான்மை இல்லை.  இயேசுவையும் சாத்தானின்  கருவி என்று குற்றம் சாட்டும் அளவுக்கு அவர்களின் மனம் இறுக்கமுற்றிருந்தது.

இன்றைய முதல் வாசகத்தின்படி, ‘பலருடைய குறைகளைத் தம்மீது சுமந்துகொள்ள கிறிஸ்து ஒருமுறை மட்டுமே தன்னை பலியாக்கினார் என்று அறிந்தோம். ஆம்,  கடவுள்  தம் ஒரே மகனை உலகத்திற்கு அனுப்பினார், உலகத்தைக் கண்டனம் செய்வதற்காக அல்ல, மாறாக நாம் கடவுளோடு ஒப்புரவாகும்படி, அவர் அன்பான மன்னிப்பின் ஆவியை அனைவர் மீதும் பொழிந்தார்.
இயேசு, பிசாசுகளின் தலைவன் அல்ல, அவர்  புதிய உடன்படிக்கையின் இணைப்பாளராய் இருக்கிறார். 

ஆகவே, தூய ஆவியானவர் நம்மை உண்மையை நோக்கி வழிநடத்துபவர். அவர் கடவுள். தூய ஆவியானவரைப் பழித்துரைப்பவர் எவரும் எக்காலத்திலும் மன்னிப்புப் பெறார்; அவர் என்றென்றும் தீராதப் பாவத்திற்கு ஆளாவார் என்பதை நாம் உணர்ந்து கீழ்ப்படிந்து வாழ வெண்டும். 

அடுத்தாக, ஒருவரை அல்லது அவருடைய செயல்பாடுகளை விமர்சிக்கின்றபோது, விமர்சிப்பதற்கான அடிப்படைத் உண்மையைக் கடைபிடிக்கவேண்டும். கண்மூடித்தனமான குற்றச்சாட்டு அழிவுக்கு வழிவகுக்கும்.  

இன்றைய நற்செய்தியில் மற்றொரு படிப்பினையையும் இயேசு அளிக்கிறார். ஆம், “தனக்குத் தானே பிளவை ஏற்படுத்தும் எந்த வீடும் நிலைக்காது” என்பதாகும். குடும்பம் இரண்டுபட்டால், அது சீர்குலையும். ஊர் இரண்டுபாட்டால் அங்கே வளர்ச்சி, முன்னேற்றம் என்பன பெரிதும் பாதிக்கப்படும்.   

ஆகவே, பவுல் அடிகள் கூறுவதைப்போல்,  கடவுளின் ஆவியால் இயக்கப்படுகிறவர்களே கடவுளின் மக்கள் (உரோ 8:14). ஆதலால், கடவுளின் ஆவியாரை பழித்துரைப்பவர்களாக அல்ல, அவரால் ஆட்கொள்ளப்பட்டவர்களாக  வாழ்வோம்.

இறைவேண்டல்.


ஆண்டவராகிய இயேசுவே,  நீர் வாக்களித்தத் தூய ஆவியாரின் இயக்கத்திற்கு நான் பணிந்திருக்க  என்னை  திடப்படுத்திக் காத்தருள்வீராக. ஆமென்.


ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452