இனி வாழ்பவன் நான் அல்ல; கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார்’ என்போம்!| ஆர்.கே. சாமி | VeritasTamil
பொதுக்காலம் இரண்டாம் வாரம்- சனி
திருத்தூதர் பவுல் மனமாற்றம்-விழா
திரு.பணி 22: 3-16/ 9: 1-22
மாற்கு 16: 15-18
‘இனி வாழ்பவன் நான் அல்ல; கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார்’ என்போம்!
முதல் வாசகம்.
‘புறவினத்தாரின் திருத்தூதர்’ என்று அழைக்கப்படும் புனித பவுலின் மனமாற்றப் பெருவிழாவை இன்று கொண்டாடுகிறோம்.
திரு.பணி 22: 3-16 இல், பவுல் ஒரு கிறிஸ்தவர் என்பதற்காக விசாரணையில் இருக்கும் போது, தனது சொந்த மனமாற்றத்தின் கதையை விவரிக்கிறார். “நான் ஒரு யூதன்; சிலிசியாவிலுள்ள தர்சு நகரத்தில் பிறந்தவன்; ஆனால் இந்த எருசலேம் நகரில் வளர்க்கப்பட்டவன்; கமாலியேலின் காலடியில் அமர்ந்து நம் தந்தையரின் திருச்சட்டங்களில் நுட்பமாகப் பயிற்சி பெற்றவன்’ என்று தம்முடைய முந்தைய வாழ்வைப்பற்றி விவரிக்கிறார்.
பின்னர், கிறிஸ்தவத்தைத் துன்புறுத்திய பவுல் ஆண்டவரால் அழைக்கப்பட்ட பின் ஏற்பட்ட மனமாற்றைத்தை உள்ளது உள்ளபடி விவரிக்கிறார். திருமுழுக்குப் பெற்றபின் அவரது மனமாற்றத்தின் உறுதியை வெளிப்படுத்துகிறார்.
அவர் மனம் மாறுவதற்கு முன்பு அறிவித்ததை விட வித்தியாசமான நற்செய்தியை இப்போது அறிவிக்கிறார். எல்லா படைப்புகளுக்கும் நற்செய்தியை அறிவிப்பதற்கும், சிறைவாசம், துன்பம் மற்றும் மரணத்தை கூட சந்திக்க தயாராக இருக்கிறார் என்ற செய்தி வெளிப்படுத்தப்படுகிறது
நற்செய்தி.
புனித மாற்கு நற்செய்தியின் இறுதி அதிகாரத்திருந்து இன்றைய நற்செய்தியைக் கேட்கிறோம். உயிர்த்தெழுதலுக்குப் பிறகு, இயேசு தம்முடைய திருத்தூதர்களை உலகம் முழுவதும் சென்று, எல்லா படைப்புகளுக்கும் நற்செய்தியை அறிவிக்கவும், நம்பிக்கை கொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர் என்றும் கூறி மறைகிறார்,
சிந்தனைக்கு.
புனித பவுலின் மனமாற்றம் அவருக்கு மட்டுமல்ல, திருஅவையின் வரலாற்றிலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. ஏனெனில், புனித பவுலின் மனமாற்றத்திற்குப் பின்தான் இயேசுவின் நற்செய்தி உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது. ஒருமுறை கிறிஸ்தவர்களைத் துன்புறுத்துவதற்காகத் தமஸ்கு நகருக்குச் செல்லும் வழியில்தான் ஆண்டவர் இயேசு அவரைத் தடுத்து ஆட்கொள்கிறார். அவரை புறவினத்தாருக்கு நற்செய்தி அறிவுக்கும் கருவியாக ஏற்படுத்துகிறார் என்பதைத் திரு.பணி நூலின் 9-ம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். பவுலின் மனமாற்றம் நமக்குத் தரும் செய்திகளுள் ஒன்று, கிறிஸ்தவர்களில் கிறிஸ்து வாழ்கிறார் என்பதாகும். புனித பவுல் எருசலேமிலிருந்து தமஸ்கு நகரை நோக்கிச் செல்கிறபோது, வானத்திலிருந்து தோன்றிய ஒளியானது அவரைச் சூழ்ந்துகொள்ள அவர் (தான் பயணம் செய்த (குதிரையிலிருந்து ) கீழே இடறி விழுகிறார். அப்போது அவர், "ஆண்டவரே நீர் யார்? என்று கேட்கிறார். அதற்கு இயேசு, "நீ துன்புறுத்தும் இயேசு நானே" என்கிறார் (திப 9:6). இங்கே இயேசு தன்னை கிறிஸ்தவர்களோடு, திருஅவையோடு இணைத்துகொள்கிறார்.
கிறிஸ்தவத்தை அழிக்தொழிக்க நினைத்து, கிறிஸ்தவர்களைச் சிறையில் அடைக்க நினைத்தவரே கிறித்துவுக்காக உயிர் துறக்க துணிந்த புதுமையை இவரில் காண்கிறோம். இவரின் மனமாற்றம் பற்றி நான்கு இடங்களில் வாசிக்கிறோம் (திப 9:1-9, 22:6-16, 26:12-18, கலா 1:15-19). இந்த நான்கு பகுதிகளுக்கும் இடையே நிறைய வேற்றுமைகள் இருந்தாலும், இவற்றின் மையச் செய்தி ‘மனமாற்றம்’ தான்.
பவுலடியார் எத்தனையோ துன்பங்களையும், வேதனைகளையும் அனுபவித்தாலும் அவர் கிறிஸ்துவுக்காக அனைத்தையும் செய்தார். எனவே பவுலடியாரின் மனமாற்றப் பெருவிழாவைக் கொண்டாடும் இவ்வேளையில் நாமும் உலகப் போக்கிலான வாழ்க்கை வாழ்வதை விடுத்து, உண்மைக் கடவுளாகிய இயேசுவாக வாழ முயற்சி எடுக்கவேண்டும்.
‘பவுல்’ என்றால் கிரேக்கத்தில் ‘சிறியது’ என்பது பொருள். ஆகையால்தான், பழைய மொழிபெயர்ப்பில் நாம் இவரை ‘சின்னப்பர்’ என அழைத்தோம். உண்மையில் ‘கடுகு சிறுத்தாலும் காரம் போகாது’ என்பது போல இவர் உருவத்தில் சிறியவராக இருந்தபோதும் ஆக்கத்திலும் ஊக்கத்திலும் பின்தங்கவில்லை. இயேசுவின் அழைத்தலின் போது விழுந்தவர் எழுந்தார்...முடங்கிவிடவில்லை.
இறைவேண்டல்.
பவுல் அடியாரை உமது திருத்தூதராகத் தேர்ந்துகொண்ட ஆண்டவரே, எனது வாழ்வு முறை மாறவும், நானும் பவுல் அடிகளின் பாதையில் மீட்புச் செய்தியை எடுத்துரைப்பதில் துணிவுடனும் துடிப்புடனும் செயல்பட அருள்புரிவீராக. ஆமென்.
ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452