நாம் மனம் வைத்தால் பலர் இயேசுவை அண்டுவர்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

14 பிப்ரவரி 2025                                                                                                                  
பொதுக்காலம் 5ஆம் வாரம் – வெள்ளி

தொ.நூ. 3: 1-8
மாற்கு 7: 31-37
 

 நாம் மனம் வைத்தால் பலர் இயேசுவை அண்டுவர்!

முதல் வாசகம்.

இன்றைய முதல் வாசகத்தில், ஆதாமும் ஏவாளும் மனுக்குலத்தின் முதல் பெற்றோர்களாகப் படைக்கப்பட்டார்கள். அவர்கள் பாவம் அறியா நிலையில் தூயவர்களாக, கடவுளின் சாயல் கொண்டவர்களாக இருந்தனர். அலகை அவர்களது உள்ளத்தில் நஞ்சை விதைத்தான். அவனது சூழ்ச்சியால் மதிகெட்டு கடவுளின் ஒரே கட்டளையை மீறினர்.  அதன் விளைவாக  அலகைக்குக் கீழ்ப்படிந்து கடவுளோடுடனான நல்லுறவைப் பாழ்படுத்தினர்.  
கடவுள் -மனிதன் உறவில் கீறல் ஏற்பட்டது. அப்பொழுது அவர்கள் இருவரின் கண்களும் திறக்கப்பட்டன; அவர்கள் தாங்கள் ஆடையின்றி இருப்பதை அறிந்தனர். ஆகவே, அத்தி இலைகளைத் தைத்துத் தங்களுக்கு ஆடைகளைச் செய்துகொண்டனர் என்று ஆசிரியர் கூறுகின்றார் 
 
நற்செய்தி.

நற்செய்தி வாசகத்தில், கலிலேயா கடலோரப் பகுதியில் காதுகேளாதவரும் திக்கிப் பேசுபவருமான ஒருவருக்கு இயேசு குணமளிக்கிறார்.   'எப்பத்தா' ('திறக்கப்படு') என்றவுடன் அவருடைய காதுகள் திறக்கப்பட்டதோடு, அவரது நாவும்  கட்டவிழ்ந்தது.  அவர் தெளிவாகப் பேசினார். இவருடைய குரலைக் கேட்டவர்களும் திக்கிப் பேசியவர் சரளமாகப் பேசுவதையும் கேட்டவர்கள் வியந்தனர்.   'இவர் எத்துணை நன்றாக யாவற்றையும் செய்து வருகின்றார்!' என்று இயேசுவைப் பாராட்டினர்.   
ஆனால், இயேசுவோ, இதை எவருக்கும் சொல்ல வேண்டாமென்று அவர்களுக்குக்   கட்டளையிட்டார். அவரது கட்டளைக்கு நேர்மாறாக இன்னும் மிகுதியாய் அவர்கள் அதை அறிவித்து வந்தார்கள் என்று, மாற்கு குறிப்பிடுகிறார்.

சிந்தனைக்கு.

இன்று எந்த வகையில் நாம் ஆதாம் ஏவாளைவிட கடவுள் முன்னலையில் சிறந்து விளங்குகிறோம் என்ற கேள்வியைக் கேட்கத் தோன்றுகிறது. நாம் ஆதாம் மற்றும் ஏவாளைப் போன்றவர்கள்தான் என்பதை மறுப்பதத்கில்லை. அலகையின் பிடியியிலும் சூழ்ச்சியிலும் சிக்கி  பலவாறு ஏமாற்றப்பட்டு பாவிகளாக உள்ளோம். 
இதுதான் சரி, இதுதான் உண்மை என்று அறிந்தும், செய்ய வேண்டும் என்று நமக்குத் தெரிந்ததைச் செய்வதை விட  தற்காலிக "இன்பமான"  செய்லகளுக்கு உடன்படுகிறோம். நற்செய்தியில் இயேசுவின் இரக்கத்தால்  குணமடைந்த மனிதனைப் போல நாமும் இருக்கிறோம். அவன் இயேசுவின் கட்டளையைப் பின்பற்றவில்லை.  அவ்வாறே, நாமும் நேர்மறையான அனுபவத்தைப் பெற்றவுடன், ஆண்டவராகிய இயேசுவின் கட்டளையை முழுமையாகப் பின்பற்றத் தவறுகிறோம்.  இயேசு நம்மிடம் கேட்பதைச் செய்வதை விட, இயல்பாக வருவதை நாம் செய்கிறோம். 
முதல் வசகத்தில் கடவுளின் கட்டளைக்குக் கீழ்ப்படியாதக் காரணத்தால் ஆதாம் ஏவாளின் கண்கள் திறக்கப்பட்டன. அது உலகப் போக்கிலான வாழ்வுக்கான பார்வை. நற்செய்தியில், காதுகேளாதவரின் காதுகள் இயேசுவால் திறக்கப்பட்டன. அது சாட்சிய வாழ்வுக்கான பார்வை. 
நற்செய்தியில்,  காது கேளாதவரும் திக்கிப் பேசுபவருமான ஒருவரைச் சிலர் இயேசுவிடம் கொண்டு வந்தனர் என்று  மாற்கு குறிப்பிட்டுள்ளார். ஆம், இந்தக் கதை கடவுள் நம் ஒவ்வொருவரிடமும் பேசுவதைப் பற்றியது மட்டுமல்ல; ஆனால், கிறிஸ்துவை அறியாத மற்றவர்களை கிறிஸ்துவிடம் கொண்டுவருவது நமது கடமை என்பதையும் உணர்த்துகறது. 
இன்று, இந்த நற்செய்தியையொட்டி மேலும் சிந்திக்கையில்.  நாமும் பிறரை இயேசுவிடம் கொண்டு வரும் வரம் கேட்டு ஆண்டவரிடம் மன்றாட வேண்டும்.    கடவுளின் வார்த்தைகளைப் பிறருக்கு எடுத்துரைப்பதனாலும் பிறரை இயேசுவிடம் நம்மால் கொண்டு வர முடியும்.  எந்த முயற்சியும் எடுக்காமல் இயேசுவின் சீடர் என்று சொல்லிக்கொள்வதும் பாவம் தான். 

இறைவேண்டல்.

அண்டி வருவோரை அரவணைக்கும் ஆண்டவரே, உமது மாட்சிக்காக நான் என்னை உமக்கு அர்ப்பணிக்கவும்,  உமது தூய திருவுளப்படி   நீர் என்னைப் பயன்படுத்தவும் எனக்கு அருள்புரிவீராக. ஆமென்.
 


 


ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452

Tags