ஆண்டவரின் தோற்றமாற்றம்- விழா | ஆர்கே. சாமி | Veritas Tamil

6 ஆகஸ்டு 2025
பொதுக்காலம் 18 ஆம் வாரம் –புதன்
ஆண்டவரின் தோற்றமாற்றம்- விழா
தானியேல் 7: 9-10, 13-14
லூக்கா 9: 28b-36
நிலைவாழ்வு எனும் கூடாரத்தை உரிமையாக்குவோம்!
முதல் வாசகம்.
இன்று நாம் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் தோற்றமாற்ற விழாவினைக் கொண்டாடுகின்றோம்.
இறைவனுடைய மகிமையை, மாட்சிமையை எடுத்துரைப்பதாக இந்த பகுதி அமைந்திருக்கிறது. இறைவாக்கினர் தானியேல் தான் கண்ட காட்சியை எடுத்துரைக்கிறார். அதில் விண்ணத்தில் இறைத்தந்தை மாட்சியோடு அமர்ந்திருப்பதை விவரிக்கிறார். அவரது அரசு அழிந்து போகாது என்பதை உறுதியாகக் கூறுகிறார்.
நற்செய்தி.
இயேசுவோடு மூன்று ஆண்டுகள் வாழ்ந்த சீடர்களில் மூவருக்கு மட்டுமே கிடைத்த ஒரு வியப்புக்குரிய அனுபவம் இந்த உருமாற்றம். இதை ஓர் இறையியல் நிகழ்வு என்று அறிஞர்கள் கூற கேட்கிறோம்.
இயேசுவின் மானிடத் தன்மை மறைந்து, அவரது இறைத் தன்மை, இறை மாட்சியை வெளிப்படுத்தப்பட்ட விவரிக்க முடியாத ஓர் அனுபவத்தை இந்த மூவரும் உயர்ந்த மலை மேலே கண்டனர். அத்தோடு, இயேசு இறைத் தந்தையின் அன்பார்ந்த மகன். அவருக்கு செவி மடுப்பது இறைவனுக்கே செவிமடுப்பதாகும் என்னும் இறைவனின் குரலையும் கேட்கும் பேறு பெற்றனர்.
சிந்தனைக்கு.
இயேசு தோற்றம் மாறிய நிகழ்ச்சியை யோவானைத் தவிர்த்து மாற்கு, மத்தேயு, லூக்கா ஆகிய மூவரும் விவரிக்கின்றனர். மோசே சீனாய் மலையில் ஏறிய போது கடவுள் அவரோடு பேசிய நிகழ்ச்சியின் எதிரொலிப்பு இங்கே காணப்படுகிறது. மோசே திருச்சட்டத்தையும் எலியா இறைவாக்கையும் பிரதிபலித்து இக்காட்டியில் வெளிப்படுத்தப்படுகிறார்கள். இதில், இயேசுவின் ''திருச்சட்டத்தையும் இறைவாக்குகளையும் அழிக்கவல்ல, அவற்றை நிறைவேற்றவே வந்தார்'' என்னும் செய்தியை நாம் நினைவுகூர வேண்டும் (மத் 5:17). அதே வேளையில் வானிலிருந்து வந்த குரல் இயேசுவைக் கடவுளின் மகன் என்பதை மண்ணுலகிற்குத் தெளிவும் உறுதியும் படுத்துகிறது.
இன்று இந்த மலையில் இயேசு தம் மாட்சியை வெளிபடுத்துகிறார். இந்த மாட்சி தந்தை தம் மகனுக்கு உரியதாக்கிய மாட்சி. இன்னும் சிறிது காலத்தில் அவரது இகழ்ச்சியை கல்வாரி மலையில் வெளிப்படுத்தவுள்ளார். இந்த இகழச்சி மனுக்குலம் அவருக்குச்சூட்டிய மணிமகுடமாக அமையும்.
இவ்வாறு, இன்றைய தோற்றமாற்ற நிகழ்வோடு, இயேசு தான் யார் என்பதைத் தன் நெருங்கிய சீடர்களுக்கு வெளிப்படுத்துகிறார். இன்று நமக்கு நினைவூட்டுகிறார். இந்த மலையில் நமக்கும் ஒரு முகிய செய்தி பகிரப்படுகிறது. ஆம், 'இவருக்குச் செவிசாயுங்கள்' என்ற கட்டளையாகும். இயேசு மானிட உருவில் தோன்றிய இறைமகன். ஆகவே, இயேசு மெய்யான இறைவனும், மெய்யான மனிதனும் ஆவார் எனும் நம் நம்பிக்கையை நாளுக்கு நாள், நிமிடத்திற்கு நிமிடம் ஆழப்படுத்துவதோடு அவருக்குச் செவிசாய்ப்பதில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.
இந்த உருமாற்றம் இயேசுவின் உயிர்ப்புக்குப் பின் சீடர்களின் இறைநம்பிக்கையை ஆழப்படுத்த உதவியது. இயேசு இறைமகனாய், மாட்சிமை நிறைந்தவராய் இருந்தும்கூட, இறைத் திருவுளத்துக்குப் பணிந்து அனைத்தையும் துறந்தார் என்பதை ஒரு படிப்பினையாக நாம் ஏற்று எளிய வாழ்வுக்குத் திரும்பவேண்டும்.
இறைவேண்டல்.
இறைமகன் என்ற உமது உயர்நிலையத் துறந்து, உம்மையே எளிமையாக்கிக் கொண்ட ஆண்டவரே, உம்மைப் போல கடவுளின் திருவுளத்துக்குப் பணிந்து வாழும் வரம் எமக்கு அருள்வீராக. ஆமென்.
ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
