கிறிஸ்துவில் நம்பிக்கை சீடத்துவத்தில் நம்பிக்கை! | ஆர்கே. சாமி | Veritas Tamil

9 ஆகஸ்டு 2025
பொதுக்காலம் 18 ஆம் வாரம் –சனி
இணைச்சட்டம் 6: 4-13
மத்தேயு 17: 14-20
கிறிஸ்துவில் நம்பிக்கை, சீடத்துவத்தில் நம்பிக்கை!
முதல் வாசகம்.
முதல் வாசகத்தில், மோசே இஸ்ரயேலரை நோக்கி, கடவுள் செய்த நன்மைகளைக் கேட்டு நினைவில் கொள்ளுங்கள் என்று கூறுகிறார். கடவுளின் செயலுக்கு அவர்கள் எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்பதைப் பற்றி சிந்திக்கும்படி அவர் தொடர்ந்து வலியுறுத்துகிறார். முதலாவதாக,’கடவுளாகிய ஆண்டவர் ஒருவரே ஆண்டவர். அவர்கள் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும் கடவுளாகிய ஆண்டவரிடம் அவர்கள் அன்பு கூர வேண்டும் என்று படிப்பிக்கிறார்.
அவர்கள் அடிக்கடி மற்றும் தூய உள்ளத்துடன் இறைவேண்டல் செய்ய வேண்டும் என்றும், அவர்கள் அவ்வாறு செய்யும்போது, கடவுள்தான் அவர்களை வாக்களிக்கப்பட்ட கானான் நாட்டிற்குக் கொண்டு வந்தார் என்பதையும் அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
நிறைவாக, அவர்கள் உண்டு நிறைவுகொள்ளும்போதும், அடிமைத்தன வீடாகிய எகிப்து நாட்டினின்று அவர்களை வெளியே கூட்டிவந்த ஆண்டவரை மறந்துவிடாதபடி கவனமாய் இருக்க நினைவூட்டுகிறார்.
நற்செய்தி.
நற்செய்தியில், ஒரு மனிதன் இயேசுவை அணுகி தன் மகனைக் குணப்படுத்தும்படி கேட்கிறான். அந்த மகன் ஏதோ ஒரு மன/ஆன்மீகக் பிணியால் அவதிப்படுவதாகத் தெரிகிறது. தந்தை ஏற்கனவே இயேசுவின் சீடர்களின் உதவியை நாடியதாகவும், ஆனால் அவர்களால் மகனுக்கு உதவ முடியவில்லை என்றும் குறிப்பிடுகிறார். முதலில் இயேசு சுற்றி நின்றவர்களிடம், அவர்களின் நம்பிக்கையின்மையைக் குறிப்பிட்டு உரையாற்றுகிறார். பின்னர் அவர் அந்த மகனைக் குணப்படுத்துகிறார். பின்னர், தனிப்பட்ட முறையில், சீடர்கள் மகனுக்கு உதவுவதில் அவர்களின் திறமையின்மை குறித்து இயேசுவிடம் கேள்வி எழுப்புகிறார்கள். இயேசு பதிலளிக்கும் விதமாக, அவர்களின் நம்பிக்கை போதுமானதாக இல்லை, என்றும், “உங்கள் நம்பிக்கைக் குறைவுதான் காரணம் என்றும் அவர்களுக்குக் கடுகளவு நம்பிக்கை இருந்தால் அவர்கள் அந்த மலையைப் பார்த்து ‘அங்கிருந்து பெயர்ந்து அங்குப் போ’ எனக் கூறினால், அது பெயர்ந்து போகும். அவர்களால் முடியாதது ஒன்றும் இராது என நான் சொல்லுகிறேன்” என்று அவர்கைளத் தேற்றுகிறார்.
சிந்தனைக்கு.
முன்பு ஒரு வேளை, இயேசு தன் சீடர்களுக்குப் பேய்களை ஓட்டவும், பிணிகளைப் போக்கவும் அதிகாரம் அளித்திருந்தார் (மத் 10: 6-8). அவர்கள் மிகுந்த நம்பிக்கையோடு பேய்களையும் ஓட்டி பணி செய்தனர். ஆனால், நாட்கள் செல்ல செல்ல, அவர்களால் பேயை ஓட்ட முடியாமல் போனது. இது குறித்து அவர்கள் இயேசுவிடம் இன்று வினவுகிறார்கள். அதற்கு இயேசு பதிலாக, “உங்களின் நம்பிக்கை குறைவே காரணம் ” என்கிறார். தொடர்ந்து அவர் அவர்களிடம், “உங்களுக்குக் கடுகளவு நம்பிக்கை இருந்தால், நீங்கள் இம்மலையைப் பார்த்து, ‘இங்கிருந்து பெயர்ந்து, அங்குப் போ” எனக் கூறினால், அது பெயர் போகும்” என்கிறார்.
நம்பிக்கையின் மூலமும் ஆற்றலும் கடவுளிடமிருந்து உருவாகிறது. அவரிடமிருந்தே நாம் இவற்றைப் பெறுகிறோம். எனவேதான் ‘நம்பிக்கை’ கடவுளின் கொடை என்கிறோம். ஒருவரின் நம்பிக்கை வளர, கடவுள் செய்த அனைத்தையும் ஒருவர் தொடர்ந்து நினைவு கூர்ந்து, பின்னர் ஒருவரின் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் - ஒருவரின் இதயம், ஆன்மா மற்றும் ஆற்றல் கடவுளை அன்பு செய்ய வேண்டும். இதைதான் முதல் வாசகம் சுட்டிக்காட்டியது.
தமிழில் ஒரு பழமொழி உண்டு. ‘‘ஆயுதங்கள் இல்லாமல் போர்க்களம் போகலாம்; அவநம்பிக்கையோடு அடுப்படியும் தாண்டாதே!’என்பதுதான் அது. அவநம்பிக்கை நமது சீடத்துவ வாழ்வைப் பாழ்படுத்தும். கடவுள் நம்மிடம் பேசுவதற்கும் நாம் அவரோடு இணைந்திருப்பதற்கும் நம்பிக்கை இன்றியமையாததாகும். நாம் கேட்கிறோம், புரிந்துகொள்கிறோம், நம்புகிறோம். நம்பிக்கை என்பது ஏதோ ஒன்றை நாம் வலுவாக நம்புவது மட்டுமல்ல, நாம் நம்புவது நிகழ வேண்டும் என்று நாம் விரும்புவதாகும்.
இயேசு சொல்வதையெல்லாம் நாம் கேட்டு, புரிந்துகொண்டு, நம்ப வேண்டும். பேய் பிடித்த சிறுவனை குணப்படுத்திய விடயத்தில், சீடர்கள் பேயை விரட்டியது கடவுளின் திருவுளம் என்பது தெளிவாகிறது. ஆனால் அவர்களில் அந்த நம்பிக்கை நிலைக்கவில்லை. தேய்பிறைபோலானது. நமது நிலையும் இதுபோன்றதே. நம்பிக்கையில் நிலைத்தன்மை அவசியம்.
2 கொரி 5:7-ல், ‘நாம் காண்பவற்றின் அடிப்படையில் அல்ல, நம்பிக்கையின் அடிப்படையிலேயே வாழ்கிறோம்’ என்கிறார் பவுல் அடிகள். கடலின் கொந்தளிப்புகள் போல் வாழ்வில் எழும் போராட்டங்களை நினைத்து அச்சமடையாமலும், ஐயமுறாமலும், “ஆண்டவர் வலிமை வாய்ந்த வீரரைப் போல என்னோடு இருக்கின்றார்” என்ற நம்பிக்கையில் நமது வாழ்வைத் தொடர்வோம்.
இறைவேண்டல்.
ஆண்டவராகிய இயேசுவே, உம்மில் எனது நம்பிக்கை நாளுக்கு நாள் உறுதிபெற எனக்கு அருள்புரிவீராக. ஆமென்.
ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
