உண்மையின் பக்கம் நிற்போர் பேறுபெற்றோர்!| ஆர்.கே. சாமி | VeritasTamil

தவக்காலம் 4ஆம் வாரம் – சனி
எரேமியா 11: 18-20
யோவான் 7: 40-53
உண்மையின் பக்கம் நிற்போர் பேறுபெற்றோர்!
முதல் வாசகம்.
தீய எண்ணம் கொண்டோர் (சமயத் தலைவர்கள்) நீதிமானுக்கு எதிராக எவ்வாறு சதி செய்கிறார்கள் என்பதை இன்றைய வாசகங்கள் தொடர்ந்து விவரிக்கின்றன.
எருசலேமை ஆண்டுவந்த யோசியா அரசன், சமூகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தினான். குறிப்பாக பிற தெய்வ வழிபாட்டு ஆலயங்களைத் தகர்த்தெறிந்தான் அப்போது, அரசனுக்கு உறுதுணையாக இருந்தவர் இறைவாக்கினர் எரேமியா.
எனவே, மக்களின் எதிர்ப்பு எரேமியாவின் பக்கம் திரும்பியது. அவர்கள் எரேமியாவை மற்றிலும் அழித்தொழிக்க முற்பட்டனர். அவர்கள் “மரத்தைப் பழத்தோடு அழிப்போம்; வாழ்வோரின் நாட்டிலிருந்து அவனை அகற்றிவிடுவோம்” என்று திட்டம் தீட்டினர் . இதைத் தொடர்ந்துதான் இறைவாக்கினர் எரேமியா தன்னுடைய வேதனையை, துக்கத்தை ஆண்டவரிடம் எடுத்துக்கூறுகின்றார். இதுவே இன்றைய முதல் வாசகமாக வருகிறது. எரேமியா, "நம்பிக்கை கொண்ட ஆட்டுக்குட்டியை கொல்ல கொண்டு சென்றது போல", அவர் நீதியுள்ள கடவுளை நம்பி தனது போதனையைத் தொடர்கிறார்.
நற்செய்தி.
இன்றைய நற்செய்தி நேற்றைய நற்செய்திப் பகுதியின் தொடர்ச்சியாக வருகிறது. இயேசு கூடாரத் திருவிழாவின்போது, எருசலேமில் மக்கள் முன் போதிக்கிறார். அவர்களில் சிலர் இயேசுதான் எதிர்ப்பார்க்கப்பட்ட மெசியா என்று உறுதியாக நம்பினர். வேறு சிலர் இயேசு கலிலேயாவில் இருந்த வந்ததினால் அவர் மெசியாவாக இருக்க முடியாது என்று வாதிட்டனர். ஏனெனில், மெசியா தாவீதின் வழிமரபில் அதிலும் பெத்லகேமில் பிறப்பார் என்று மறைநூலில் எழுதப்பட்டிருந்ததை அவர்கள் அறிவர் (மீக்கா 5:2)
இயேசுவுக்கு எதிராகத் திரண்டவர்கள், அவரை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என்று கோவில் காவலர்களிடம் கேள்வி எழுப்பும் வேளையில், அங்கு பெரும்பாலான தலைமைக் குருக்களும் பரிசேயர்களும் இயேசுவுக்கு எதிராக ஒன்றுபடுகிறார்கள். இயேசுவை ஒழிப்பதற்கான அவர்களின் திட்டங்களுக்கு நிக்கோதேமு மட்டுமே சவாலாக தோன்றுகிறார். இவர்தான் முன்பு ஒரு நாள் இயேசுவிடம் இரவில் வந்தவர். அவர் தலைமைக் குருக்கள் மற்றும் பரிசேயர்களிடம் “ஒருவரது வாக்குமூலத்தைக் கேளாது, அவர் என்ன செய்தாரென்று அறியாது ஒருவருக்குத் தீர்ப்பளிப்பது நமது சட்டப்படி முறையாகுமா?” என்று கேட்டார் என்று யோவான் குறிப்பிடுகிறார்.
எருசலேமில், அவருடைய எதிரிகள் உட்பட மக்கள் "இவர் உண்மையிலேயே இறைவாக்கினர்; இவர் உண்மையிலேயே மேசியா!" என்று கூச்சலிடுகிறார்கள்: இயேசுவை அவர்களிடம் கொண்டு வரும்படி பரிசேயர்களால் பணிக்கப்பட்ட ஆலயக் காவலர்களும் கூட இயேசுவின் போதனையால் மிகவும் நெகிழ்ச்சியடைந்து, யாரும் இப்படிப் பேசினதில்லை என்பதற்காக அவரைக் கைது செய்யவில்லை என்று மேலும் யோவான் கூறுகிறார்.
சிந்தனைக்கு.
நாம் நமது தவக்காலப் பயணத்தைத் தொடரும் இக்காலக் கட்டத்தில், இயேசுவின் துன்பத்திலும் மரணத்திலும் உச்சக்கட்டத்தை அடையவிருக்கும் நிகழ்வுகளில் கவனம் செலுத்த வழிநடத்தப்படுகிறோம். அவரது வாழ்க்கைக்கு எதிரான சதித்திட்டங்களைப் பற்றி நாம் கேள்விப்படுகிறோம். கடவுளின் அன்பு மற்றும் மன்னிப்புச் செய்தியை, மக்களுக்குக் கொண்டு வருவதற்காக அவர் சொல்லொன்னா துன்பத் துயரங்களைச் சகித்துக்கொள்ளத் தயாராக இருக்கிறார் என்பதை நாம் அறிகிறோம்.
இன்று என் கவனம் நிக்கோதேமுவின் உண்மை சீடத்துவத்தில் மையமிடுகிறது. அவர் இயேசுவின் போதனைகளால் கவரப்பட்ட ஒரு பரிசேயர். புனித யோவான் நற்செய்தியின் மூன்றாவது அதிகாரத்தில் நிக்கோதேமு இரவில் இயேசுவைத் தேடிவந்த முதல் சீடர்களில் ஒருவராக உள்ளார். எருசலேமில், தலைமைக் குருக்களுக்கும் மற்றும் இதர பரிசேயர்களுக்கும் அஞ்சாமல், துணிவுடன் உணமையை பேசினார். விசாரனை இன்றி தீர்ப்பு என்பது தவறு என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். இயேசுவுக்காக அதிகாரிகள் முன் பரிந்து பேசுகிறார்.
நிக்கொதேமு பெரும் சவாலை எதிர்கொள்கிறார். அவர் துணிவோடு உண்மையை உரைக்கிறார். உண்மைக்குச் சாட்சியம் பகிர்வதே உன்னத சீடத்துவம் என்பதற்கு இவர் சிறந்த முன்மாதிரி.
நிக்கோதேமுவின் நம்பிக்கை பயணம் முதலில் இயேசுவையும் அவருடைய போதனைகளையும் பற்றி ஆர்வமாக இருப்பதன் மூலம் தொடங்குகிறது. இதன் விளைவாக ஒருநாள் அவர் இருளில் வந்து கிறிஸ்துவின் ஒளியை அனுபவிக்கிறார் (யோவான் 3). பின்னர் இயேசு ஆண்டவர், மெசியா என்று ஏற்கிறார்.
நிறைவாக இயேசுவுக்காக சாட்சியம் பகர்கிறார். இயேசுவின் மரணத்திற்குப் பிறகு நிக்கோதேமு செய்தது போல், நமது சாட்சியம் பகர அழைக்கப்பட்டிருக்கிறோம். முதல் வாசகத்தில் எரேமியாவுக்கு எதிராக மக்கள் திரண்டபோதும், அவர் மருளவில்லை. நற்செய்தியில், தீயவர்கள் மத்தியில் நிக்கோதேமு தனித்து நின்றதோடு, இயேசுவின் பக்கம் நின்றார்.
இவர்களைப் போல், இயேசுவின் மீதான நமது நம்பிக்கையை வெளிப்படையாகவும் தைரியமாகவும் வெளிப்படுத்துவோரே உணமை சீடர். நாம் எப்போதும் உண்மையின் பக்கம் நிற்க வேண்டும் என்பதை நிக்கோதேமு இன்று கற்பிக்கிறார்.
இறைவேண்டல்.
‘அஞ்சாதீர்’ என்று சீடர்களைத் திடப்படுத்திய ஆண்டவரே, நிக்கோதேமுவைப் போல் உண்மைக்குக் குரல்கொடுக்கும் சீடராக என்னை காத்தருள்வீராக. ஆமென்.
ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
