சீடத்துவத்தில் நிமிர்ந்து நில், தொடர்ந்து செல்| ஆர்.கே. சாமி | VeritasTamil

தவக்காலம் 4ஆம் வாரம் – வெள்ளி
சாலமோனின் ஞானம் 2: 1a, 12-22 யோவான் 7: 1, 2, 10, 25-30
சீடத்துவத்தில் நிமிர்ந்து நில், தொடர்ந்து செல்...
முதல் வாசகம்.
சாலமோனின் ஞான நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம், கடவுள் மீது நம்பிக்கை அற்றவர்கள், இறைவன் மீது நம்பிக்கை கொண்டு வாழ்ந்ரோருக்கு எதிராகச் சூழ்ச்சி செய்வது பற்றி நமக்கு விவரிக்கிறது.
கடவுள் மீது நம்பிக்கை அற்றவர்கள் இறைவன்மீது பற்றுக் கொண்டவர்களுக்கு எதிராகச் செய்த தீச்செயல்களையும் பாவங்களையும் கடிந்துகொண்டார். இதனால் கடவுள் மீது நம்பிக்கை அற்றவர்கள் இறைப்பற்று உள்ளவர்களை அழிக்க விழைகிறார்கள். இத்தகைய பாதகச் செயல்களைச் செய்யத் துணிவோர் நல்லவர்களுக்கு கடவுளின் கைம்மாறும் பாதுகாப்பும் உண்டு என்பதை அடியோடு மறந்துவிட்டனர் என்பதை இந்த ஞானநூல் விவரிக்கிறது.
நற்செய்தி.
இன்றைய நற்செய்தியில், இயேசுவைக் கொல்ல சதி நாச வேலைகள் ஏற்பாடாக இருந்த இக்காலக் கட்டத்தில், யூதர்களின் கூடார விழா அண்மையில் நிகழவிருந்தது. தம் உற்ற சீடர்கள் திருவிழாவிற்குப் போனபின் இயேசுவும் வெளிப்படையாக அன்றி மறைவாகச் சென்றார் என்று யோவான் குறிப்பிடுகிறார்.
எருசலேமில், இறுதியில் அவர் வெளிப்படையாகப் பேசுகிறார். அவர், “நானாக வரவில்லை. என்னை அனுப்பியவர் உண்மையானவர். அவரை உங்களுக்குத் தெரியாது. எனக்கு அவரைத் தெரியும். நான் அவரிடமிருந்து வருகிறேன். என்னை அனுப்பியவரும் அவரே” என்றார்.
இதைக் கேட்ட அவர்கள் இயேசுவைப் பிடிக்க முயன்றார்கள். ஆனாலும், மானிடமகன் பாடுகள் ஏற்று மாட்சியுறும் நேரம் இன்னும் வராததால் யாரும் அவரைக கைது செய்யவில்லை என யோவான் மேலும் சுட்டிக்காட்டுகிறார்.
சிந்தனைக்கு.
இன்னும் இரு வாரங்களில், புனித வாரத்தில் காலடி வைக்கவுள்ளோம். இதன் மூலம் இந்த தவக்காலத்தின் நிறைவுக்கு வருவோம். இந்நிஐயில், இன்றைய நற்செய்தியில் இயேசு மீண்டும் எருசலேம் புனித நகரத்திற்குச் செல்கிறார். ஏனெனில் எருசலேம் அவரது பாடுகளின் மற்றும் மரணத்தின் இலக்காக உள்ளது. மேலும், அது கூடாரப் பெருவிழாவாகும்.
எகிப்திலிருந்து வெளியேறிய பிறகும், வாக்களிக்கப்பட்ட நாட்டை நோக்கிப் பயணித்தபோதும் யூதர்கள் பாலைநிலத்தில் அலைந்து பயணித்ததையும் இந்த கூடார விழா நினைவுகூர்கிறது. எனவே, இது பாஸ்கா பெருவிழாவுக்கு அடுத்த பெருவிழாவாகக் கருதப்படுகிறது. யூதர்கள் திரளாக ஒன்றுகூடுவர். இயேசுவும் இக்கூட்டதில் ஒருவராக இன்று உள்ளார்.
இந்த இரு வாசகங்களையும் பற்றி நான் சிந்திக்கும்போது, உண்மையிலேயே நீதிமானும், கடவுளின் உண்மையான மகனுமான இயேசுவை மக்கள் எவ்வாறு எதிர்கொண்டார்கள் என்பது பற்றி சிந்திக்கிறேன். அவரே ஒளியும் உண்மையுமாக இருப்பதால், இருளிலும் பொய்யிலும் உழல்பவர்கள் ஒளியையும் உண்மையையும் அழிக்க நினைக்கிறார்கள். உண்மையை ஒழிக்க முடியுமா? துன்மார்க்கம், இருள் மற்றும் பொய்களின் வழியிலிருந்து மாறுவதற்குப் பதிலாக, அவர்கள் நீதிமானை ஒழிக்க முயற்சிக்கிறார்கள்.
இயேசு இச்சூழ்ச்சியை அறிந்திருந்தும் எருசலேமுக்கு வந்தார். அவரது முடிவு அவருக்குத் தெரியும். அஞ்சா நெஞ்சராக அங்கும் கூட்டத்தில் பேசினார்.
அவரைப் போல் நாம் ஏன் பயப்படக்கூடாது? என்ற கேள்வி நம்மில் எழ வேண்டும். நாம் கடவுளால் மீட்கப்பட்டிருக்கிறோம். ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ‘கிறிஸ்துவின் சிலுவை மற்றும் உயிர்த்தெழுதலின் ஆற்றலானது, மனிதன் பயப்படக்கூடிய அல்லது பயப்பட வேண்டிய எந்த தீமையையும் விட ஆற்றல் மிக்கது’. ‘அஞ்சாதீர்’ என்று நம்மைத் திடப்படுத்தியவரும் அவரே
உண்மை சீடத்துவம் என்பது, கோழைகளுக்கு உரியதல்ல. இயேசுவின் எடுத்துக்காட்டான வாழ்வும் செயலும், நம் உண்மைக்குச் சாட்சிகளாக வாழ கற்றுக்கொடுக்கிறது. ‘நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார்’ (திபா. 33:20) என்பதை நாம் ஏற்று வாழ்ந்தால் நமது சீடத்துவம் ஆற்றல் பெறும். ‘அஞ்சி அஞ்சி சாவார்-இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே’ என்று மகாகவி பாரதியார் பாடிய வரிகள் நமக்குப் பொருந்தாது.
இறைவேண்டல்.
நற்செய்தியை அறிவிப்பதற்காக, எதிர்ப்பு, துன்பம் மற்றும் மரணத்தை எதிர்கொள்ளத் தயாரான ஆண்டவரே, உமது முன்மாதிரியில் எனது சீடத்துவ வாழ்வு உறுதிபெற அருள்புரிவீராக. ஆமென்.
ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
