இயேசுவே நம் ஆண்டவர் என்று எங்கும் எங்கும் வாயாற அறிக்கையிடுவோம்!| ஆர்.கே. சாமி | VeritasTamil

                                                                                            
தவக்காலம் 4ஆம் வாரம் – வியாழன்

விடுதல்பை பயணம் 32: 7-14                                                                          

யோவான்  5: 31-47

இயேசுவே நம் ஆண்டவர் என்று எங்கும் எங்கும் வாயாற அறிக்கையிடுவோம்!

முதல் வாசகம்.

கடவுளை அடுத்து,  இன்றைய வாசகங்களில் பொதுவான நபராக இருப்பவர்   மோசே.  இஸ்ரயேலரை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து வழிநடத்தியவராக மட்டுமல்லாமல், கடவுள் அவர்களின் துரோகத்திற்காக  தண்டிக்க விரும்பியபோது அவர்களுக்காகக் கடவுளிடம் பரிந்து பேசும் நல்ல தலைவராகவும் மோசே விளங்கினார்.  
விடுதலைப் பயண நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், மோசே சீனாய் மலைக்குச் சென்ற வேளையில், மலைக்கு கீழே இருந்த மக்கள் பொன்னாலான கன்றுக்குட்டியைச் செய்து அதை வழிபட்டனர்.  கடவுள் அவர்களைக் தண்டிக்க வழையும் வேளையில்   மோசே அவரிடம், “நீர் அவர்களை அழித்துவிட்டால், எகிப்தியர்கள், ‘இஸ்ரயேலரை அழித்தொழிக்கத்தான் அவர்களுடைய கடவுள் அவர்களை இங்கிருந்து கூட்டிக்கொண்டு போனாரோ’ என்று பேசுவார்கள் என்பதையும் ஆபிரகாமிடம் அவர், ‘இஸ்ரயேல் மக்களைப் பெரிய இனமாக்குவேன்’ என்று உடன்படிக்கை செய்ததையும் எடுத்துக்கூறி, இஸ்ரயேல் மக்களுக்கு அவர் கொடுக்க இருந்த தண்டனையிலிருந்து தப்புவிக்கின்றார்.

நற்செய்தி.

இன்றைய நற்செய்தியிலும்  இயேசு மோசேயைப் பற்றிப் பேசுகிறார். இந்த முறை, விசுவாசமற்றவர்களின் சார்பாக மோசே பேசவில்லை, மாறாக இயேசுவை நம்பாதவர்களைக் கண்டிக்க வேண்டும் என்று துடித்த நம்பிக்கையற்ற மக்களிடம் இயேசு:   நீங்கள் மோசே மீது நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள். நீங்கள் மோசேயை நம்பினால், நீங்கள் என்னை நம்புவீர்கள், ஏனென்றால் அவர் என்னைப் பற்றி எழுதினார். ஆனால் அவர் எழுதியதை நீங்கள் நம்பவில்லை என்றால், நான் சொல்வதை எப்படி நம்ப முடியும்?” என்ற கேள்வியை முன்வைக்கிறார். 

சிந்தனைக்கு.

முதல் வாசகத்தில், தங்களை மீட்டு வந்த கடவுளுடனான தங்கள் உறவைப் பற்றிய தெளிவான புரிதலை வளர்த்துக் கொள்ள மக்களுக்கு நேரம் இல்லை. அவர்கள் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். அடுத்த 40 ஆண்டுகளில் மோசே அவர்களுக்குக் கொடுக்கும் அனைத்து போதனைகளையும் கட்டளைகளையும் அவர்கள் இன்னும் கேட்கவில்லை. மலைமீது சென்ற மோசே இன்னும் திரும்பி வரவில்லை. 

கடவுள் காப்பாற்றினார் என்ற மகிழ்ச்சியில் எகிப்தில் அவர்கள் வழிபட்டதைப்போல் கடவுளுக்கு உருவம் கொடுத்து சிலைவழபாட்டில் ஈடுபடுகின்றனர். கடவுளுக்கு அவர்கள் கொடுத்த உருவமோ பொன்னால் செய்யப்பட்ட கன்றுக்குட்டி. 

ஆனால் அவர்கள் கடவுள் யார் என்பதை தவறாகப் புரிந்துகொண்டார்கள்.  எனவே, அவர்களின் தவற்றை உணர்ந்தவராக மோசே அவர்கள் மன்னிக்கப்பட கடவுளிடம் மன்றாடுகிறார். இந்த மக்கள் உண்மை கடவுளை அறியாதவர்கள் எனவே, மோசே அவர்கள் மீது இரக்கம் காட்டுகிறார். அவர்களுக்காக கடவுளிடம் மன்னிப்புக்குப் பரிந்து பேசுகிறார்.

ஆனால், இன்றைய நற்செய்தியில் இயேசு பேசும் மக்களோ, மோசே கொடுத்த கடவுளின் கட்டளைகளை, திருச்சட்டங்களைப் பல வருடங்களாகக் கற்றவர்கள்  .உண்மை கடவுளுடன்  உறவை வளர்த்துக் கொள்ள அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. அவர்களோ, கண் இருந்தும் குருடராக இருந்தனர். இயேசுவே வாக்களிக்கப்பட்ட மீட்பர் அல்லது மெசியா என்பதை அறிந்துணர உள்ளம் மங்கிப்போனவர்கள். 

இயேசுவே மேசியா என்பதை உறுதிப்படுத்த  மூன்று வகையான சாட்சியங்கள் இருந்தன. அவை: 
1)    அவருடைய "வல்ல செயல்கள்".
2) திருமுழுக்கு யோவானின்  சாட்சியம்  (யோவான் 1:19) 
3) மறைநூலில் அவரைக் குறித்து  முன்னறிவிக்கப்பட்ட இறைவாக்கு செய்திகள். 

நாமும் மேற்கண்ட முன்று சாட்சியங்களையும் மனதில்கொண்டு, இயேசுவில் கொண்ட நம்பிக்கையில் உறுதிபெற அழைக்கப்படுகிறோம். இத்தவக்காலப் பயணம் நம்மை நம்பிக்கை வாழ்வில் வேரூன்ற அழைக்கிறது. மோசேயுவைப்போல நமக்காக தந்தையிடம்  பரிந்துபேசும் இணைப்பாளராக ஆண்டவர் இயேசு உள்ளார். 

ஆனால், இன்றும் பலர்  தங்களை "கிறிஸ்தவர்கள்" என்று அழைத்துக் கொண்டு, அழைப்புக்கேற்ற வாழ்வு வாழ்வதில்லை. இயேசுவுடனான  நமது உறவில் நாம் உண்மையிலேயே வளர விரும்பினால், நம் வாழ்க்கையிலும் மற்றவர்களின் வாழ்க்கையிலும் தூய ஆவியாரின்  இயக்கத்திற்கு நாம் மனம் திறக்க வேண்டும்,  சில வழிகளில் நாம் நமது  நம்பிக்கை மற்றும் கடவுள் பற்றிய புரிதலில் மிகவும் குறுகிய மனப்பான்மை கொண்டவர்களாக உள்ளோம்.   எனவேதான், அன்று ‘மனிதர் தரும் பெருமை எனக்குத் தேவையில்லை. உங்களை எனக்குத் தெரியும். உங்களிடம் இறையன்பு இல்லை’ (யோவான் 5:41) என்று இயேசு கூறினார்.

‘நான் என் தந்தையின் பெயரால் வந்துள்ளேன். ஆனால் என்னை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை’ என்று இயேசு கூறியது இன்று நமக்கும் பொருந்தும். இயேசுவின் வார்த்தையிலும் அழைப்பிலும் நமது மனநிலை என்ன என்பதை சிந்திப்போம்.   ‘இயேசு ஆண்டவர்’ என வாயார அறிக்கையிட்டு, இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என நீங்கள் உள்ளூர நம்பினால் மீட்புப் பெறுவீர்கள்’ (உரோ 10:9) என்ற பவுல் அடிகளின் அறைக்கூவலில் நம்பிக்கை கொள்வோம். 


இறைவேண்டல்.

ஆண்டவராகிய இயேசுவே, தந்தையை நோக்கிச் செல்லும் பாதையில் நான் தவறும்போது,  நீர் எனக்காகப் பரிந்து பேசி என்னை தந்தையோடு இணைக்க விழைவதற்காக உமக்கு நன்றி கூறுகிறேன். ஆமென். 

ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452