ஆண்டவரே நம் தாகம் தீர்க்கும் நீரூற்று!| ஆர்.கே. சாமி | VeritasTamil
தவக்காலம் 4ஆம் வாரம் – செவ்வாய்
எசேக்கியேல் 47: 1-9, 12
யோவான் 5: 1-3a, 5-16
ஆண்டவரே நம் தாகம் தீர்க்கும் நீரூற்று!
முதல் வாசகம்.
நீர், வாழ்க்கையின் அடிப்படை. நீரால் அழிக்கவும் முடியும், உயிரைக் கொடுக்கவும் முடியும். இன்றைய நமது வாசகங்களில் நீர் மையப் பொருளாக உள்ளது.
இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து எடுக்கப்பட்ட முதல் வாசகத்தில், இறைவாக்கினர் எசேக்கியேல் ஒரு காட்சி காண்கின்றார். அக்காட்சியில் ஒரு மனிதர் அவரை எருசலேம் திருக்கோவிலுக்குக் கூட்டிச் செல்கின்றார். அங்கு ஆலயத்தின் தூயகத்திலிருந்து தண்ணீர் எல்லா இடங்களுக்கும் பாய்ந்தோடுகிறது. அது பாய்ந்தோடும் இடங்களில் எல்லாம் மரம், செடிகொடி தாவரங்கள் செழித்து வளர்ந்ததோடு மிகுந்த பலன் கொடுக்கின்றன. அதனால் உயிரினங்களும் பசி பட்டினி இன்றி வாழ்கின்றன.
நிறைவாக, அந்த தண்ணீர் உப்புக் கடலில் கலக்கும்போது நல்ல தண்ணீராக மாறுகின்றது. இவ்வாறு ஆலயத்தின் தூயகத்திலிருந்து வரும் அந்தத் தண்ணீர் எல்லா உயிரினங்கள் வாழ்வதற்குக் காரணமாக இருக்கின்றது என்று எசேக்கியேல் விவரிக்கிறார்
நற்செய்தி.
இயேசு ஒரு முக்கியத் திருவிழாவில் கலந்துகொள்வதற்கு எருசலேமிற்குச் செல்கிறார். அங்கு முப்பத்தெட்டு ஆண்டுகளாய்ப் படுத்தபடுக்கையாய்க் கிடந்த ஒருவரை கண்டு, அவரிடம், “நலம் பெற விரும்புகிறீரா?” என்று கேட்கின்றார். அந்த மனிதர் இயேசு கேட்ட கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்லாவிட்டாலும், “தண்ணீர் கலங்கும்போது என்னைக் குளத்தில் இறக்கிவிட ஆள் இல்லை” என்று மறைமுகமாகச் சொல்லி, “ஆம், நான் நலம்பெற விரும்புகிறேன்” என்று சொல்லாமல் சொல்கின்றார்.
அப்பொழுது இயேசு அவரிடம், “படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்து செல்லும்” என்று சொல்லி அவரை குணப்படுத்தியதாக யோவான் குறிப்பிடுகிறார்.
சிந்தனைக்கு.
இந்த தவக்காலத்தில் பயணிக்கும்போது, நமது திருமுழுக்கை நினைவுகூர அழைக்கப்படுகிறோம். திருமுழுக்கு என்றாலே, அதில் அடங்கியிருக்கும் உயிர் கொடுக்கும் மற்றும் குணப்படுத்தும் தண்ணீரை மறக்க இயலாது. திருமுழுக்கு என்பது தண்ணீரில் "முழுகுதல்" என்று பொருள்படும். நாம் திருமுழுக்குப் பெறும்போது, நாம் மரணத்தில் "முழுகுகிறோம்" - நமது பழைய பாவ வாழ்வில் மரணம், நமது முந்தைய வாழ்க்கை முறையில் மரணம் ஆகியவை இயேசுவின் மரணத்துடன் இணைக்கப்பட்டு, நீரில் இருந்து வெளியே வரும்போது, நாம் புதிய வாழ்க்கைக்கு - உயிர்த்தெழுந்த ஆண்டவருடனான தூய வாழ்க்கைக்கு - எழுப்பப்படுகிறோம்.
எனவே, நாம் நமது தவக்காலப் பயணத்தைத் தொடரும்போது, நமது சொந்த திருமுழுக்கையயொட்டி சிந்திக்க நேரம் ஒதுக்க வேண்டும். நமது திருமுழுக்கினால், நாம் இயேசுவின் சீடத்துவத்தில் பங்கேற்பதோடு, மற்ற நம்பிக்கையாளர்களுடன் நம்மை ஒன்றிணைத்துக் கொள்கிறோம். இவ்வாறு நாளுக்கு நாள் திருஅவை வளர்ச்சியுறுகிறது. திருமுழுக்கு நீரில் இருந்து பாயும் ஆற்றல் நம்மை விட்டு குறையா வண்ணம் அதை நாம் பாதுகாக்கவும் வேண்டும். அதற்கு நல்ல ஒப்புரவு அவசியம்.
முதல் வாசகத்தில், எசேக்கியேல் இறைவாக்கினரின் காட்சியில் கோவிலில் இருந்து புறப்பட்ட நீர் இறுதியில் அனைத்தையும் தூய்மைப்படுத்தியதைப்போல், நமது திருமுழுக்கு நீர் நம்மை தூய்மைப்படுத்தும் நீராக நம்மில் பாய்ந்துகொண்டே இருக்க வேண்டும். அது ஒருநாள் விண்ணகம் எனும் தூய கடலில் நம்மை கொண்டு சென்று சேர்க்கும்.
நற்செய்தியில், முப்பதெட்டு ஆண்டுகளாய்ப் படுத்தபடுக்கையாய்க் கிடந்த மனிதருக்கு இயேசு அவரிடம் இரக்கம் காட்டுகிறார். இயேசு அந்த மனிதரைக் குணப்படுத்தி, ஓய்வுநாளில் மொசே சட்டத்தால் தடைசெய்யப்பட்ட பல வகை வேலைகளில் ஒன்றான அவனது படுக்கையை எடுத்துக்கொண்டு நடக்கச் சொன்னார். இயேசு அவரைக் குளத்தில் இறக்கிவிட்டு நலம்பெறச் செய்யவில்லை. “படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்து செல்லும்” என்று சொல்லியே நலமளிக்கின்றார். ஏனெனில் அவரே நன்மைகளின் ஊற்றாகவும், வாழ்வின் ஊற்றாகவும் உள்ளார். அவரே தாகம் தீர்க்கும் நீர்.
ஆகவே, ‘யாரேனும் தாகமாயிருந்தால் என்னிடம் வரட்டும்’ (யோவா 7: 37) என்ற இயேசுவின் அழைப்பை ஏற்று அவரை நாடுவோம்.....நலம் பெறுவோம்.
இறைவேண்டல்.
‘நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை’ என்றுரைத்த ஆண்டவரே, உமதுடனான எனது உறவைப் புதுப்பிக்க எனக்கு இந்த தவக்காலம் உதவுவதாக அமையட்டும். ஆமென்.
ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452