போலியை இனங்கண்டு, உண்மையில் வேரூன்றுவோம்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

26 ஜூன் 2024
பொதுக்காலம் 12ஆம் வாரம் - புதன்
2 அரசர் 22: 8-13; 23: 1-3
மத்தேயு 7: 15-20
போலியை இனங்கண்டு, உண்மையில் வேரூன்றுவோம்!
முதல் வாசகம்.
கி.மு. ஏழாம் நூற்றாண்டின் இறுதியில், தலைமைக் குரு இலக்கியா கடவுளின் இல்லமான ஆலயத்தில் ஒரு சட்ட நூலைக் கண்டெடுத்தார். அது எழுத்தன் சாப்பான் என்பவன் வழியாக அரசர் யோசியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அரசர் யோசியா யூதா நாட்டின் மிகச் சிறந்த அரசர்களுள் ஒருவர் எனப் போற்றப்பட்டவர்.
கண்டெடுக்கப்பட்ட அந்நூலை வாசித்த யோசியாவும் மக்களும் கடவுளின் கட்டளைகளைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தனர். அவர்களுடைய கடவுள் அவர்களை எவ்வளவு அன்பு செய்கிறார் என்பதை அறிந்து உச்சிக் குளிர்ந்தனர்.
கடவுள் அவர்களுடன் நல்லுறவிலும் நல்லிணக்கத்தோடும் இருக்க விரும்புகிறார் என்பதை அரசனும் மக்களும் உணரத்தொடங்கி, முன்னோர்களின் பாவத்திலிருந்து விடுபட முனைந்தனர். தொடர்ந்து, யோசியா அந்நிய தெய்வங்களின் பலிபீடங்களை இடித்து நாட்டைத் தூய்மைம்படுத்தினான்.
நற்செய்தி.
நற்செய்தியில், போலி இறைவாக்கினர்களின் வலைவிரிப்புப் பற்றி இயேசு தம் சீடர்களை எச்சரிக்கிறார். இயேசு தம்மைப் பின்பற்றுபவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும், நேர்வழியில் வழிநடத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறார். போலி இறைவாக்கினர்கள் பசுத்தோல் போர்த்திய புலிகள் என்று இயேசுவால் சித்தரிக்கப்படுகிறார்.
தொடர்ந்து, முட்செடிகளில் திராட்சைப் பழங்களையோ, முட்பூண்டுகளில் அத்திப் பழங்களையோ பறிக்க முடியுமா? நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும். கெட்ட மரம் நச்சுக் கனிகளைக் கொடுக்கும என்று அவரவர் செயலைக்கொண்டே நல்லவர் கெட்டவர் என அடையாளம் கண்டுகொள்ளலாம் என்கிறார்.
சிந்தனைக்கு.
எந்தப் புற்றில் எந்த பாம்பு இருக்கும் என்று கண்டுபிடிப்பது கடினம். ஏனெனில் பாம்புகள் பார்ப்பதற்கு ஒரே மாதிரி தோன்றும். அவ்வாறே வெளுத்ததெல்லாம் பால் என்று ஏமாந்து போவோரும் பலர். இதுதான் உலகம். அது தீயோர் கையில் சிக்கித் தவிக்கிறது. ஆகவே, போலிகள் மத்தியில் விழிப்பாக இருக்க ஆண்டவர் எச்சரிக்கிறார்.
நமது வாழ்க்கையின் எல்லாச் சூழ்நிலைகளிலும் விழிப்புத் தேவை. விழிப்பு என்பது வரவிருக்கும் ஆபத்துக்களிலிருந்து தப்பிப்பதற்கு உதவும். நாம் விழிப்பாயில்லாமல் போறுப்பற்ற வாழ்வு வாழந்தோமானால், யாரை விழுங்கலாம் என்று சுற்றித்திரியும் அலகையின் வலையில் சிக்குவோம்.
‘அறிவுத் தெளிவோடு விழிப்பாயிருங்கள். உங்கள் எதிரியாகிய அலகை யாரை விழுங்கலாமெனக் கர்ச்சிக்கும் சிங்கம்போலத் தேடித் திரிகிறது. அசையாத நம்பிக்கை கொண்டவர்களாய் அதனை எதிர்த்து நில்லுங்கள்’ (1பேதுரு 5:8-9) என்றும் அலகையின் சூழ்ச்சிக்கு எதிராக நாம் எச்சரிக்கப்பட்டு வருகிறோம்.
அன்றுபோல் இன்றும் போலி போதகர்கள் மலிந்துவிட்டனர். இவர்கள் எப்பொழுதும் மிகவும் ஏமாற்றுப் பேர்வழிகள். கெட்டதை நல்லதாகக் காட்டுவதில் வல்லவர்கள். இன்று, இயேசு முன்வைக்கும் படிப்பினையைக் கவனத்தில் கொண்டால் அவரது தலைச் சிறந்த சீடர்களாக வாழ முடியும்.
இயேசுவின் சீடர்களாக இருக்கும் நமக்கு முன்னால் ஒரு சவாலை வைக்கிறார். ஆம், அத்துதான், போலி இறைவாகினர்களை அடையாளம் கண்டு விலகிச் செல்வது. இன்று, நம் வீடுகளைத் தட்டி, நமது வழிபாடும், வாழ்கை முறையும் முற்றிலும் தவறு என்று போதிக்கும் எல்லாம் தெரிந்த ‘கிறிஸ்தவர்கள்' நமது குடும்பங்களிலும் உள்ளனர். உலகிற்கு நற்செய்தி அறிவித்து மனமாற்றம் செய்வதை விடுத்து, குறுக்கு வழியில் திருமுழுக்குப் பெற்ற கிறிஸ்தவர்களுக்கு வலைவிரித்து ஆள் சேர்க்கும் போலி போதகர்கள் முதலில் மனமாற வேண்டும். இவர்களையொட்டி எற்கனவே, இயேசு ‘பல போலி இறைவாக்கினர் தோன்றிப் பலரை நெறிதவறி அலையச் செய்வர்’ (மத்தேயு 24:11) என்ற படிப்பினையைத் தந்துள்ளார்.
முதல் வாசகத்தில், அரசன் யோசியா உண்மையைக் கண்டறிந்து, தம் மக்களை கடவுள் பக்கம் திசைத்திருப்பி, நன்னெறியில் வாழ வைத்தான். யூதேயாவைக் காப்பாற்றி, நற்கனி தரும் மக்களை உருவாக்கினான். நமக்கு நல்ல முன்மாதிரி இவர் என்றால் மிகையாகாது.
ஒருவன் முட்டாள் தனமாக ஒரு செயலைச் செய்யும் போது நாம் கேட்கும் முதல் கேள்வி, ‘உனக்கு அறிவிருக்கா? என்பதாகும். போலி போதகத்திற்கு செவிசாய்த்து வழி தவறினால், ‘உனக்கு அறிவிருக்கா? எனும் கேள்வி நமக்கும் பொருந்தும். சிந்தித்துச் செயல்படுவோம்.
இறைவேண்டல்.
போலிகளை இனங்கண்டு வாழ அழைக்கும் என் ஆண்டவரே, எந்நாளும் உமது அழைப்புக்கும் படிப்பினைக்கும் ஏற்ப உம் திருஅவையில் நற்கனி தரும் சீடராக வாழ எனக்கு உதவுவீராக. ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
