நம் அதிகாரத்தை பிறரின் நல்வாழ்வுக்காக பயன்படுத்துகிறோமா? | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

பொதுக்காலம், வாரம் 1 செவ்வாய் (09.01.2023) 
I: 1 சாமு: 1: 9-20
II:1 சாமு 2: 1. 4-5. 6-7. 8
III: மாற்: 1: 21-28

அதிகாரம் என்பது பிறரை அடக்கி ஆள அல்ல ; மாறாக, பிறருடைய வாழ்வை உயர்த்துவதற்காக. பல நேரங்களில் நமக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரங்களை சுயநலத்தோடு பயன்படுத்தி வருகிறோம். உலகத் தலைவர்களும் நாட்டு தலைவர்களும் தங்களுடைய  அதிகாரத்தைப் பயன்படுத்தி பிற நாட்டு மக்களையோ அல்லது தன் நாட்டு மக்களையோ அடக்கி ஆளக்கூடியவர்களாக இருக்கின்றனர். இது மற்றவர்களுக்கு பெரும்பாலும் துன்பத்தைத் தருமே ஒழிய, நலவாழ்வைத் தராது.

நம்முடைய வாழ்வும் அதிகாரமும் பிறருக்கு நல்ல வாழ்வைத் தர வேண்டுமென்றால், ஆண்டவர் இயேசுவின் பாதையில் பயணிக்க வேண்டும். ஆண்டவர் இயேசு தந்தையாம் இறைவனிடமிருந்து பெற்ற  அதிகாரத்தைப் பிறரின் நலவாழ்வுக்காக முழுமையாகப் பயன்படுத்தினார். இயேசுவும் சீடர்களும் கப்பர்நாகும் என்ற ஊரில் நுழைந்தார்கள். அங்கு ஓய்வுநாளில் இயேசு தொழுகைக் கூடத்தில் சென்று கற்பித்து வந்தார். இயேசுவினுடைய போதனையைக் கேட்டு அனைவருமே வியப்பில் ஆழ்ந்தார்கள். அதுவும் மறைநூல் அறிஞரைப் போலன்றி மிகுந்த அதிகாரத்தோடு போதித்தார்.

மறைநூல் அறிஞர்கள் போதிக்கும் பணி செய்வதற்காகவே சிறப்பாக கல்வி பயின்றவர்கள். ஆனால் அவர்கள் போதித்த போதனை மக்களிடம் நேர்மறையானத் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஏனெனில் அவர்கள் மறைநூலை அறிவார்ந்த முறையில் படித்து கற்பித்தார்கள்.  ஆனால் இயேசுவோ மறைநூலின் வார்த்தைகளை உள்ளூர உணர்ந்து  தான் பெற்ற இறை அனுபவத்தையும் இணைத்து  மறைநூலை விளக்கிக் கூறினார். எனவே அதிகாரத்தோடு போதிக்க முடிந்தது.

யாருடைய உள்ளத்தில் உண்மை,  நீதி, நேர்மை,  போன்ற உயரிய பண்புகள் இருக்கிறதோ, அவர்களிடத்தில் தான் நல வாழ்வுக்கு வழிகாட்டும் அதிகாரத்துவ மனநிலை இருக்கும். மேற்கூறிய பண்புகள் யாரிடத்தில் இல்லையோ அவர்களிடத்தில் ஆதிக்கம் செலுத்தும் அதிகார மனநிலை மட்டுமே இருக்கும்.

இன்றைய முதல் வாசகத்தில் ஏலி இறைவாக்கினர் அன்னாவின் கண்ணில் நிறைந்த ஜெபத்தை அறிந்து கொண்டபின்,  கடவுளின் பெயரால் அவருக்கு ஆசீர் வழங்கினார். எனவே அன்னா சாமுவேலை குழந்தையாக பெருமளவுக்கு அந்த ஆசீர் கொடையாக அமைந்தது. ஆண்டவர் இயேசுவும் தான் பெற்ற அதிகாரத்தை முழுமையாக பிறருடைய நல்வாழ்வுக்காகப் பயன்படுத்தினார். தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி தீய ஆவிகளை ஓட்டினார். ஆதிக்கம் செலுத்திய அதிகார வர்க்கத்தினரை கேள்விக்கு உட்படுத்தினார். அதிகாரத்தைப் பயன்படுத்தி நோய் நொடிகளைக் குணமாக்கினார். அதிகாரத்தைப் பயன்படுத்தி அனைவரும் மனம்மாறி நற்செய்தியை நம்பிட அழைப்பு விடுத்தார். அதிகாரத்தைப் பயன்படுத்தி சமூகத்தில் அடையாளம் காணப்படாதவர்களை உலகிற்கு அடையாளம் காட்டினார்.

அதிகாரம் என்பது பிறரை அடக்கி ஆள அல்ல ; பிறருக்கு வாழ்வு கொடுக்கக் கூடிய உன்னதமான கொடை. எனவே நம்முடைய அன்றாட வாழ்வில் ஆண்டவர் இயேசுவைப் போலவும் இறைவாக்கினர் ஏலியைப் போலவும் நம்முடைய அதிகாரத்தைப் பிறரின் நல்வாழ்வுக்காக பயன்படுத்துவோம். அதற்குத் தேவையான அருளை வேண்டுவோம்.

இறைவேண்டல்
தாயும் தந்தையுமான இறைவா!  எங்களுடைய அன்றாட வாழ்வில் அதிகாரத்தைப் பயன்படுத்தி பிறரை அடக்கி ஆளாமல், பிறருக்கு நல வாழ்வை  கொடுக்கும் நல்ல மனநிலையைத் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை  பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்