இயேசுவின் பக்தராக அல்ல, சீடராக வாழ்வோம்!| ஆர்.கே. சாமி | VeritasTamil
திருவருகைக்காலம் முதல் வாரம் -வெள்ளி
எசாயா 29: 17-24
மத்தேயு 9: 27-31
இயேசுவின் பக்தராக அல்ல, சீடராக வாழ்வோம்!
முதல் வாசகம்.
ஏசாயா இறைவாக்கினரின் வழியாக, கடவுள் அடுத்து நிகழவுள்ள பெரிய மாற்றங்களை வாக்களிக்கிறார்: "பார்க்க முடியாத கண்கள்" மற்றும் "கேட்க முடியாத காதுகள்" என்ற உருவகங்கள் கடவுளின் உண்மையை உணரவும் அவருடைய எச்சரிக்கைகளுக்கு செவிசாய்க்கவும் மக்களின் ஆன்மீக இயலாமையைக் குறிக்கிறது.
கடவுளின் தலையீடு:
கடவுள் அவர்களின் ஆன்மீகத் தடைகளை அகற்றி, கடவுளின் தெய்வீகச் செயலைக் குறிக்கும் "அவர்களின் காதுகளைத் திறப்பார்" மற்றும் "அவர்களின் கண்களைத் திறப்பார்" என்று அறிவிக்கிறார்.
அவமானம் மற்றும் மாற்றம்:
இஸ்ரயேலரின் தற்பெருமை தாழ்த்தப்படும், மேலும் அவர்கள் கடவுளைச் சார்ந்திருப்பதை ஒப்புக்கொள்ள வேண்டிவரும், இது அவர்களின் கடவுள்ளுக்கு எதிரான நடத்தை மற்றும் அணுகுமுறையில் மாற்றத்திற்கு வழிவகுக்கும்.
எதிர்கால மறுசீரமைப்பு:
தாழ்த்தப்பட்டவர்களும் ஏழைகளும் மகிழ்ச்சியடைவார்கள் என்பது அவர்கள் அடையவிருக்கும் விடுதலை வாழ்வைக் குறித்து பேசுகிறது, மேலும், இது உண்மையிலேயே கடவுளைத் தேடுபவர்களுக்குப் புதுப்பிக்கப்பட்ட ஆன்மீக வாழ்க்கை மற்றும் மகிழ்ச்சியின் காலத்தை முன்னறிவிக்கிறது.
எசாயா நூலின் சூழலில், இஸ்ரேல் அசீரிய படையெடுப்பின் அச்சுறுத்தலை எதிர்நோக்கி இருந்தகாலம். இஸ்ரயேலர் கடவுளிடம் திரும்புவதற்குப் பதிலாக, அவர்கள் வெளிவேடமாகவே அவரை வழிபட்டனர். ஆனால், அவர்களுக்குத் தகுதியானதைக் கொடுக்காமல் இருக்கமாட்டார் என்று எசாயா உணர்த்துகிறார்
நற்செய்தி.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, பார்வையற்ற இருவரைக் குணப்படுத்துகின்றார். அவர்க்ள, “தாவீதின் மகனே, எங்களுக்கு இரங்கும்” என்று கத்திக்கொண்டே அவரைப் பின்தொடர்ந்து வந்தவர்கள். இயேசு, அவர்களின் முன் ஒரு கேள்வியை முன்வைக்கிறார். ஆம், “நான் இதைச் செய்ய முடியும் என நம்புகிறீர்களா?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “ஆம், ஐயா” என்றார்கள்.
அவர் அவர்களைக் குணப்படுத்திவிட்டு, “யாரும் இதை அறியாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்” என்று கண்ணிடிப்பாக் கூறினார் என்று மத்தேயு குறிப்பிடுகிறார். ஆனால், நலம்பெற்ற அவர்கள் தங்களின் மகிச்சியை, அவர்கள் பெற்ற விடுதலையை அவர்களுக்குள் பூட்டி வைத்துக்கொள்ள முடியவில்லை. உடனே, ஊர் மக்களோடுப் பகிர்ந்துகொள்கிறார்கள்.
சிந்தனைக்கு.
நற்செய்தியில் இயேசு குறிப்பிட்ட “யாரும் இதை அறியாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்” என்ற வார்த்தைகளை நாம் ஆழமாகச் சிந்திக்க அழைக்கப்படுகிறோம். முதலாவதாக, இயேசு பேருக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டு அவர்களைக் குணப்படுத்தவில்லை. நம்பிக்கையோடு தம் பின்னே ஓடி வந்தார்கள். அவர்தான் மெசியா, தாவீதின் வழிமரபினர் என்றறிந்து அவை அடையாளம் கண்டு கொண்டனர். இவை இரண்டும் இயேசுவுக்குள் ஏற்பட்ட மகிழ்ச்சியாகப் பார்க்கலாம்.
மற்றொன்று, பலருக்குத் தெரிய வந்தால், அது மக்கள் மத்தியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திவிடும் என்றும் இயேசு கருதியிருக்கலாம்.
இந்த இரண்டு கருத்துகளையும் நாம் சற்று ஆழமாக சிந்தித்துப் பார்ப்போம். இன்றைக்கு நம்மிலும் பலர் இருக்கிறார்கள். தங்கள் பெயரும் படமும் பத்தரிக்கைகளில் வெளிவர வேண்டும் என்பதற்காகவே நாலு பேர் அறிய நன்கொடை அளிப்பார்கள். இது முற்றிலும் பலன் எதிர்பார்த்து தேடும் சுய விளம்பரமாகும். கிறிஸ்துவின் சீடர்களான நமக்கு ‘வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியாதிருக்கட்டும்’ என்பதே இன்றியமையாதது. உதவி செய்வதில் ஆதாயம் எதிர்ப்பார்ப்பது மடமை.
முதல் வாசகத்தில், கடவுள் இஸ்ரயேலரின் ஆன்மீகத் தடைகளை அகற்றி, கடவுளின் தெய்வீகச் செயலை அறிந்தடவும் உணர்ந்திடவும் "அவர்களின் காதுகளைத் திறப்பார்" மற்றும் "அவர்களின் கண்களைத் திறப்பார்" என்று எசாயா அறிவிக்கிறார்.
எசாயாவின் வாக்கு நிறைவேறியதை நற்செய்தியில் கண்டோம். ஆனால், இங்கு இயேசு, தமது வல்ல செயல்கள் செய்துவிட்டு, அதன்வழியாக விளம்பரம் தேடவில்லை. ஆகவே, இயேசுவின் சீடர்கள் என்று பறைசாற்றிக்கொள்ளும் நமக்கு விளம்பரமற்ற நற்காரியங்கள் செய்வதே சிறந்தது.
இயேசுவை ஆண்டவர். மீட்பர் என்று அறிந்துகொள்வதும் அவரைப் போன்று பொதுநலன் கருதி பணி செய்வதும் திருஅவையின் உயர்ந்த பண்பாக இருக்க வேண்டும். பேருக்கும், புகழுக்கும் ஆசைப்பட்டு, தானம் செய்வதை விட, அன்போடும், இரக்கத்தோடும் தானம் செய்வதே உயர்ந்தது என்பதை நினைவில் கொள்வோம். இயேசுவே, சுய விளம்பரத்தை ஏற்காதபோது, நாம் ஏன், உலகப் புகழுக்கு ஆசைப்பட வேண்டும்.
இன்றும் நம்மில் பலர், ஊர் போற்ற வேண்டும் என்று ஊர் ஊராகத் திருவிழாக்களுக்கு ஓடுவதும், ஊர் மெச்ச வேண்டும் என்று பெருவிழாக்களைக் கொண்டாடுவதும் நம்மை வெறும் பக்தர்களாகவே படம்பிடித்துக் காட்டுகிறோமேயொழிய, இயேசுவின் உண்மை சீடர்காளக அல்ல. நாம் சீடர்களா? பக்தர்களா?
இறைவேண்டல்.
அன்பு இயேசுவே, நீர் ஏற்படுத்திய சீடத்துவ வாழ்வில் பேருக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டு, போலி பக்தனாக வாழாமல், சீடத்துவத்தை மாட்சிப்படுத்தும் பணியாளனாக வாழ எனக்கு அருள்புரிவீராக. ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452