இயேசுவைப் பின்தொடர்வோமா! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பாஸ்கா காலம்-ஏழாம் வாரம் வெள்ளி
I: திப: 25: 13-21
II: திபா :103: 1-2. 11-12. 19-20
III:யோவான் :21: 15-19

இன்றைய நற்செய்தி வாசகம் நம்மில் பலருடைய மனதை மிகவும் தொட்ட ஒரு பகுதி. இயேசுவின் உயிர்ப்புக்குப் பின் அவர் சீடர்களுக்குப் பலமுறை தோன்றி அவர்களுக்குத் திடமளித்து பயம் நீக்கி  நம்பிக்கையை ஆழப்படுத்தினார். மிக முக்கியமாக தனக்குப்பின் நம்பிக்கையாளர்களை வழிநடத்துவதற்காக பேதுருவை தயார்படுத்தும் பகுதி தான் இன்றைய வாசகமாகத் தரப்பட்டுள்ளது.

பேதுரு இயேசுவின் மேல் அதிக அன்பு கொண்டவர். இயேசுவின் போதனைகளைத் தவறாகப் புரிந்து கொண்டு பலர் அவரை விட்டு விலகிய போதும் வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடமே உள்ளன எனக் கூறி இயேசுவைவிட்டு நீங்காதவர்.இயேசுதான் மெசியா என அறிக்கையிட்டவர். 

இத்தகையவரிடம் இயேசு "என்னை நீ அன்புசெய்கிறாயா?" என ஒருமுறையல்ல மும்முறை வினவுகிறார். பேதுரு இயேசுவை மும்முறை மறுத்தலித்ததை நினைவுபடுத்தி வருத்தமடையச் செய்யவே இயேசு மும்முறை இவ்வாறு கேட்கிறார் என நாம் எண்ணலாம். ஆனால் தன்னை அன்பு செய்பவர் தன்னை முழுமையாகப் பின்பற்றி சான்று பகர வேண்டும் என்ற கடமையை முழுமையாக உணர்த்தவே இயேசு இவ்வாறு வினவுகிறார்.
"என் ஆடுகளை மேய், பேணி வளர் " என்று கூறும் போது இயேசு பேதுருவிடம் தன் மேல் கொண்டுள்ள அன்பு மக்கள் பணிமூலம் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்ற ஆழமான செய்தியையும் கூறுகிறார். இவ்வாறாக " உன் பெயர் பாறை. இப்பாறையின் மேல் திருச்சபையைக் கட்டுவேன்" என்று இயேசு முன்னர் உரைத்ததை மீண்டும் உறுதிப்படுத்துகிறார்.

இன்று இயேசு நம்மிடமும் "என்னை நீ அன்பு செய்கிறாயா?" எனக் கேட்கிறார்.  அதற்கு ஆம் என நாம் பதிலளிப்போமானால் அவருடைய பாதையை நாம் தொடர வேண்டும். இயேசுவின் மேல் நாம் கொண்டுள்ள அன்பைப் பிறரோடு பகிர வேண்டும். அவ்வாறு வாழ்ந்து? திரு அவையைக் கட்டிக் காக்க வேண்டும். இவை அனைத்திற்கும் நாம் தயாரா?

நாம் ஒவ்வொருவரும்  திரு அவையின் உறுப்பினர்கள். நம்முடைய குடும்பங்கள் குட்டித் திரு அவை. நம்முடைய பணிகள் அன்புப் பணிகளாய், வழிகாட்டும் பணிகளாய்,  தேவையில் இருபப்போரைப் பேணிக்காக்கும் பணிகளாய் இருக்க வேண்டியது அவசியம். நம் ஆண்டவர் இயேசு இதையே நம்மிடம் எதிர் பார்க்கிறார். இத்தகைய வாழ்வே நாம் இயேசுவை பின்பற்றுகிறோம் என்பதன் அடையாளம். எனவே இயேசுவை அன்போடு பின்தொடர வரம் வேண்டுவோம்.

இறைவேண்டல்
அன்பு இயேசுவே உம்மை அன்பு செய்யவும் எம் அன்புப் பணிகளால் உம்மை நாங்கள் பின் தொடரவும் வரமருளும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

2 + 0 =