மன்னிப்பது கோழைகளின் செயலல்ல.. அது வீரச் செயல்! | ஆர்கே. சாமி | Veritas Tamil

6 ஆகஸ்டு 2025                                                                                                                  
பொதுக்காலம் 19ஆம் வாரம் - வியாழன்
 
யோசுவா 3: 7-10a, 11, 13-17
மத்தேயு 18: 21- 19: 1
 
மன்னிப்பது கோழைகளின் செயலல்ல.. அது வீரச் செயல்!

 முதல் வாசகம்.

 முதல் வாசகத்தில், ஆண்டவர் மோசேக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதியை எதிரொலிக்கும் விதமாக, கடவுள் யோசுவாவுக்கு உறுதி கூறுகிறாரு. அவருடைய உடனிருப்பு இஸ்ரயேலர் மத்தியிலும் யோசுவாவிலும் உறுதியாகவும் அதிகாரமளிப்பதாகவும் உள்ளது. இங்கே, குருக்குளால் சுமந்து செல்லப்படும் உடன்படிக்கைப் பேழா, கடவுளின் பிரசன்னம் அவரது மக்களை வழிநடத்துவதைக் குறிக்கிறது. இஸ்ரயேலர் இப்போது யோசுவா தலைமையில யோர்தான் நதியைத் தாண்டுகிறார். அப்போது, கருக்குளின் கால்கள் தண்ணீரைத் தொட்டவுடன், யோர்தான் நதியின் நீர்  ஓட்டம் நின்றுவிட்டது - இஸ்ரயேலர்களுக்கு வறண்ட பாதையாக அமைந்தது. மோசேயின் காலத்தில் செங்கடலைக் கடந்து சென்றதை நினைவூட்டும் வகையில், மக்கள் வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குள் (கானானுக்குள்)   பாதுகாப்பாகக் கடந்து செல்கின்றனர். 

இஸ்ரயேலர் அனைவரும் ஆற்றை கடந்து முடிக்கும்வரை, ஆண்டவரது உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிச் சென்ற குருக்கள் யோர்தான் ந்தி  நடுவே வறண்ட தரையில் நின்றனர். எல்லா இஸ்ரயேல் மக்களும் அவ்வறண்ட தரை வழியாக பாதுகாப்பாக கடந்தனர்.

நற்செய்தி.

இன்று இயேசு வெளிப்படுத்தும் மன்னிக்காத ஊழியரின் உவமை - நற்செய்திகளில் இரக்கம் மற்றும் மன்னிப்பு பற்றிய மிகவும் குறிப்பிடத்தக்க போதனைகளில் ஒன்றாகும்.  "ஏழு முறை" மன்னிப்பது பற்றிய பேதுருவின் கேள்விக்கு, இயேசுவின் தீவிரமான பதிலலான  "எழுபத்தேழு முறை" - எல்லையே இல்லாத மன்னிப்பைக் குறிக்கிறது.

விண்ணக அரசு , ஒரு வேலைக்காரனின் மிகப்பெரிய, செலுத்த முடியாத கடனை மன்னிக்கும் ஓர் அரசருக்கு ஒப்பிடப்படுகிறது. ஆனால் அதே வேலைக்காரன், தனக்கு மிகக் குறைந்த அளவு கடன்பட்ட ஒருவருக்கு அந்த அரசன் தன் மீது காட்டிய இரக்கத்தின் ஒரு பகுதியைக் கூட காட்டத் தவறிவிடுகிறான்.  எனவே, அவன்  தண்டனை பெறுகிறார்.

சிந்தனைக்கு.

பிறர் குற்றங்களை மன்னிக்க மறுப்பது உறவுகளை மட்டுமல்ல, ஒருவரின் சொந்த அமைதியையும் பாதிக்கிறது என்று இந்த  இயேசுவின்  உவமை எச்சரிக்கிறது -  மன்னிப்பது எளிதானது என்பதல்ல மாறாக, மன்னிப்பது நம்மை பகைமையில் இருந்து விடுவித்து கிறிஸ்துவின் அன்போடு நம்மை இணைக்கிறது என்பதாகும். பேதுரு "ஏழுமுறை" என்று மன்னப்பின் அளவை கொண்டிருக்குப்போது,  இயேசு "77 முறை" என்று கூறுவதில், மன்னிப்பு வரம்பற்றது என்பது தெளிவாகிறது. 

பேதுரு,  தனது சகோதரனை ஏழு முறை மன்னிக்க வேண்டுமா என்று கேட்பதன் மூலம் அவர் (பேதுரு) தன்னை தாராள மனப்பான்மை கொண்டவர் என்று நினைத்துப் பெருமைபட்டிருக்கக்கூடும். ஆனால் கடவுளின் எல்லையற்ற இரக்கத்தை இயேசு வெளிப்டுத்தும்போது, அவர் கடவுளின் இரக்கத்தை அளவிட முடியாது என்பதை உணர்ந்திருப்பார். எனவே, நாம் மற்றவர்களுக்கு வழங்கும் இரக்கத்திற்கு எல்லையே இருக்கக்கூடாது என்று இன்று ஆண்டவரால் அறிவுறுத்தப்படுகிறோம். 

உரோமையருக்கான திருமுகத்தில், பவுல் அடிகள் ‘எல்லாருமே பாவம் செய்து கடவுள் கொடுத்த மேன்மையை இழந்து போயினர்’ (3:23) என்கிறார். ஆம் , நாம் அனைவரும் பாவிகள்தான். இதன் விளைவாக, நாம் எப்போதும், எல்லா இடங்களிலும், நிபந்தனைகள் இல்லாமல், வரம்பு இல்லாமல், தயக்கமின்றி பிறரை மன்னிப்பது அவசியம். மன்னிக்கும் மனிதரின் உள்ளம் மாணிக்கக் கோயில் என்பார்கள். ஆம், மன்னிக்கத் தெரிந்தவர்களின் உள்ளம் மாணிக்கக் கோயில் போல விலைமதிப்பற்றது, புனிதமானது.

உள்ளம் என்பது கடவுளின் கொடை. அதற்குள் ஏன் அகம்பாவம்? இதனால், எந்த இலாபமும் கிடைக்காது. உள்ளம் கள்வரின் குகையாக மாறும் என்பதை அறிந்துணராதவர்   வாழ்வு தடம் தெரியாமல் மறைந்து போகும் என்பது ஆன்றோர் வாக்கு.

முதல் வாசகத்தில் நாற்பது ஆண்டுகால பாலைநிலப்  பயணத்தின்போது கடவுள் உதவிகளையும், அவர் வழங்கிய விடுதலையையும் மறந்து இஸ்ரயேலர் அவரை தூற்றினார்கள், வணங்கா கழுத்துள்ள மக்களாக இருத்தனர். ஆனாலும், கடவுள் அவர்களை மனதார மன்னித்து வாக்களித்த நாட்டை யோசுவா தலைமையில் அடையச் செய்கிறார். கடவுளின் மன்னிப்பு செயலில் வெளிப்பட்டது.    அவ்வாறே. நமது மன்னிப்பும், காணாமற்போன மகனின் தந்தையின் மன்னிப்பு போல,  செயலில் வெளிப்பட வேண்டும். ஒருவரை மன்னிக்க மறுப்பதன் மூலம், நமது ஆன்மாவிற்கும் கடவுளுடனான நமது உறவுக்கும் அளவிட முடியாத சேதத்தை ஏற்படுத்துகிறோம் என்பதே உண்மை. நமது குற்றங்களும் ஒருபோதும் மன்னிக்கப்படா. பிறர் குற்றங்களை மன்னித்தால்தான் நமது குற்றங்கள் மன்னிக்கப்படும் என்பது ஆண்டவர் விதித்த நிபந்தனை.

சிலர் மன்னிப்புக் கேட்க தயங்குவார்கள். அப்படிப்பட்டவர்களுடன் பழகும்போது எந்த வித்தியாசமும் இல்லாமல் பழகுவது, அவர்களை மனதார மன்னித்துவிட்டதைச் செயல்களில் காட்டுவதாகும். இதில்,  மன்னிப்புக் கேட்கும் முன்பே மன்னிப்பது உயர்ந்த மனிதநேயமாகும். 

இறைவேண்டல்.

ஆண்டவரே, நான் இப்போது இருப்பது போலவே, உமக்கு முன்பாக வருகிறேன், என் பாவங்களுக்காக வருந்துகிறேன். தயைக்கூர்ந்து என்னை மன்னிப்பீராக.  உமது திருப்பெயரில், மற்றவர்கள் எனக்கு எதிராகச் செய்த குற்றங்களுக்காக நான் அவர்களை மனமார மன்னித்து ஏற்கிறேன். ஆமென்.

 
 

ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452