கடவுளின் வார்த்தையை பெற்றுக்கொண்டவர்களே தெய்வங்கள்! | அருட்பணி. குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

தவக்காலம் -ஐந்தாம் வாரம் வெள்ளி  
I: ஏரே: 20: 10-13
II: திபா: 18: 1-3, 4-5, 6
III: யோவா: 10: 31-42

தவக்காலத்தின் இறுதி நாட்களை நாம் நெருங்கிக்கொண்டிருக்கிறோம். இயேசுவின் பாடுகளை உருக்கமாக தியானிக்கும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இயேசுவின் மேல் சுமத்தப்பட்ட குற்றத்தில் முதன்மையானது இயேசு தன்னை இறைமகன் எனச் சொல்லிக்கொண்டதுதான். திருவிவிலியத்தின் முதல் ஐந்து புத்தகமான "தோரா" எனப்படும் ஐநூல்களை படித்தறிந்துள்ளோம் எனச் சொல்லித்திரிந்த பரிசேயர், மறைநூல் வல்லுநர் மற்றும் உயர்தட்டு யூதர்களால் இயேசு கூறிய அக்கூற்றை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. ஏன்?  

தொடக்கத்தில் கடவுள் மனிதனை தன் உருவிலும் சாயலிலும் படைத்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதுவே மனிதர்கள் அனைவரும் கடவுளின் பிள்ளைகள் என்பதற்கு சான்று. இவ்வார்த்தைகளை தங்களுக்குள் முழுமையாகப் பெற்றிருந்தால் யூதர்களும் கடவுளின் பிள்ளைகள் தானே. இதையே தான் "நான் உங்களை  தெய்வங்கள் என்றேன்" என இயேசு கூறுகிறார். 

ஆம். இறைவார்த்தையை நாம் பெற்றிருந்தால் அவற்றைக் கடைபிடித்து வாழ்ந்திருந்தால் நாமும் பெருமிதத்தோடு சொல்லலாம் " இறைமக்கள்" என்று. இன்று இறைவார்த்தை நம்முள்ளே இருக்கிறதா? சிந்திக்க கடைமைப்பட்டுள்ளோம். 

இயேசு இறைவார்த்தையை வாழ்வாக்கினார். அதன் வெளிப்பாடே அவருடைய நற்செயல்கள். பழுத்த மரம் தான் கல்லடி படும் என்ற வார்த்தைக்கேற்ப, நற்செயல்களால் நிறையப்பெற்ற அவரை குற்றம் சாட்டி கல்லெறிய முற்பட்டனர். இருப்பினும் அவர் கலங்காமல் தன்னை இறைமகன் என பெருமிதத்தோடும் உரிமையோடும் கூறினார். அதை யூதர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. காரணம் இறைவார்த்தை அவர்களில் இல்லை. நம்மிலே இறைவார்த்தை உள்ளதா?  அதை நாம் வாழ்வாக்குகிறோமா?  என்றால் நாமும் தெய்வங்களே. இறைமக்களே. நம் செயல்கள் நிச்சயம் நற்செயல்களாகும். வசை மொழிகளும் அச்சுறுத்தல்களும் கல்லடியாய் நம்மேல் விழும்.கலங்காமல்  இறைவார்த்தையை பெற்றுக்கொண்டு கடவுளின் பிள்ளைகளாக வாழும் தெய்வங்களாக மாறுவோமா?

இறைவேண்டல் 
எங்கள் தந்தையே! இயேசுவைப்போல இறைவார்த்தையை பெற்று வாழ்வாக்கி உமது பிள்ளைகளாகும் வரமருளும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்