இறைவார்த்தையை கடைபிடித்து சாகா வரம் பெறத் தயாரா! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

தவக்காலம் -ஐந்தாம் வாரம் வியாழன்  
I: தொநூ: 17: 3-9
II: திபா: 105:4-5, 6-7, 8-9
III: யோவா: 8: 51-59

ஒரு மனிதன் இறந்த பின்னும் சில காலமோ அல்லது பல காலமோ பிறரின் நினைவில் வாழ்கிறான். அவ்வாறு ஒரு மனிதனைப் பற்றி மற்றவர் எண்ணும் போதே அவரைப் பற்றிய உயர்வான மதிப்பான எண்ணங்கள் தோன்றுமெனில் அம்மனிதன் வாழ்ந்த வாழ்க்கை உயர்வானதாகவும் மதிப்பானதாகவும் இருக்கின்றது என்பதுதான் பொருள்.
இன்றைய நற்செய்தியில் நம் ஆண்டவர் இயேசு, " என் வார்த்தையைக் கடைப்பிடிப்போர் என்றுமே சாகமாட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்கிறார். சாகமாட்டாகள் என்று இயேசு கூறியதன் அர்த்தம் என்ன?  அவர் குறிப்பிட்டது உடலின் இறப்பையா?  மாறாக அவர் நம் ஆன்மாவைக் கூறுகிறார். இதை அறியாத யூதர்களோ இயேசுவை பேய் பிடித்தவன் என்கிறார்கள். 

பழைய ஏற்பாட்டில் பல நூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்து இறந்த அபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, தாவீது போன்ற பலர் புதிய ஏற்பாட்டில் பலமுறை குறிபிடப்பட்டுள்ளார்கள். இறந்தவர்களாயினும் அவர்களைக் குறித்து யூதர்கள் பெருமையாகப் பேசியதன் காரணம் என்னவெனில் அவர்கள் கடவுளின் கட்டளையைக் கடைபிடித்து உடன்படிக்கையின் படி வாழ்ந்தார்கள்.  திரு அவையில் நாம் விழா கொண்டாடும் புனிதர்கள் எல்லோரும் இன்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருப்பதற்கான காரணம்  அவர்கள் இயேசுவி வார்த்தைகளையே தங்கள் வாழ்வின் அடிச்சுவடுகளாக கொண்டு வாழ்ந்தார்கள் என்பதே. 

இயேசுவின் வார்த்தைகள் நமக்குக் கூறுவது அன்பு, மகிழ்ச்சி, இரக்கம்,மன்னிப்பு, மனமாற்றம் ,பகிர்வு, ஒற்றுமை, நீதி போன்ற நற்குணங்களையே. இதை நாம் கடைபிடித்து வாழ்ந்தால் நாம் இறந்தாலும் வாழ்கின்றவராவோம். அவற்றை நாம் கடைபிடிக்காமல் வாழ்ந்தால் நாம் வாழ்ந்தாலும் செத்தவர்களே. இதைத்தான் இயேசு "நீங்கள் சாகமாட்டீர்கள்" என்று  கூறுகிறார்.இவ்வாறு வாழ்ந்தவர்களை உலகம்  வாழும் போது கொண்டாடவில்லை என்றாலும் இறந்து பிறகு கொண்டாடுகிறது. "எங்கள் நினைவில் வாழ்கிறீர்கள் " என பெருமையாகக் கூறுகிறது.

அன்புக்குரியவர்களே கடவுளின் வார்த்தைகள் உயிருள்ளவை. உயிரளிப்பவை. அவ்வார்த்தை நம்முள் குடிகொள்ளும் போது நாம் உயிரோட்டமுள்ளவர்களாக, உயிர்துடிப்பு உள்ளவர்களாக மாறுகிறோம். தேவையற்றவற்றை களைந்து நல்லவற்றை தேடுபவர்களாக மாறுகிறோம். எல்லா நற்குணங்களும் நம்மில் குடிகொள்கின்றன. நம் வாழ்வு அர்த்தம் பெறுகிறது. நம் ஆன்மா காக்கப்படுகிறது. இதை உணர்ந்தவர்களாய் இறைவனின் வார்த்தையை வாழ்ந்து சாகா வரம் பெற முயல்வோம்.

இறைவேண்டல் 
என்றும் வாழும் இறைவா! உம் வார்த்தைகளை கடைபிடித்து முடிவில்லா வாழ்வு பெறுபவர்களாய் எம்மை மாற்றியருளும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்