கடவுளே உண்மை! விடுதலை அளிப்பவரும் அவரே! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

தவக்காலம் -ஐந்தாம் வாரம் புதன்  
I: தானி: 3: 14-20, 24-25, 28
II: தானி: 1: 29. 30-31. 32-33
III: யோவா: 8: 31-42

உண்மைதான் ஒரு மனிதனுக்கு முழுமையான சுதந்திரத்தைக் கொடுக்கும். வாய்மையே வெல்லும் என்பது பழமொழி. உண்மையுள்ளவனிடத்தில் பயம் இருக்காது. பதற்றம் இருக்காது. துணிவு இருக்கும்.தெளிவு இருக்கும். உண்மையாக இருப்பவர்கள் பல நேரங்களில் துன்புறுத்தப் படலாம், சோதிக்கப் படலாம். ஆனால் அவர்கள் உள்ளம் அக விடுதலை பெற்றிருக்கும்.அந்த உண்மையே கடவுள்.

நம் ஆண்டவர் இயேசு உண்மைக்குச் சான்று பகரவே இந்த உலகத்திற்கு வந்தார்.உண்மையான கடவுளுக்கு சான்று பகர வந்தார். அவர் அவ்வாறு சான்று பகரும் பொழுது பற்பல இடையூறுகளையும் துன்பங்களையும் சவால்களையும் சந்தித்தார். இருந்தபோதிலும் மன உறுதியோடு இறையாட்சியின் மதிப்பீடுகள் வழியாக உண்மையை இந்த உலகிற்குக் கொண்டு வந்தார். அதன் வழியாக அனைவரும் அக விடுதலை பெற்று மீட்புப் பெற வழிகாட்டினார்.

இயேசு இன்றைய நற்செய்தியில்  "உண்மை உங்களுக்கு
விடுதலை அளிக்கும்" ' (யோவான் 8:31-32) என்று கூறுகிறார் இயேசு. உண்மையான வாழ்வு மட்டும்தான்  விடுதலையைக் கொடுக்கும் என்பது அதன் பொருள் . சட்டத்தின் பெயராலும் சமயத்தின் பெயராலும் பாமர மக்களை அடக்கி ஒடுக்கிய பரிசேயர்களும் சதுசேயர்களும் மக்களின் அக மற்றும் புற விடுதலைக்குத் தடையாக இருந்தனர்.  சட்டங்களையெல்லாம் ஒன்றுக்கு மேல் ஒன்றாக கூட்டிக்கொண்டே சென்று மக்கள் மனத்தில் இச்சட்டங்களைக் கடைப்பிடித்தலே கடவுளுக்கு பணிந்து நடப்பதற்கு சமம் என்ற பொய்யான பக்தியையும் நம்பிக்கையையும் மக்கள் மனதில் புகுத்தினர். இதனால் மக்கள் உண்மை கடவுளை விட்டு விட்டு சட்டங்களையும் சடங்குகளையும் கடவுளாக்கினர். இதைத் தவறு என்று சுட்டிக்காட்டிய இயேசுவை குற்றவாளி, கடவுளுக்கு எதிராய் பாவம் செய்கிறான் என துன்புறுத்தத் தொடங்கினர். 
ஆனால் இயேசுவோ உண்மையுள்ளவராய் இருந்ததால் உண்மை கடவுளால் அனுப்பப்பட்டவராய் இருந்ததால் முழு சதந்திரத்தோடு உண்மையை, கடவுளை பறைசாற்றிக்கொண்டேதான் இருந்தார்.

இன்றைய முதல் வாசகத்தில் நாம் காண்பது என்ன? தங்கள் கடவுளே உண்மையானவர் என்பதில் உறுதியாய் இருந்த சாத்ராக், மேசாக், அபேத்நேகோ  அரசன்  நெபுகத்நேசர் செய்த பொய்யான தெய்வச்சிலையை வணங்க மறுத்தனர். சாவுக்கும் அஞ்சவில்லை. ஏனெனில் அவர்களிடம் உண்மையான கடவுள் குடிகொண்டிருந்தார். ஏழுமடங்கு அதிகமான தீச்சூளையும் அவர்ளை தாக்கவில்லை.கடவுள் அங்கே அவ்விளைஞர்களுக்கு மட்டும் விடுதலை அளிக்கவில்லை. மாறாக நான் என்ற மமதையில் தன்னையே தெய்வநிலைக்கு உயர்த்திய அரசனுக்கும் நம்பிக்கையைப் புகட்டி விடுதலை அளித்தார் என்றால் அது மிகையாகாது.

ஆம் அன்புக்குரியவர்களே விடுதலையை முழுமையாக அனுபவிக்க நம்முடைய  வாழ்வில் உண்மை தேவை.அந்த உண்மை கடவுள் மூலமே நம்முள் குடிகொள்கிறது. கடவுளின் மேல் உள்ள அயராத நம்பிக்கை நம்மைச் சூழ்ந்துள்ள பொய்யான மாய நெருப்பு வலைகளில் சிக்கி, கருகிப் போகாமல் நம்மை காக்கின்றது. எனவே கடவுளை நம் அகத்தில் கொண்டு இயேசுவைப் போல, அந்த மூன்று இளைஞர்களைப் போல உண்மைக் கடவுளை யாருக்கும் அஞ்சாமல் எடுத்துரைப்போம். நம்மைச் சூழ்ந்துள்ள பொய்யான வலைகளிலிருந்து அவர் நமக்கு விடுதலை அருள்வார்.

இறைவேண்டல் : 
விடுதலையின் நாயகனே இறைவா! எங்கள் அன்றாட வாழ்வில் நாங்கள் உண்மையின் உறைவிடமான உம்மை திண்ணமாய் நம்பி விடுதலை பெற்றவர்களாய் வாழ வரமருளும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்