மேலிருந்து வந்தவர்களா நாம்? | அருட்பணி. குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

தவக்காலம் -ஐந்தாம் வாரம் செவ்வாய்  
I: எண்: 21: 4-9
II: திபா: 102: 1-2. 15-17. 18-20
III: யோவா: 8: 21-30

சில சமயங்களில் நாம் தவறுகள் செய்யும் போதோ அல்லது நமது பலவீனங்கள் வெளிக்காட்டப்படும் போதோ நாம் அனைவரும் பிறர் முன் சூழ்நிலையை சமாளிப்பதற்காக சொல்லும் வார்த்தைகள் "நான் ஒன்றும் கடவுளில்லை. வானத்திலிருந்து குதித்து வரவில்லை"
என்பதாகும். இந்த மனநிலை கொண்ட நமக்கு "மேலிருந்து வந்தவர்களா நாம்?" என்ற கேள்வி சற்று வியப்பாக இருக்கலாம்.
தொடக்கநூலில் கூறப்பட்டுள்ளதைப் போல நாம் கடவுளின் உருவிலும் சாயலிலும் படைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை நாம் நம்புகிறோம். கடவுளை நம் தந்தை என ஏற்றுக்கொள்கிறோம். அப்படி என்றால் நாமும் மேலிருந்து அதாவது கடவுளிடமிருந்து வந்தவர்களல்லவா? ஆனால் நமது வாழ்வு அதைப் பிரதிபலிக்காமல் இவ்வுலகத்தைச் சார்ந்ததாகவே இருக்கிறது.

கடவுள் இஸ்ரயேல் மக்களை தன் மக்களாக ஏற்படுத்தி அவர்களை பிறமக்களுக்கெல்லாம் மேலானவர்களாகத் தேர்ந்தெடுத்தார். ஆனால் அவர்களோ உலகம் சார்ந்த கீழானவைகளையே தேடினர். அதன் விளைவாகத்தான் பாலைநிலத்தில் விஷப்பாம்பினால் தாக்கப்பட்டனர்.அதேபோல இயேசுவின் காலத்தில் வாழ்ந்த யூதர்கள் தங்களை மற்றவர்களைவிட உயர்வாக எண்ணினர். கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்,  உயர்வானவர்கள் என்ற மமதை அவர்களிடம் மிகுந்து இருந்ததால் கடவுளின் பார்வையில் தங்கள் தரத்தை குறைத்துக் கொண்டார்கள்.

இயேசு "நான் மேலிருந்து வந்தவன் "என்று கூறுகிறார். அதன் உண்மைப் பொருள் அவர் கடவுளிடமிருந்து வந்தவர் என்பதே. அதோடு மட்டுமல்லாது அவருடைய பேச்சு, செயல், சிந்தனை அனைத்தும் கடவுளைச் சார்ந்ததாகவே இருந்தன.நம்முடைய பேச்சும், சிந்தனையும் செயலும் கடவுளை நோக்கி உயர்த்தப்பட்டதாக இருக்குமெனில் நாமும் மேலிருந்து வந்தவர்கள் தாம்.
நிலையற்ற செல்வம், பொழுது போக்கு, சிற்றின்பம், சுயநலம், ஆணவம் போன்றவை நம்மை நாளுக்கு நாள் உலகம் சார்ந்தவர்களாக மாற்றி கடவுளிடமிருந்து பிரிக்கின்றன. அதன் விளைவு நாமும் பாவ வாழ்வில் மடிகிறோம்.

இதற்கான தீர்வு என்ன? இஸ்ரயேல் மக்கள் மனம்வருந்தியதால் பாலைநிலத்தில் பாம்பு உயர்த்தப்பட்டது. கடவுளின் வார்த்தையை நம்பி அதை அண்ணார்ந்து பார்த்தவர் அனைவரும் பிழைத்தனர். நமக்காக சிலுவையில் உயர்த்தப்பட்டார் இயேசு. நாமும் மனந்திரும்பி நம்பிக்கையோடு நம் உள்ளங்களை அவர்பால் எழுப்பினோம் என்றால் நாமும் பாவ வாழ்விலிருந்து அருள் வாழ்விற்கு உயர்த்தப்படுவோம். மேலிருந்து அதாவது கடவுளிடமிருந்து தோன்றியவர்களாவோம். இவ்வுலகத்தின் தீமைகள் நம்மைத் தாக்காது. எனவே மேலிருந்து வந்தவர்களாக வாழ நமக்காக உயர்த்தப்பட்ட இயேசுவை நோக்கி நம் உள்ளங்களை உயர்த்துவோம்.

 இறைவேண்டல்
அன்பு இறைவா! உலகைச் சார்ந்தவர்களாய் வாழாமல்  உம்மை நோக்கி எங்கள் உள்ளங்களை உயர்த்த வரம் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்