அன்றாட சிலுவையை நம்பிக்கையோடு சுமக்கத் தயாரா? | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

ஆண்டின் பெதுக்காலம் வாரம் 6 வெள்ளி
I: தொநூ:  11:1-9
II: திபா:  33:10-11, 12-13, 14-15
III: மாற்: 8: 34 - 9: 1

கூலி வேலை செய்யும் ஒரு தந்தை வேலை முடிந்து மிகவும் களைப்பாய்  வீட்டிற்கு வந்தார். தன்னுடைய கூலியை மனைவியிடம் கொடுத்து குழந்தைகளுக்குத் தேவையானதை வாங்கிக் கொடுக்கச் சொன்னார். பின் மனைவி அவரிடம் " இவ்வளவு களைப்பாய் இருக்கிறீர்களே! வே லை மிகவும் கடினமாய் உள்ளதா? "  எனக் கேட்டார். அப்போது சிரித்த முகத்தோடு அவர், "என்  குடும்பத்திற்கு செய்வதில் எனக்கு கடினமில்லை. நாம் இப்படியே இருந்துவிட மாட்டோம். நிலை மாறும். அதற்காக நாமும் சும்மா இருந்துவிடக்கூடாது. நம்பிக்கையோடு நம் கஷ்டங்களைக் கடந்து சென்றால்தான் நம்மால் முன்னேற முடியும்" என்று தன் மனைவியிடம் கூறினார்.

தங்களுக்கு சிறகுகள் இருப்பதால்  பறந்துவிடலாம் என்ற நம்பிக்கையைக் மட்டும் கொண்டு பறவைகள் பறப்பதில்லை. மாறாக அச்சிறகை அவை அசைக்கும்போதுதான்  காற்றின் எதிர்ப்பையும் தாண்டி அவற்றால் பறக்க இயலுகின்றது.   அவ்வாறு சிறகையடித்துப் பறக்கின்ற போது  பறவைகள் தளர்வுற நேரிடும். ஆனால் அவை பறக்காமல் ஓரிடத்தில் அமர்ந்திருப்பதில்லை. நம் வாழ்க்கையும் அப்படியே.

நமது கிறிஸ்தவ வாழ்வு எளிதான வாழ்வு அல்ல. துன்பங்களும் துயரங்களும் சங்கடங்களும் அதிலே நிறைந்து இருக்கும். அவற்றை நாம் நம்பிக்கையோடு ஏற்றுக்கொண்டு கையாளத்தெரிந்தால் மட்டுமே வாழ்வில் மகிழமுடியும். அதற்கு நம் ஆண்டவர் இயேசுவே மிகச் சிறந்த உதாரணமாய் உள்ளார்.  எத்தனை எதிர்ப்புக்கள் ! எத்தனை சோதனைகள்! இறுதியில் தந்தையின் மீட்பை உலகிற்குத் தர அவர் கைகொண்ட ஆயுதம் சிலுவை. அச்சிலுவைதான் உயிர்ப்புக்கு வழிவகுத்தது. எனவேதான் அவருடைய சீடர்களாய் வாழவிரும்பும் நம்மையும் நம் அன்றாட சிலுவைகளைத் சுமக்கச் சொல்கிறார். இடுக்கமான வாயிலில் பயணிக்கச் சொல்கிறார். அவையெல்லாம் நாம் துன்புறவேண்டும் என்பதற்கு அல்ல. மாறாக நாம் மாண்புற வேண்டும் என்பதற்காகவே. 

அன்றாட சிலுவையை நாம் கடமைக்காக வெறுப்போடு சுமக்கக்கூடாது. மாறாக நம்பிக்கையோடு விரும்பிச் சுமக்க வேண்டும். இதை இன்றைய முதல் வாசகம் நமக்குக் கூறுகிறது. நமது நம்பிக்கை செயல்வடிவம் பெற நமது வாழ்வில் நடக்கும் அத்தனையையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் நமக்கு வேண்டும். ஆபிரகாம் கடவுள் கொடுத்த பிள்ளையை நம்பிக்கையோடு ஏற்றுக்கொண்டார். அதே பிள்ளையை கடவுள் பலியிடச் சொன்னபோது கடவுள்மேல் கொண்ட நம்பிக்கையால் பெருந்துன்பமாக இருந்தாலும் அதையும் ஏற்றுக்கொண்டார்.

ஆம் அன்புக்குரியவர்களே!  நம் அன்றாட வாழ்வில் வரும் சின்னச் சின்னத் துன்பங்களைக் கூட நம்பிக்கையோடு நாம் சுமக்க முயற்சிக்கும் போது நமது மீட்புக்காக நாம் இயேசுவோடு உழைக்கும் உடனுழைப்பாளிகள் ஆகிறோம். அத்துன்பம் நமக்கு நிச்சயம் மீட்பின் கனிகளைத்தரும். எனவே சிலுவைகளைப் பற்றிய நம் எண்ணங்களை மாற்றியமைப்போம். நம்பிக்கையோடு அவற்றை ஏற்றுக்கொள்வோம். நம் வாழ்க்கை சீடத்துவ வாழ்க்கையாக மாறும். 

 இறைவேண்டல்
அன்பு இயேசுவே! எங்கள் அன்றாட சிலுவைகளை நம்பிக்கையோடு சுமந்து சீடத்துவ வாழ்வு வாழ அருள்புரியும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்