பகிரரும் மனநிலையோடு இறைவனை எதிர்கொள்ளத் தயாராவோம்! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

திருவருகை காலம் முதல் புதன் 
I: எசா:  25: 6-10
II: திபா 23: 1-3. 3-4. 5. 6
III: மத்:  15: 29-37

பகிர்தல் எனப்படும் பண்பு உண்மையான ஆழமான உறவு வாழ்வுக்கு அடித்தளம். பகிர்வதால் அனைத்தும் பன்மடங்காகுமே தவிர ஒருபோதும் குறைவதில்லை என்பதே உண்மை. இறைமகன் இயேசு தன்னுடைய பணிவாழ்வில் இருப்பதை இல்லாதவரோடு பகிர்ந்து வாழ்ந்தார். அன்பில்லாதோருக்கு அன்பைப் பகிர்ந்தார். ஆறுதலின்றி வாழ்ந்தோருக்கு மன நிம்மதியைப் பகிர்ந்தார். தன்னுடைய இறைஅனுபவத்தை தன்னுடைய போதனைகளாலும் வல்ல செயல்களாலும் பகிர்ந்தார். அவ்வாறே நம்மையும் பகிர அழைக்கிறார். இரு மேலாடை உள்ளவர்கள் இல்லாதவருக்குக் கொடுங்கள் என அறிவுறுத்துகிறார். இவ்வாறு பகிர்வதால் குறைகளெல்லாம் நிறைவாகின்றன.

இன்றைய நற்செய்தியில் ஏழு அப்பங்களை நாலாயிரம் பேருக்கு வழங்கிய நிகழ்வு தரப்பட்டுள்ளது. இந்நிகழ்வின் மூலம்  பகிர்தலுக்கு நம்மிடம் இரு முக்கியமான பண்புகள்தேவை என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

முதலாவதாக பிறரின் தேவையை உணர்தல்.ஆங்கிலத்தில் "Sensitivity" என்ற வார்த்தை உள்ளது. அதன் அர்த்தம் பிறரின் தேவையை அவர்கள் கூறாமலேயே அறிதல்.இயேசுவின் போதனைகளைக் கேட்ட மக்கள் யாரும் தங்களுக்குப் பசிப்பதாகவும் தங்களுக்கு உணவு வழங்க வேண்டுமென்றும் கேட்கவில்லை. மாறாக இயேசுவே அவர்களின் உணவுத் தேவையை உணர்ந்தார். அன்பும் கனிவும் நிறைந்த இயேசு அம்மக்களின் தேவையை தாமாகவே உய்த்துணர்ந்தார். இப்பண்பு நம்மிலேயும் வளர வேண்டுமென்றால் இயேசுவைப் போல  நாமும் நம்முடைய அன்பையும் கனிவையும் ஆழப்படுத்த வேண்டும். அன்பும் கனிவும் நம்மிலே வளரும் போது பிறரையும் நம்மைப் போல எண்ண முடியும். அவர்களின் தேவைகளையும் அவர்கள் கூறாமலேயே உணர முடியும்.

இரண்டாவது பண்பு தாராள மனம்.  அதவாது ஆங்கிலத்தில் "Genorosity" என்பார்கள். . ஏழு அப்பங்களையும் சில மீன்களையும் கொண்ட அம்மனிதர் அவற்றை உண்டு தன் பசியைப் போக்கியிருக்கலாம். அதைக் கொடுத்துவிட்டால் தன்னுடைய பசியை யார் போக்குவது எனவும் எண்ணி இருக்கலாம்.ஆனால் அவரோ அப்பங்களைத் தமக்கெனக் கொள்ளாமல் தாராள மனதோடு அளித்தார். அவர் தொடங்கிய அந்நற்செயல் மிகப்பெரிய வல்ல செயலுக்கு அடித்தளமாய் இருந்தது என்றால் அது மிகையாகாது. நம்மிடையே தாராள குணம் உள்ளதா?  அல்லது நமக்குப் போகத்தான் மிச்சம் என்ற எண்ணம் கொண்டு வாழ்கிறோமா என சிந்துத்துப்பார்த்து ஒருவேளை அத்தகைய குணமிருந்தால் அதை மாற்றிக்கொள்ள முயல வேண்டுமென இன்று நாம் அழைக்கப்படுகிறோம்.

கிறிஸ்து கடவுளின் அன்பைப் பகிரவே மனிதனானார். தம்மை முழுவதுமாகக் கையளித்த இறைமகனின் பிறப்புக்காகத் தயாரிக்கும் நாம் பிறருடைய தேவையை உணர்ந்து தாராள மனதுடன் இருப்பதைப் பகிர்பவர்களாக வாழவேண்டும். தொடக்கக் கிறிஸ்தவர்கள் தங்கள் உடைமைகளை இல்லாதவரோடு பகிர்ந்து  கிறிஸ்துவுக்குச் சான்று பகர்ந்தனர். நாமும் அவர்களைப் போல பகிர்தல் வாழ்வில் வளர்ந்து கிறிஸ்துவை எதிர்கொள்ளத் தயாராவோம்.

இறைவேண்டல்
தன்னையே தந்த இறைவா ! மற்றவரின் தேவைகளை உணர்ந்து தாராள உள்ளத்தோடு இருப்பதைப் பகிரும் மனம் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை  பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்