மன்னித்தலில் இறையாசீரா! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

மு.வா: யோசு: 3: 7-10ய, 11, 13-17
ப.பா: திபா: 114: 1-2. 3-4. 5-6
நவ: மத்: 18: 21 - 19: 1

 

மன்னித்தல் என்பது உன்னதமான பண்பு. மன்னித்தல் வழியாகத்தான் இறைவனின் ஆசீர் இருக்கின்றது. நான் குருமடத்தில் படிக்கின்ற பொழுது எனக்கும் என்னோடு படித்த ஒரு சகோதரருக்கும் ஒரு சில கருத்து வேறுபாடுகள் இருந்தன. எனவே அவரைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு ஒரு சில வெறுப்புணர்வு ஏற்பட்டது. என் மனதிலே ஒரு சில அழுத்தம் ஏற்பட்டது. கோபம் அதிகமாக ஏற்பட்டது. எனவே நான் இயல்பாக இருக்கும் நிலை இல்லாமல் போனது. இப்படிப்பட்ட சூழலில் ஒருமுறை ஒரு அருள்தந்தை மன்னித்தல் ஒரு மாபெரும் மருந்து என்ற சிந்தனையில் இறை சிந்தனையை வழங்கினார். அப்பொழுதான் புரிந்து கொண்டேன் மன்னித்தல் வழியாகத்தான் உண்மையான இறையாசீரும் மகிழ்ச்சியும் உண்டு என்று. அதன்பின்பு அந்த சகோதரரிடம் நேரடியாக சென்று நான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டேன். நான் மன்னிப்பு கேட்டவுடன் அந்த சகோதரரும் தன் தவற்றை உணர்ந்து என்னிடம் மன்னிப்பு கேட்டார். பின்பு இறுதிவரை குருமட  பயிற்சியில்  நல்ல நண்பர்களாக இருந்தோம். பல நேரங்களில் என்னுடைய துயரங்களில் துயர் துடைக்கும் மருந்தாக அவருடைய வார்த்தைகள் இருந்ததன.

நம்முடைய அன்றாட வாழ்வில் நாம் மன்னிக்காமல் பிறர் மத்தியில் கோபப்படுகின்ற பொழுது நாமும் பிறரும் வாழ்வை  இழக்கிறோம். மன்னித்தல் தான் நமது மனதுக்கு மகிழ்ச்சி தரும் மாமருந்து. எனவே மன்னித்தலின் மேன்மையை உணர்ந்து எந்த அளவுக்கு மன்னிக்க முடியுமோ, அந்த அளவுக்கு மன்னிக்க முயற்சி செய்வோம். அப்பொழுதுதான் நாம் உண்மையான மகிழ்ச்சியும் மன அமைதியையும் பெறுவோம்

இன்றைய நற்செய்தி மன்னித்தலின் மேன்மையைப் பற்றி விளக்குகின்றது. "ஏழுமுறை மட்டுமல்ல ;ஏழு எழுபது முறையும் நீங்கள் பிறரை மன்னிக்க வேண்டும் " (மத்: 18: 22) என்ற ஆழமான கருத்தை இயேசு வலியுறுத்தியுள்ளார். விவிலியத்தில் ஏழு என்பது முழுமையை குறிக்கின்றது. மன்னித்தல் என்பது முழுமையை குறிப்பதாகும். பிறர் நமக்கு எதிராக குற்றம் செய்தாலும் நாம் அவர்களை முழுமனதோடு மன்னிக்க முயற்சி செய்கின்ற பொழுது நாம் மறுக்கிறிஸ்துவாக மாறிவிடுகிறோம். எனவே இந்த நன்றி கெட்ட காலத்திலும்,  மாயக் கவர்ச்சிகள்  நிறைந்த காலத்திலும் நமக்கு எதிராக குற்றம் செய்த பிறரை முழுமையாக மன்னிக்க முயற்சி  செய்வோம். அப்பொழுது நாம் வாழ்வில் நிறைவையும் மகிழ்வையும் பெறமுடியும். மன்னித்து இறைவனின் ஆசியைப் பெற நாம் தயாரா?

 இறைவேண்டல் :
மன்னிக்கும் வள்ளலே எம் இறைவா! எங்கள் அன்றாட வாழ்வில் மன்னிக்கும் நல்ல  மனநிலையைத் தாரும். அன்று நீர் சிலுவையில் தொங்கிய பொழுது உமக்கு எதிராக குற்றம் புரிந்த வரை மன்னித்தது போல, நாங்களும் பிறரை மன்னிக்கும் நல்ல மனநிலையைத் தாரும். ஆமென்.

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை  பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Daily Program

Livesteam thumbnail