அருளாடையை மீண்டும் அணிவோமா! | அருட்பணி. குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

பாஸ்கா காலம்-முதல் வாரம் வெள்ளி
I: திப:  4: 1-12
II: திபா :118: 1-2,4, 22-24, 25-27
III:யோவா: 21: 1-14

உயிர்ப்புக் காலம் மீண்டும் மீண்டும் இயேசு நமக்கு அருளிய மீட்பினை நினைவுபடுத்தி ஆண்டவர் நமக்கு பொழிந்துள்ள அருளின் நிறைவை உறுதிப்படுத்துகிறது. நம்மையெல்லாம் தொடக்கம் முதலே நம் ஆண்டவர் அருளால் உடுத்தியுள்ளார். நாமோ நம் பலவீனங்களால் அவ்வருளாடையை இழக்கிறோம். அதை மீண்டும் உடுத்தினால் ஆண்டவரை நாம் அறிந்துகொள்ளலாம் என்பதை இன்றைய நற்செய்தி நமக்கு உணர்த்துகிறது.

இயேசுவின் சீடர்கள் என்று பெருமிதத்தோடு சொல்லிக்கொண்டு அவர் பின்னே மகிழ்வோடு சென்றனர் திருத்தூதர்கள். இயேசு அருஞ்செயல்கள் செய்த போதெல்லாம் அவரோடு இருப்பதில் மகிழ்ந்தார்கள். ஆனால் அவருடைய பாடுகள், இறப்பு போன்ற சமயங்களில் சிதறுண்டார்கள். இயேசுவால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களாய் தாங்கள் பெற்றிருந்த அருளாடையை அவர்கள் களைந்தார்கள். காரணம், பயம்.  துன்பத்தை ஏற்க தைரியமின்மை. இயேசு உயிர்த்த பின்னும் இந்நிலை தொடர்ந்தது. தங்கள் பழைய வாழ்வை வாழ ஆரம்பித்தனர். மனிதர்களைப் பிடிக்க அழைக்கப்பட்டவர்கள் மீண்டும் பழைய தொழிலான மீன்பிடித்தலை நாடினர்.

ஆண்டவர் அவர்களை அப்படியே விட்டுவிட்டாரா?இல்லை. தன்னுடைய இடையீட்டை மீண்டும் தருகிறார். தான் அவர்களோடு இருப்பதை உணர வைக்கிறார். வலையை வலப்பக்கம் போடுங்கள் என்று சொல்லி ஆண்டவரிடம் நம்பிக்கை கொள்ளத் தூண்டுகிறார். அங்கே ஆண்டவரை சீடர்கள் கண்டு கொண்டனர். மீண்டும் அருளாடையை உடுத்தினர்.
இதைத்தான் ஆடையைக் களைந்திருந்த பேதுரு அதை இடையில் கட்டிக்கொண்டு கடலிலே குதித்து இயேசுவை நோக்கி விரைந்தோடிய செயல் நமக்கு உணர்த்துகிறது.

ஆண்டவர் நம்மோடுதான் இருக்கிறார். நாம் நமது பழைய வாழ்வைத் தேடிச் செல்வதை அவர் ஒருபோதும் விரும்புவதில்லை. நமக்கு தந்த அருளாடையை அவர் அகற்றுவதில்லை. நாம் தான் நமது அவநம்பிக்கை, பயம், பாவம் போன்றவற்றால் அருளை இழக்கிறோம். சீடர்கள் இயேசுவை மீண்டும் அறிந்தது போல நாமும் அறிய வேண்டும். இழந்த அருளாடையை மீண்டும் உடுத்திக்கொண்டு அவரை நோக்கிச் செல்ல வேண்டும். நமக்காக அவர் காத்திருப்பார். தயாரா?

இறைவேண்டல் 
அன்பு இறைவா!  நாங்கள் எங்கள் பலவீனத்தால் களைந்திருந்த அருளாடையை மீண்டும் உடுத்திக்கொண்டு உம்மை நோக்கி விரைந்து வர அருள்தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்