தொண்டு ஆற்றிட தயாரா? | அருட்பணி. குழந்தைஇயேசு பாபு | Maundy Thursday

புனித வியாழன்-ஆண்டவருடைய இரவு விருந்து
I: வி.ப 12:1-8, 11-14
II: திபா :116:12-13,15-16,17-18
III : 1கொரி 11:23-26
IV:யோவா:13:1-15

நாம் ஒவ்வொருவரும் பிறருக்கு தொண்டு செய்து அதன் வழியாக இறைவனை மகிமைப்படுத்த அழைக்கப்படுகிறோம். தொண்டு செய்வதில் தான் உண்மையான நிறைவு இருக்கிறது. நாம் பிறருக்கு உதவி செய்யும் பொழுது அவர்களின் பார்வையில் நாம் கடவுளாக மாறுகிறோம்.  இந்தப் பெரிய வியாழன் நாளில் ஆண்டவர் எந்த நோக்கத்திற்காக இறுதி உணவு விருந்தை ஏற்பாடு செய்தார் என்று தியானிக்கலாம்.

இறுதி இராவுணவு நாளாகிய இன்று தான் ஆண்டவன் இயேசு குருத்துவத்தை ஏற்படுத்தினார். குருத்துவம் என்பது இறைவனின் ஒப்பற்ற கொடை. இறைவனின் பணியை ஆழமாக செய்து இயேசுவின் பிரதிநிதியாக பணி செய்திட ஒரு அழைப்பு. இயேசுவைப்போல இந்த உலக மக்களின் மீட்புக்காக பாவம் போக்கும் பலிசெலுத்தும் குருவாக வாழ ஒரு குருவானர் ஒப்புக்கொள்கிறார். குருத்துவ வாழ்வு இயேசுவின் வழியாக தன்னுடைய திருத்தூதர்களுக்கு சென்றது. திருத்தூதர் வழியாக திருத்தந்தை,  ஆயர்கள்,  குருக்கள் போன்றவர்களுக்கு இயேசுவின்  குருத்துவம் சென்றது.  இயேசு குருவாக தன்னை வெளிப்படையாக காட்டிக் கொள்ளா விட்டாலும்,  குருத்துவத்தின் மேன்மை உணர்ந்து சிறப்பான பணிகளைச் செய்தார். இதைத்தான் ஒவ்வொரு குருவானவரும் செய்ய அழைக்கப்படுகிறார். நாம் வாழும் இந்த நவீன காலகட்டத்தில் குருக்கள் மீதான மதிப்பு மரியாதையும் குறைந்து கொண்டே இருக்கிறது. அவர்களை இயேசுவின் பிரதிநிதியாக ஏற்றுக் கொள்ளாமல் தனிப்பட்ட மனிதராக பார்க்கக்கூடிய நிலை இருக்கிறது. அவற்றையெல்லாம் கடந்து ஒவ்வொரு குருவும் இயேசுவின் மறுபிம்பம் என்பதை உணர்ந்து திருப்பலியில் பங்கெடுக்க வேண்டும். ஒவ்வொரு குருவும் இயேசுவின் பெயரால் நற்செய்தி அறிவித்து பேய்களை ஓட்டி நோய்களை குணமாக்குகிறார் என்பதை ஏற்று நம்ப வேண்டும்.  எனவே இயேசு குருத்துவத்தை  ஏற்படுத்திய இந்த நாளில் நாம் சிறப்பான விதத்தில் அனைத்து குருக்களுக்காக செபிப்போம். குருக்கள் செய்கின்ற போதிக்கும் பணி,  புனிதப்படுத்தும் பணி மற்றும் வழிநடத்தும் பணி போன்றவற்றை சிறப்பாக செய்ய ஒவ்வொரு மனிதரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அதில் தான் கடவுள் இயேசு மகிமையும் நிறைவும் அடைவார். தன்னுடைய குருத்துவத்தை இயேசு பிறரோடு பகிர்ந்தது போல திருமுழுக்கு பெற்ற ஒவ்வொருவரும் பொது குருத்துவத்திலோ பங்கு பெற அழைக்கப்படுகிறோம்.  எனவே குருத்துவத்தை மதித்து இயேசுவினுடைய அருளையும் ஆசீர்வாதத்தையும் பெற்றுக் கொள்வோம்.

இயேசுவின் இந்த இறுதி இராவுணவு உறவு பரிமாற்றமாக இருக்கிறது. ஆண்டவர் இயேசு இந்த உலகை விட்டு செல்வதற்கு முன்பாக தன்னோடு பயணித்த சீடர்களை நன்றியோடு நினைத்துப் பார்த்து அவர்களுக்கு பிரியா விடை உணவு வழங்குகிறார். இது எதை சுட்டிக் காட்டுகிறது என்றால் நாம் ஒவ்வொருவரும் நம் உறவை உணவை பகிர்வதன் வழியாக வலுப்படுத்த அழைக்கப்படுகிறோம். எனவே புனித வாரத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் நாம் நம்மால் முடிந்த வரை நம்மிடம் இருப்பவற்றை பிறரோடு பகிர்ந்து நல்லுறவை வலுப்படுத்த முயற்சி செய்வோம். அதிலும் குறிப்பாக உணவு உறவின் அடையாளம் என்பதை உணர்ந்து இயேசுவைப் போல விருந்தோம்பல் பண்பில் சிறந்து ஆண்டவன் அன்பு பிள்ளைகளாக மாற இந்த நாளில் அழைக்கப்படுகிறோம்.  

 இராவுணவு நாளாகிய இன்று தொண்டு செய்பவர்களாக வாழ அழைக்கப்படுகிறோம்.நம்முடைய படிப்பு, பணம், வசதி போன்றவற்றை கடந்து தாழ்ச்சியோடு இறைவனுக்கு நன்றி செலுத்தி தொண்டு செய்யக்கூடிய மனநிலையில்  வளர வேண்டும். இதற்கு மிகச்சிறந்த உதாரணம் நம் ஆண்டவர் இயேசு. தன்னுடைய சீடருடைய கால்களை கழுவுவதைக் கொண்டு இயேசுவின் தொண்டு செய்யக்கூடிய மனநிலையை அறிய முடிகிறது. யூத சமூகத்தில் இயேசு வாழ்ந்த கால கட்டத்தில்  கால்களை கழுபவர்கள் அடிமைகள். ஆனால் ஆண்டவர் இயேசு தாழ்ச்சியான மனநிலையில் தொண்டு செய்வதின் மேன்மையை நம் முன்னால் வாழ்ந்து தொண்டு செய்ய இந்த நாளில் அழைப்பு விடுத்துள்ளார். எனவே நம்முடைய மனித வாழ்வில் முடிந்தவரை மனித சேவைல் புனிதம் கண்டு ஏழையின் சிரிப்பில் இறைவனை காண முயற்சி செய்வோம்.

இந்த இறுதி இரா உணவில் இயேசு நற்கருணை ஏற்படுத்தினார். இந்த உலகத்தில் முதல் திருப்பலி இயேசுவால் ஒப்பு கொடுக்கப்பட்டது.  இயேசு இந்த உலகம் மீட்பு பெற தன்னுடைய உடலையும் இரத்தத்தையும்  ஆன்ம  உணவாக அளித்து இன்றளவும் நம்மைத் தூய்மையின் பாதையில் வழிநடத்திக் கொண்டிருக்கிறார்.  திருப்பலி வெற்றுச் சடங்கு என நம்மில் பல நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் திருப்பலியில் இயேசு தன்னையே முழுமையாக பலியாக ஒப்புக்கொடுத்து புது படைப்பாக நம்மை மாற்றுகிறார் . எனவே இயேசுவின் பிரதிநிதியாக திகழக்கூடிய குருக்கள் வழியாக நற்கருணை  கொண்டாட்டத்தில் முழுமையாக இணைந்து இறைவனின் பேரன்பை உணர்வோம்.

இவ்வாறாக பெரிய வியாழன் நாளாகிய இன்று நம் கத்தோலிக்க குருக்கள் அனைவருக்காகவும்  சிறப்பான விதத்தில் செபிப்போம். இயேசு தன்னோடு பயணித்தவர்களுக்கு வயிறார உணவளித்து தன் உறவை வலுப்படுத்தியதை போல,  நாமும் பசியில் உள்ளவர்களுக்கு முடிந்தவரை உணவளிப்போம்.அதுதான் சிறந்த கொண்டாட்டமாக இருக்க முடியும். நாம் தாழ்ச்சியோடு பிறருக்கு தொண்டு செய்யக் கூடியவர்களாக வாழ அழைக்கப்படுகிறோம். தொண்டு செய்யக்கூடிய நல்ல மனநிலையை இந்த நாளில் இயேசுவிடம்  கேட்போம். இயேசு  ஏற்படுத்திய நற்கருணை கொண்டாட்டத்தில் முழுமையாக பங்கெடுத்து திராட்சை கொடிகள் செடியோடு இணையும் பொழுதுதான் மிகுந்த பலன் கொடுக்கும் என்பது நாம் அறிந்ததே. எனவே ஒவ்வொரு நற்கருணை கொண்டாட்டத்திலும் இயேசுவோடு  இணைந்திருப்போம்.அப்பொழுது நிச்சயமாக நாம் பொருள் நிறைந்த விதத்தில் பெரிய வியாழனை கொண்டாட முடியும்.
இறைவேண்டல்
அன்பான இறைவா!  இறுதி இராவுணவின் வழியாக  குருத்துவத்தை ஏற்படுத்தி இன்றளவும் இந்த உலகத்தை வழிநடத்திக் கொண்டிருக்கிறீர். அதற்காக நாங்கள் நன்றி செலுத்துகிறோம். சீடர்களின் பாதங்களை கழுவியதன் வழியாக தொண்டு செய்வதின் மேன்மையை எங்களுக்கு காண்பித்து இருக்கிறீர் அதற்காக நன்றி செலுத்துகிறோம். சீடர்களுக்கு உணவு கொடுத்து உறவின் மேன்மையை உயர்த்தியதைப் போல நாங்களும் உணவு இல்லாதவர்களுக்கு உணவு கொடுக்கக்கூடிய நல்ல மனநிலையை கொடுத்துக் கொண்டிருப்பதற்காக நன்றி செலுத்துகிறோம். நற்கருணையை ஏற்படுத்தி   உம்முடைய உடலையும் இரத்தத்தையும் ஆன்ம உணவாக கொடுத்து எம்மை உமது பாதையில் வழிநடத்திக் கொண்டிருப்பதற்காக நன்றி செலுத்துகிறோம். அன்பு ஆண்டவரே!  நாங்கள் தொடர்ந்து உமது பாதையில் சாட்சியமுள்ள கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ்ந்திட அருளைத் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்