கடவுள் அருளும் ஞானத்தைக் கொடையெனக் கொள்வோம்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil
7 பிப்ரவரி 2026,
பொதுக்காலம் 4-ஆம் வாரம் – சனி
1 அரசர் 3: 4-13
மாற்கு 6: 30-34
கடவுள் அருளும் ஞானத்தைக் கொடையெனக் கொள்வோம்!
முதல் வாசகம்.
அரசர் தாவீதை அடுத்து அவரது மகன் சாலமோன் அரசராக அரியணையில் அமரந்தார். அக்காலத்தில் கிபியோன் மிக முக்கியமான உயரமான இடங்களில் ஒன்றாக இருந்ததால், பலிகளைச் செலுத்துவதற்காக அவர் கிபியோனுக்குச் செல்வது வழக்கம். அங்கு இருக்கும்போது, கடவுள் இரவில் ஒரு கனவில் அவருக்குத் தோன்றி, அவர் கேட்பதையெல்லாம் அவருக்கு வழங்க முன்வருகிறார்.
சாலமோன் தனது சொந்த அனுபவமின்மையையும் இளமையையும் கருத்தில் கொண்டு, செல்வம், நீண்ட ஆயுள் அல்லது தனது எதிரிகள் மீது வெற்றியைக் கேட்பதற்குப் பதிலாக, கடவுளின் எண்ணற்ற மக்களை நீதியுடன் ஆளவும், நன்மை தீமையைப் பிரித்தறியவும் ஒரு பகுத்தறிவு மற்றும் ஞானமான இதயத்தை அவர் கடவுளிடம் கேட்டார்.
சாலமோனின் கோரிக்கை தன்னலமற்றதாக இருந்ததனால், கடவுள் மகிழ்ச்சியற்று மக்களை நன்றாக வழிநடத்தவும் சேவை செய்யவும் அவருக்கு ஞானம் மற்றும் பகுத்தறியும் ஆற்றலை கொடையாக வழங்கினார். அவர் கேட்டதை விட அதிகமாகவும், மற்ற அரசர்களோடு ஒப்பிட முடியாத மரியாதை மற்றும் செல்வங்களையும் அவருக்கு வழங்கினார் என்று அறிகிறோம்.
நற்செய்தி.
பணிக்கு அனுப்பப்பட்ட திருத்தூதர்கள் திரும்பி வந்ததும் அவர்கள் செய்தவை, கற்பித்தவை எல்லாம் அவருக்குத் தெரிவித்தார்கள்.
அவர்களுக்கு ஓய்வு தேவை என்பதைக் கண்டு, இயேசு அவர்களை அமைதியான, பாலைநிலத்திற்கு தன்னுடன் செல்லும்படி அழைக்கிறார். இருப்பினும், அவர்கள் படகில் செல்ல முயற்சிக்கும்போது, திரளான மக்கள் அவர்களை கால்நடையாகப் பின்தொடர்ந்து, அவர்கள் செல்வதற்கு முன்பே வந்து சேருகிறார்கள். அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள்மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார் என்று மாற்கு விவரிக்கிறார்.
சிந்தனைக்கு.
சீடர்களின் ஓய்வைத் தடுத்ததற்காக கூட்டத்தினரை கடிந்துகொள்வதற்குப் பதிலாக, இயேசு அவர்களுக்குப் போதிக்கத் தொடங்குகிறார் என்று அறிகிறோம்.
இயேசுவோ, மக்களின் தேவைக்கு முன்னுரிமையை அளித்ததை இன்று அறிய வருகிறோம். நாம் சோர்வாக இருந்தாலும் அல்லது வேறு திட்டங்களைக் கொண்டிருந்தாலும் கூட, மற்றவர்களின் தேவைகளுக்குக் கவனம் செலுத்த இயேசுவின் முன்மாதிரி நம்மை சவாலாக அமைகிறது. எனது வாழ்வு, எனது நேரம் என்று குடும்பம் என்று வாழ்வது நமது சீடத்துஉ வாழ்வைச் சீரழிக்கும். பொதுநலச் சிந்தனையும் செயலும் தமக்கு இன்றியமையாத இரு பண்புகளாக விளங்க வேண்டும்.
முதல் வாசகத்தில், அரசராகிவிட்ட சாலமோன் தன்னை கனவில் சந்தித்த கடவுளிடம் உலகம் சார்ந்த எத்தனையோ செல்வங்கைக் கேட்டிருக்கலாம். ஆனால், அவர் மக்களை நில்வழி நடத்த ஞானத்தைக் கேட்டார்.
மேலும், இன்றைய நற்செய்தியில், சீடர்கள் தங்கள் ஊழியத்திலிருந்து திரும்பி வந்ததும், அவர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் செய்த அனைத்தையும், கடவுளின் சக்தி எவ்வாறு அவர்களிடத்திலும் செயல்பட்டது பற்றிய விபரங்களைச் சொல்ல விரும்பினார்கள். அதனால்தான், இயேசு அவர்களை "பாலைநிலமான இடத்திற்குத் தனியே போய்ச் சிறிது நேரம் ஓய்வெடுக்க வாருங்கள்" என்று அழைத்தார். ஆம், இயேசு தம் சீடர்களின் அனுபவங்களை யாதொரு இடையூறும் இன்றி கேட்றிய நேரத்தையும் இடத்தையும் ஒதுக்கினதை அறிகிறோம்.
இயேசு கூட்டத்தின் மீது காட்டிய இரக்கம் திருத்தூதர்களுக்கு அடுத்த முக்கியமான பாடமாக மாறியது. அவர்களின் பணி அவர்களுக்காகவோ அல்லது அவர்கள் ஊழியம் செய்த தெய்வீக அதிகாரத்தைக் கண்டு வியப்பதற்கோ அல்ல. மாறாக, அது "மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப் போல" இருந்த கடவுளுடைய மக்களைப் பற்றியது என்பதை இயேசு இங்கே அவர்களுக்குக் கற்றுத்தருகிறார்.
ஆம், நமது இறைபணி என்பது நமக்கானது அல்ல. சாலமோன் தனது சுயநலத்துக்காகக் கடவுளிடம் ஞானம் கேட்கவில்லை. மக்களை நல்லாட்சி செய்ய ஞானம கேட்டார். நற்செய்தியிலும் இயேசு மக்களின் நலம் கருதி நல்லானாக செயல்படுகிறார். சீடர்கள் நமது பணிவாழ்வும் பொதுநலம் பொருந்தியதாக இல்லையெனில் அனைத்தும் வீண்.
நமது பணி எப்போதும் கிறிஸ்துவின் இருதயத்தைப் பிரதிபலிக்க வேண்டும், அவர் அனைவருக்கும் முன்மாதிரியாகக் காட்டிய அதே இரக்கத்தையும் அன்பையும் நம்மில் வளர்க்க வேண்டும்.
இறைவேண்டல்.
இரக்கமுள்ள ஆண்டவரே, சாலமோனைப் போலவே, எல்லாவற்றிற்கும் மேலாக ஞானத்தைத் தேட எனக்கு உதவுவீராக. உம்மைப் போல இரக்கமுள்ள இருதயத்தை எனக்குத் தாரும், உமது உடனிருப்பில் இளைப்பாற என்னைத் திடப்படுத்துவீராக. ஆமென்.
ஆர்கே. சாமி (மலேசியா)
+6 0122285452