ஆதாயம் தேடாத மனநிலையை வளர்ப்போமா! | அருட்பணி. குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
தவக்காலம் -புனித வாரம் புதன்
I:எசா: 50:4-9
II: திபா: 69:7-9, 20-21, 30 , 32-33
III:மத்: 26: 14-25
நாம் வாழும் இவ்வுலகில் எல்லாவற்றிற்கும் ஏதேனும் ஆதாயம் தேடும் மனிதர்களாகவே நாம் வாழுகிறோம். " எங்கள் கடையில் இந்த பொருட்கள் வாங்கினால் உங்களுக்கு இவ்வளவு பணம் லாபம்" என்று கூறி பொருட்களை வாங்குபவர்களுக்கும் விற்பவர்களுக்கும் ஆதாயம் தேடி தரும் விளம்பரங்கள் ஏராளம். வீட்டில் தன் குழந்தையை ஒரு வேலை செய்ய சொல்வதற்கு " டிப்ஸ்" என்ற பெயரில் ஆதாயம் கொடுக்க வேண்டியிருக்கிறது. இதைச் செய்வதால் எனக்கென்ன பயன்? என்ற சுயநலப்போக்கு மலிந்து விட்ட அவல நிலை. இதற்கு நாமும் விதிவிலக்கல்ல.பணமும் பதவியும் கிடைப்பதற்காக உயிர்களை அழிக்கக் கூட துணிந்த சமூகமாக மாறிவிட்டது நம் சமூகம்.
இன்றைய நற்செய்தியில் இயேசுவைக் காட்டிக்கொடுக்கத் துணிந்த யூதாஸ் இஸ்காரியோத்து தனக்கு ஆதாயம் தேடுகிறான். " இயேசுவைக் காட்டிக்கொடுத்தால் எனக்கு என்ன தருவீர்கள்? " என யூதர்களிடம் உயிருக்கு பேரம் பேசிகிறான். மூன்று ஆண்டு காலம் இயேசுவோடு வாழ்ந்த காலத்தில் பணப்பை அவனிடம் இருந்த போது நன்றாக ஆதாயம் கண்டுவிட்ட அவனுடைய மனநிலை இயேசுவின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நிலையிலும் கூட ஆதாயம் தேடுவதை நிறுத்தவில்லை.
இந்நற்செய்தி நமக்குக் கூறும் செய்தி என்ன? இயேசு நம்மை ஆதாயம் தேடா மனிதர்களாய் வாழ அழைக்கிறார் என்பது தான். தீய காரியங்கள் செய்யவே கூடாது.அது மட்டுமல்ல நன்மையான காரியங்கள் செய்தாலும் அவற்றிற்கான பல னை நாம் எதிர்பார்க்கக் கூடாது. ஒருவருக்கு நாம் நன்மை செய்கிறோம் என்றால் அவர் அடைகின்ற மகிழ்ச்சி மட்டுமே நாம் எதிர்பார்க்கின்ற ஆதாயமாக இருக்க வேண்டும். அதனால் கடவுளுக்கு நாம் கொடுக்கின்ற மாட்சி ஒன்றே நாம் அடைகின்ற பிரதி பலனாய் இருக்க வேண்டும்.
ஆம் அன்புக்குரியவர்களே. தவறுதலாகக் கூட நமக்கு ஆதாயம் கிடைக்கிறது என்பதற்காக யாரோடும் இணைந்து பிறர் வாழ்வைக் கெடுக்கும் எண்ணத்தை நாம் கைவிட வேண்டும். கைமாறு கருதாது பிரதிபலன் எதிர்பார்க்காது, பிறருக்கு நன்மை செய்த நம் ஆண்டவர் இயேசுவைப்போல, அவரைப் பின்பற்றி மக்களுக்கு பணிசெய்த புனிதர்களைப்போல, சுயநலமில்லா சமூக ஆர்வலர்களைப்போல நாமும் பணிசெய்ய முற்படுவோம். ஆதாயம் தேடும் மனநிலையைக் களைவோம்.
இறைவேண்டல்
அன்பு இறைவா! பிறருக்கு கெடுதல் செய்யாத நல்ல மனநிலையையும் ஆதாயம் தேடாது நன்மைசெய்யும் மனத்தையும் எமக்குத் தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்