கல்விச் சேவை | அருட்பணி. ஜெ.ஞானசேகரன் | Veritas Tamil

தமது வயிற்றைக் கழுவுவதற்காக அடுத்த வீட்டுக் கழிப்பிடத்தைச் சுத்தம் செய்யும் மனிதர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால், அடுத்தவரது கழிப்பறையைச் சுத்தம் செய்து, அதில் கிடைக்கும் வருமானத்தில் ஏழைகளுக்கு உதவும் லோகநாதன் முகவரி தேடா மாமனிதராக நம்முன் இருக்கிறார். கோயம்புத்தூரில் வசிக்கின்ற இவரும், இவரது மனைவி சசிகலா தேவியும் இருபது ஆண்டுகளாக ஆற்றிக்கொண்டிருக்கின்ற கல்விச் சேவையை எண்ணி வியக்க முடிகின்றது.

கோடிக்கணக்கில் பணம் வைத்திருப்பவர் உதவ மனமின்றியும் கல்வியைக் கோடிக்காக விற்றுக்கொண்டிருக்கும் இந்தச் சமூகத்தில், பிறர் கழிப்பிடத்தைச் சுத்தம் செய்து அதில் வரும் வருமானத்தை வைத்து அறியும்போது மனிதநேய மனிதர்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை உணர முடிகின்றது.

லோகநாதன் ஒரு பணிமனையில் வெல்டிங் வேலை செய்து தனது குடும்பத்தைப் பராமரித்து வருகின்றார். தனது வருமானம் தன் குடும்பத்திற்குப் போதுமானதாக இருந்ததால் வேலை போக, மற்ற நேரங்களில் வீடுகளிலும், பொது இடங்களிலும் உள்ள கழிப்பறைகளைச் சுத்தம் செய்து அதில் கிடைக்கும் வருமானத்தைக்கொண்டு ஏழைக் குழந்தைகள் படிக்க உதவி செய்தார். இவரோடு சேர்ந்து இவரது மனைவியும் உதவி செய்துவருகிறார்.

நேரம் கிடைக்கிற போதெல்லாம் சைக்கிள் மிதித்து வீடுவீடாய்ப்போய் உபயோகப்படுத்தாத துணிகளைச் சேகரித்து, அதை ஆதரவற்ற இல்லங்களுக்குக் கொடுக்கிறார். ஒரு தனியார் மருத்துவமனையின் கழிப்பறைகளைச் சுத்தம் செய்து, அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து அதிகப் பிள்ளைகளுக்கு உதவ வேண்டும் என்கின்ற ஆசை லோகநாதனின் அடிமனதிலிருந்து எழும் வார்த்தைகளாக இருக்கின்றன.

இதுவரை இந்தத் தம்பதியினர் 1200 குழந்தைகள் படிப்பதற்கு உதவி செய்துள்ளனர். கழிவறையைச் சுத்தம் செய்யும் வேலையைக் கேவலமாகப் பார்க்கும் இந்தச் சமூகத்தில், இந்த வேலை வழியாக ஏராளமான ஏழைக் குழந்தைகளின் அறிவுக்கண்ணைத் திறக்கும் லோகநாதன் நம்முன் அறிவொளியாக ஒளிவீசுகின்றார்.

பெறுபவர்களைவிட கொடுப்பவர்கள்தான் அதிக மகிழ்ச்சி கொள்வார்கள்.

எழுத்து 
அருட்பணி. ஜெ.ஞானசேகரன்.