நன் மரம் | அருட்பணி. ஜெ.ஞானசேகரன் | Veritas Tamil
கேரளாவில் கொச்சியில் உணவகம் நடத்திவரும் மினு பவுலின் என்ற பெண் புதுமையான செயல்பாட்டை மேற்கொண்டுள்ளார். தனது உணவக வாசலில் குளிர்சாதனப் பெட்டி ஒன்றை வைத்துள்ளார். இதில் சாப்பிட வழியில்லாத ஐம்பது பேருக்குத் தினமும் உணவுகளை வைக்கிறார். இதற்கு ‘நன்ம மரம்' என்று பெயரும் வைத்துள்ளார்.
24 மணி நேரமும் இந்தக் குளிர்சாதனப் பெட்டியில் உணவு இருக்கும். எந்த நேரமும் எவரும் இதில் உணவு வைக்கலாம். இவ்வாறு வைக்கப்படும் உணவுகளைப் பசியில் வாடும் யாரும் எடுத்து உண்ணலாம்.
இது தொடர்பாக மினு பவுலின் அவர்கள் பேசும்போது, “வயதான பலர் வீடில்லாமல் உணவுக்காகக் குப்பைகளில் தேடுவதைப் பார்த்தேன். பசியைப் போக்கப் பலர் வழியில்லாமல் தவிப்பது என்னைப் பாதித்தது. இதற்காக எனது உணவகத்தில் 'நன்ம மரம்' என்னும் உணவு வங்கியைத் தொடங்கி இருக்கிறேன்” என்று கூறினார்.
ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன் என்று அனைவருக்கும் பொதுவாக இறைவன் வழங்கி இருக்கும் ஒன்றுதான் பசி. நாம் உழைப்பதே பசியைப் போக்குவதற்குத்தான்.
எளியவரின் வயிற்றுப் பசியைக் கண்டு இரங்குபவரின் இதயம் இறைவனின் இதயமாகிறது.
எழுத்து
அருட்பணி. ஜெ.ஞானசேகரன்.