நமக்கான நற்செய்தி பணியில் கவனம் செலுத்துவோம்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

18 மே 2024  

பாஸ்கா 7 ஆம் வாரம் - சனி
 
தி. பணிகள்  28: 16-20, 30-31

யோவான் 21: 20-25

முதல் வாசகம்.

 பாஸ்கா காலத்தின் தொடக்கத்தில் திருத்தூதர் பணிகள் நூலில் இருந்து முதல் வாசகங்களைத் தொடங்கினோம். இப்பயணம் இன்று முடிவடைகிறது.  புனித பவுல் சிறிய ஆசியா பகுதிகளில் புறவினத்தார் மத்தியில் சுற்றித் திரிந்து, நற்செய்தி அறிவித்து, பலரை மனமாற்றி கிறிஸ்துவுக்குள் கொண்டு வந்தார். இப்போது இயேசு கிறிஸ்துவின் திட்டப்படி, உரோமையில் உள்ளார். அவரது பணி வாழ்வின்  கடைசிப் பகுதியைப் பற்றி இன்று அறிய வருகிறோம்.  

அவருடைய வாழ்க்கையின் கடைசி இரண்டு வருடங்கள், உரோமையில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.  பவுல் உரோமையில் உள்ள யூத சமூகத்தினரிடம் பேசுகையில், தனது வாழ்க்கையில்  அவர் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தியக் காலத்தைவிட இப்போது,  யூதர்களின் ஒரே கடவுள் மீது  இன்னும் ஆழமான நம்பிக்கை கொண்டிருப்பதாகக் கூறுகிறார்.  இயேசுவை இஸ்ரயேலின் நம்பிக்கையாகவும் வாக்களிக்கப்பட்ட மீட்பராகவும் காணும்படி வேண்டுகிறார்.  


நற்செய்தி.

இன்று  யோவான் நற்செய்தியின் இறுதி பகுதிநைத் தொடுகிறோம். நான்காவது நற்செய்தியின் ஆசிரியரான புனித யோவானின் வாழ்க்கையைப் பற்றிய ஒரு முக்கிய குறிப்பை வாசிக்கிறோம்.

அன்பான சீடர்: 

இயேசு அன்பு செய்த  சீடர், இந்த நற்செய்தியின் ஆசிரியர் யோவான் என்று பாரம்பரியமாக அடையாளம் காணப்பட்டு வருகிறார்.  கடைசி இராவுணவின்போது  இயேசுவின் மார்பில் சாய்ந்துகொண்டு, காட்டிக்கொடுப்பவரைப் பற்றிக் கேட்டபோது, இந்தச் சீடர் இயேசுவுடனான நெருங்கிய உறவால் தனித்துவம் பெற்றார். 

நேற்று ஆண்டவராகிய இயேசுவிடமிருந்து ஆடுகளை மேய்க்க வேண்டிய பொறுப்பையும் அதிகாரத்தையும் பெற்றுக்கொண்ட பேதுரு, இன்று யோவான் வருவதைக் கண்டு, இயேசுவிடம், இவருக்கு என்ன நேரிடவுள்ளது என்று கேட்டார். 

இயேசுவின் பதில்: 

“நான் வரும்வரை இவன் இருக்க வேண்டும் என நான் விரும்பினால் உனக்கு என்ன? நீ என்னைப் பின்தொடர்ந்து வா”  என்று இயேசு பதிலளித்தார்.  பிறரைப் பற்றிக் கவலைப்படுவதைவிட்டு,  பேதுரு  இயேசுவைப் பின்தொடர்வதில் கவனம் செலுத்துவதற்கு இயேசு அவரை திசை திருப்புகிறார்.

“நான் வரும்வரை இவன் இருக்க வேண்டும் என நான் விரும்பினால் உனக்கு என்ன? எனும் இயேசுவின் பதிலை அன்று பலர் தவறாகப் புரிந்துகொண்டார்கள். ஆம்,  அன்பு சீடரான யோவான் இறக்க மாட்டார் என்ற எண்ணம் ஆரம்பகால கிறிஸ்தவ சமூகத்தில் பரவியது. இருப்பினும், சீடர் இறக்க மாட்டார் என்று இயேசு வெளிப்படையாகக் கூறவில்லை.  மாறாக, “நான் வரும்வரை இவன் இருக்க வேண்டும் என நான் விரும்பினால், உனக்கு என்ன?” என்றுதான் கூறினார். 

இந்த நற்செய்தியில் பதிவு செய்யப்படாத  இயேசு செய்தவை வேறு பலவும் உண்டு. அவற்றை ஒவ்வொன்றாக எழுதினால், எழுதப்படும் நூல்களை உலகமே கொள்ளாது என யோவான் இறுதியில் சாட்சியமாகக் கூறுகிறார்.


சிந்தனைக்கு

இன்றோடு நமது பாஸ்கா காலத்திற்கு  விடைகொடுக்கிறோம்.  இந்த காலம் முழுவதும் திருத்தூதர் பணிகள் நூலிலிருந்தும் யோவான் நற்செய்தியிலிருந்தும்  வாசகப் பகுதிகளைக் கேட்டும் சிந்தித்தும் வந்தோம். நாளை பெந்தகோஸ்து பெருவிழா.

இன்றைய வாசகங்களைப் பற்றி நான் சிந்திக்கையில், இன்றைய நற்செய்தியில் புனித பேதுரு இயேசுவின் அன்பு சீடர் யோவானைப் பற்றி பேதுரு கரிசனையுணர்வோடு கேட்ட  கேள்விதான் அதிகமாகத் தொட்டது.   இரவு உணவின்போது இயேசுவின் அருகில் அவர் மார்புப் பக்கமாய்ச் சாய்ந்துகொண்டு, “ஆண்டவரே உம்மைக் காட்டிக் கொடுப்பவன் எவன்?'' என்று யோவான் கேட்டார். அடுத்து, பேதுரு இயேசுவிடம், யோவானுக்கு  என்ன ஆகும்?'' என்று கேட்கிறார்.

பேதுருவுக்குப் பதிலாக, யோவானுக்கு என்ன ஆகும் என்பது உமது கவலையாக இருக்க வேண்டாம்,  நீ என்னைப் பின்தொடர்ந்தால் போதும்" என்றார் இயேசு. ஆம், இப்போது யோவானுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக இயேசுவின் பதில் அமைவதாக நாம் நினைக்கக்கூடும்.  

“நான் வரும்வரை இவன் இருக்க வேண்டும் என நான் விரும்பினால், உனக்கு என்ன?” என்ற இயேசுவின் கேள்வியிலிருந்து இயேசு மீண்டும்  திரும்பும் வரை  யோவான் உயரோடு இருப்பார்  என்று ஆரம்பகால கிறிஸ்தவரகள் நம்பினர்.

நாம் வழக்கமாக   நியாயமாகவும் சமமாகவும் நடத்தப்படத்தான் விரும்புவோம். இயேசுவின் பதிலைக் கேட்டு பேதுரு சற்று கவலைப்படிருக்கலாம். இயேசு பேதுருவை உதாசினப்படுத்தியதாகவும் தோன்றியிருக்கலாம்.  யோவான் இயேசுன் அன்பு சீடர் என்பதால் இயேசு அவருக்கு முன்னிரிமை அளிப்பதாவும் பேதுரு உணர்ந்திருக்கலாம்.

ஒரு கண்ணில் வெண்ணெய் – மற்றொரு கண்ணில் சுண்ணாம்பு என்பது இயேசுவில் இல்லை.  ஆண்டவர் பாரபட்சமற்றவர்.  அவருக்குப் பணிந்து நேர்மையாக வாழ்வோர் அனைவரையும் அவர் ஏற்றுக்கொள்கிறார் (தி.ப.10:35). யோவான் இயேசுவின் அன்பு சீடர் என்பதை யோவான் நற்செய்தியில் மட்டுமே காண்கிறோம் (13:23). இங்கே யோவான் தமது தனித்தன்மையை வெளிப்படுத்த இவ்வாறு எழுதியும் இருக்கலாம். உணமையில் இயேசுவின் சீடத்துவத்தில் வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாகுபாடில்லை. 

இயேசுவின் உண்மை சீடர்கள் என்ற வகையில் நம்மைப் போன்று,   மற்றவர்களும் வளர வேண்டும் என்ற எண்ணத்தில் தான் நாம் மறைப்பணியில் ஈடுபட வேண்டும். திருஅவையில் நம்மைச் சுற்றியிருக்கும் சீடரின் வளர்ச்சி குறித்து பொறாமை எழுமானால், இயேசுவின் சீடத்துவத்திற்கு  நாம் தகுதியற்றவர்களாகி விடுவோம். சீடத்துவம் என்பது  ஒரு குழுமம். யாருக்கு எதை தரவேண்டும், எப்போது தர வேண்டும் என்பது கடவுளின் விருப்பத்திற்கு உட்பட்டது. இங்கே பாகுபாட்டிற்கும், அந்தஸ்துக்குமிடமில்லை. 

பேதுருவைப் போலத்தான் நாம்  அடிக்கடி நம்மை மற்றவர்களுடன் ஒப்பிடுகிறோம். ஆனால் அவ்வாறு ஒப்பிடுவது சரியான அணுகுமுறை அல்ல. இதைதான்  இயேசு பேதுருவிடம் கூறினார். யோவான்  எப்படி இறப்பார் என்பது பேதுருவின் எண்ணமாக இல்லாமல்,  பேதுரு இயேசுவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து  பணியைத் தொடர வேண்டும் என்பதே இயேசுவின் அறிவுரை.

‘எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?’ (மத் 20:15) என்று இயேசு நம்மை கேட்கும்படி இருந்தால் அது சீடத்துவத்திற்குப் பொருந்தாது. 
 
நமக்கென்று சில பணிகளை இயேசு வகித்தளித்துள்ளார். அவற்றை நிறைவேற்றுவதில் கண்ணும் கருத்துமாக இருந்தால் போதும். மற்றவற்றை ஆண்டவர் பார்த்துக்கொள்வார். வீண் பேச்சும், அதிகப் பிரசங்கித்தனமும் உயர்வுக்கு உதவாது.  இடம், பொருள், ஏவல் அறிந்தும் கருத்துரைப்பது இன்றியமையாதது. 


இறைவேண்டல்.

‘நீ என்னைப் பின்தொடர்ந்து வா’ என்று பேதுருவுக்கு அழைப்புவிடுத்த ஆண்டவரே. இவ்வுலக காரியங்களில் எனது கவனத்தைச் செலுத்தி தளர்ந்து போகாமல் உமது நற்செய்திப் பணிக்கு முழுமையாக என்னை அர்ப்பணிக்க உமது ஆற்றலால் என்னைத் திடப்படுத்தியருள்வீராக. ஆமென்


ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452