இயேசுவைப் பகிராத கிறிஸ்தவம் பயனற்றது! | ஆர்.கே. சாமி | VeritasTamil

26 ஏப்ரல் 2024                                                                                          

பாஸ்கா 4 ஆம் வாரம் -வெள்ளி

தி. பணிகள்  13: 26-33                          

யோவான்  14: 1-6

முதல் வாசகம்.

முதல் வாசகத்தில், புனித பவுல்  திருப்பாடல் 2-ல்  "நீரே என் மைந்தர்; இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன் " என்பதானது  இயேசுவைக் குறித்தே எழுதப்பட்டது என்றும், அக்கூற்று இயேசுவில் நிறைவேறியுள்ளது என்றும் மேற்கோள் காட்டி பேசுகறார்.   

அவர் தொடர்ந்து, யூதர்களும்  அவர்களின் தலைவர்களும் இயேசுவை மேசியாவாக அங்கீகரிக்கவில்லை என்றும்,  இயேசுவைக் கொலை செய்ய நியாயமான காரணம் எதுவும் அவர்களுக்குக் கிடைக்காதபோதும், அவரைக் கொலை செய்யுமாறு  ஆளுநரான பிலாத்துவிடம் ஒப்படைத்ததும், இயேசுவின் பாடுகள் மற்றும் மரணம் பற்றிய இறைவாக்குகள்  நிறைவேற ஏதுவாக இருந்தன என்று  தெளிவுற விவரிக்காறர்.

தோடர்ந்து, கடவுள் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினார் என்றும், பலருக்கு  இயேசு தோன்றினார் என்றும் பவுல் சாட்சியம் பகர்கிறார். இயேசுவைக்  கண்டவர்களே சாட்சிகளாக  இயேசுவின் உயிர்த்தெழுதலின் நற்செய்தியை மக்களுக்கு அறிவிக்கிறார்கள் என்று பவுல் மேலும் விவரிக்கிறார்.

நிறைவாக, கடவுள் அவர்களின் மூதாதையர்களுக்கு அளித்த வாக்குறுதியும் இயேசுவின் மூலம் நிறைவேறியது என்று கூறி பவுல் முடிக்கிறார்.   

நற்செய்தி.

இயேசு தம் சீடர்களுக்கு ஆறுதலளிக்கும் வண்ணம்  “நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள்”   என்று தேற்றுகின்றார்.  அவர் தம் தந்தையின் இல்லமான வான்வீட்டில்  உறைவிடங்கள்  பல இருப்பதாகவும் தம் சீடர்களுக்கு அங்கே இடம் தயாரிக்கப் போவதாகவும் உறுதியாகக் கூறுகின்றார். இதில் பெருமைபடவேண்டியது என்னவெனில், அவர் முன்னதாகப் போய் சீடரகளுக்கு இடம் ஏற்பாடு செய்தபின் திரும்பிவந்து அனைவரையும் அழைத்துச் செல்லவிருப்பதாகவும் வாக்களிக்கிறார்  

இயேசுவின் இந்த விளக்கத்தைக் கேட்ட தோமா, இயேசு எங்கு செல்லவுள்ளார் என்பதறியாமல், அவர் போகவிருக்கும் இடத்தை  அறியவிரும்புகிறார். தோமாவுக்குப்   பதிலளிக்கும் விதமாக,  அவரிடம், “வழியும் உண்மையும் வாழ்வும் நானே.⁕ என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை’ என்று கூறுகிறார்.


சிந்தனைக்கு.

வழக்கமாக,  யோவான் நற்செய்தியின் அதிகாரங்கள்  14-17 ஆகியவை, இயேசுவின் "இறுதி இரா  உணவு அல்லது பிரியாவிடை சொற்பொழிவுகள்"  என்று குறிப்பிடப்படுகிறன.  இன்றைய நற்செய்தியின் முதல் வரியையொட்டி சிந்தித்தால், “நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள்” என்கிறார். 

தம்மைக் கைதுசெய்து, பொய்யாகக் குற்றம் சாட்டி, கேலி செய்து, அடித்துக் கொல்லப்படுவதைத் தம் சீடர்கள் விரைவில் காண்பார்கள் என்பதை இயேசு அறிந்திருந்தார். இயேசுவின் கொடூர மரணத்தைக்  கண்டு அவர்கள் அச்சத்தில் மூழ்கிவிடுவார்கள் என்பதை அவர் அறிந்திருந்தார், எனவே அவர்கள் விரைவில் எதிர்கொள்ளும் அச்சத்தால் நற்செய்தப்பணியை கைவிட்டு விடக் கூடாது என்று திடப்படுத்துகிறார். இயேசுவிலும் தந்தை கடவுளிலும் நம்பிக்கை இன்றிமையாதது என்பதை வலியுறுத்தி போதிக்கிறார். 

நம்மில் பலர் பல்வேறு காரணங்களுக்காக பயந்து  பயந்து வாழ்கிறோம். இவ்வுலகில் எதுவும் நிரந்தரம் இல்லை என்ற உண்மை அறிந்திருந்தும் அச்சத்தால் ஆட்கொள்ளப்படுகிறோம்.  " ஆழமான கடவுள் நம்பிக்கையே பயத்திற்கு மருந்து. நமக்கு நம்பிக்கை இருக்கும்போது, நாம் கடவுளின் பாதுகாப்பில் உள்ளோம் என்பதை இயேசு இன்று அறிவுறுத்துகிறார். 

முதல் வாசகத்தில் பவுல் அடிகள் உயிர்த்த  இயேசுவைக்  கண்டவர்களே சாட்சிகளாக  அவரது  உயிர்த்தெழுதலின் நற்செய்தியை மக்களுக்கு அறிவித்தார்கள் கூறுகிறார். இயேசுவின் உயர்த்தெழுதலுக்குப் திருத்தூதர்களும் சீடர்களும் அச்சப்பட்டு ஓடி மறைந்திருந்தால் திருஅவை வளர்ந்திருக்காது. 
நாம் எதிர்கொள்ளும் பய உணர்வு நம்மை வாழவிடாது.  மேலும், பயம் பகுத்தறிவற்ற சிந்தனைக்கு வழிவகுக்கும், பகுத்தறிவற்ற சிந்தனை நம்மை மேலும் மேலும் குழப்பத்திற்கு இட்டுச் செல்லும். இதனால், கிறிஸ்துவுக்கான சாட்சிய வாழ்வு முடங்கிபோய்விடும். நமது கண்களை நாமே குத்திக்கொண்டபோலாகிவிடும். 

இயேசுவின் வழியாகவே நாம் மீட்பையும்   விண்ணக வாழ்வைப் பெறவும் முடியும். ஆகவே, நம் வாழ்க்கைக்கு  ஆதாரமாகவும் வாழ்வும் வழியுமாக இருக்கும் இயேசுவை உலகிற்குத் துணிவோடு வெளிப்படுத்தும் வாழ்வை எப்படி வாழ்வோம் என்று சிந்தித்துச் செயல்பட வேண்டும்.  இயேசுவைப் பிறரோடு பகிராத வாழ்வு, பயனற்ற சாட்சிய வாழ்வு.


இறைவேண்டல்.

அன்புள்ள ஆண்டவரே,  ஒவ்வொரு சோதனையையும் எதிர்கொள்ள எனக்குத் தேவையான தைரியத்தை அளித்து, என் மனதில் தெளிவையும், கலங்கிய என் இதயத்திற்கு அமைதியையும் அளித்தருள்வீராக.  ஆமென்.


ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452