கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு | ஆர்.கே. சாமி | VeritasTamil

8  ஏப்ரல் 2024                                                                                          

பாஸ்கா 2-ஆம் வாரம் - திங்கள்

தி. பணிகள் 2: 14, 22-33                                                                   

மத்தேயு 28: 8-15

கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு (பெருவிழா) 

இன்று திருஅவை ஒரு முக்கியமான நாளை நினைவுகூர்ந்து கொண்டாடுகிறது. மூவொரு கடவுள் இறைக் குடும்பத்தின் இரண்டாம் ஆளாக விளங்கும் இயேசு கிறிஸ்து அவரது தாயான கன்னி மரியின்  வயிற்றில்  கருத்தரித்ததை  நினைவுகூர்கிறோம்.  கன்னி மரியா உலக மீட்புக்கான கடவுளின் திட்டத்தை ஏற்றுக்கொண்டதால் இது நிறைவேறியது. 

முதல் வாசகம் :

இது யூதாவின் அரசர்  ஆகாசுக்கு  ஏசாயா இறைவாக்கினர் வழங்கிய இறைவாக்குச் செய்தி. தொடக்கத்தில் ஆண்டவராகிய கடவுள், அரசர் ஆகாசிடம், “உம் கடவுளாகிய ஆண்டவர் உமக்கு ஓர் அடையாளத்தை அருளுமாறு கேளும்; அது கீழே பாதாளத்திலோ, மேலே வானத்திலோ தோன்றுமாறு கேட்டுக்கொள்ளும்” என்றார். ஆனால்,   இறைவாக்கினர் எசாயவிடம் ஆகாசு ஆண்டவரை  சோதிக்க  விரும்பவில்லை என்று கூறி அவரிடம்  அடையாளம் எதுவும்   கேட்க மாட்டேன் என்று பதிலளித்தார். இந்த பதில் ஆகாசின்  நம்பிக்கையின்மை வெளிப்படுத்தியது. 

ஆகாசு அரசன்  கடவுளிடம் ஓர்  அடையாளத்தைக் கேட்க  விரும்பாத போதிலும், கடவுள்   ஓர் அடையாளத்தைக் கொடுப்பதாக வாக்களிக்கிறார். இந்த அடையாளம் ஓர் ஆண் துணையின்றி ஒரு கன்னிப்பெண் கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுப்பார் என்பதாகும்.   அவருக்கு இம்மானுவேல் அதாவது, "கடவுள் நம்முடன் இருக்கிறார் "என்று பெயரிடப்படும் என்பதையும் அடையாமாகத் தருகிறார். இந்த அடையாளமே  இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் முன்னறிவிப்பாகக் கருதப்படுகிறது.    
  
இரண்டாம் வாசகம்

இந்த பகுதியில், எபிரேயர் நூலின்  ஆசிரியர்,  பழைய ஏற்பாட்டின் பலி முறையான  காளைகள் மற்றும் ஆடுகள் போன்ற விலங்குகளைப் பலியிடுவது மனுக்குலத்தின்  பாவங்களைப் போக்குவதற்குப்  பயனற்றவை  என்பதை வலியுறுத்துகிறார். அவை அக்காலத்திய  தற்காலிக நடவடிக்கை என்றும், அவை  இயேசு கிறிஸ்துவின் இறுதி பலியை முன்வைத்து சுட்டிக்காட்டப்பட்டவை  என்றும் விவரிக்கிறார்.

கடவுளுடைய திருவுளத்தை  நிறைவேற்றும் வகையில்,  மனிதகுலத்தின் பாவத்தை நீக்குவதற்கு இயேசுவின் பலி, ஒருமுறை செலுத்தப்பட்டது என்பது இங்கே  வலியுறுத்தப்படுகிறது. பழைய ஏற்பாட்டு சட்டத்தின் கீழ் விலங்குகளை மீண்டும் மீண்டும் பலியிடுவதைப் போலல்லாமல், இயேசுவின் பலி முழுமையானது மற்றும் எல்லா காலத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெளிவுப்படுத்தப்படுகிறது.   “பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை’ என்பதன் வழியாக  இயேசு கிறிஸ்துவை ஆண்டவராக ஏற்பவர்கள்,  அவருடைய பலியின் வழியாக தூய்மைப்படுகிறார்கள் என்பது எடுத்துரைக்கப்படுகிறது.

கிறிஸ்தவ நம்பிக்கையில் இயேசுவின் மரணம் மற்றும் அவரது உயிர்த்தெழுதலின்  முக்கியத்துவத்தை இவ்வாசகம்  அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இயேசு கிறிஸ்து ஒரே ஒரு முறை தம் உடலைப் பலியாகச் செலுத்தியதன் மூலம் நாம் தூயவராக்கப்பட்டிருக்கிறோம் என்றும், கடவுளுக்கும் மனிதகுலத்திற்கும் இடையே ஒரு புதிய உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளதையும்  வாசகம் எடுத்துரைக்கிறத. 


நற்செய்தி.

இன்றைய நற்செய்தியில்,   கபிரியேல் தூதர் கலிலேயாவில் உள்ள நாசரேத்து நகரில் வசித்து வந்த மரியா எனும் கன்னியிடம் கடவுளால் அனுப்பப்பட்டார் என்பதையும், அவர் தாவீது அரசரின்  வழித்தோன்றலான யோசேப்புக்கு   நிச்சயிக்கப்பட்ட பெண் என்பதையும் விவரிக்கிறது. தொடர்ந்து, மரியா என்ற கன்னிப் பெண்ணை கபிரியேல் சந்தித்த போது,    “அருள் நிறைந்தவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்”என்று வாழ்த்துரைத்து, கடவுளின் செய்தியை வெளிப்படுத்துகிறார். மரியா  இந்த வாழ்த்துக்களால் குழப்பமடைந்து அதன் அர்த்தம் என்ன என்று சிந்திக்கலானார்.  

1.கபிரியேல்  கடவுளின் தயவைப் பெற்றதால் பயப்பட வேண்டாம் என்று மரியாவைத் திடப்படுத்துகிறார். 

2.கபிரியேல்,  மரியா  கருவுற்று ஒரு மகனைப் பெறப்போவதாகவும்,  அவருக்கு இயேசு என்று பெயரிடுமாறும், இயேசு  உன்னதமான கடவுளின் மகனாக இருப்பார் என்றும் அறிவிக்கிறார்.

3.அடுத்து, இந்த குழந்தையின் மகத்துவத்தை அவர் பின்வருமாறு விவரிக்கிறார்

தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு (இயேசுவுக்கு) அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது (இஸ்ரயேலர்) என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது” என்று முடிக்கிறார்.


அடுத்து, கபிரியேல் தூதருடனான மரியாவின் உரையாடல் தொடர்கிறது.  மரியா, தான் கன்னியாக இருப்பதால் இது எப்படி நடக்கும் என்று கேட்க,  தூய ஆவியானவர் அவர்மீது வருவார் என்றும்,   இதன் விளைவாக தூய்மையாக  இருக்கும் கடவுளின் மகனாக ஒரு குழந்தை அவரது கருவில் உருவாகிறது என்று கபிரியேல்  விளக்குகிறார்.

தொடர்ந்து,  வெகு காலம் மகப்பேறற்றவராக இருந்த  மரியாவின் உறவினர் எலிசபெத்துவும் முதிய வயதில்  தாய்மை அடைந்திருப்பதாகவும்  கேப்ரியல் தூதர் மரியாவுக்குத்  தெரிவிக்கிறார். நிறைவாக, "இதோ, நான் ஆண்டவரின் அடிமை. உமது வார்த்தையின்படி எனக்கு ஆகட்டும்" என்று கூறி கடவுளின் திட்டத்தை மரியாள் ஏற்றுக்கொள்கிறார்.

 
சிந்தனைக்கு..

“உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்று அன்னை மரியா  கபிரியேல் தூதர் வழியாக, ஆண்டவருக்குச் சொன்ன அந்த பதில் உலகிற்கு மீட்பர் வர வழிவகுத்தது.  வானதூதரிடம் ஓரிரு கேள்விகள் கேட்டுத் தெளிவுப் பெற்றபின் கன்னியான மரியா ”உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்று உளமார அடிபணிகிறார். அத்தோடு கடவுளின் திட்டம் நிறைவேற தன்னை முழுமையாக அர்ப்பணிக்கிறார். 

இயேசு ஒருமுறை, “கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல” (லூக்கா 9:62) என்றதை நினைவுகூர்ந்தால், அன்னை மரியா மண்ணகத்தில்  இறையாட்சிக்கு வித்திட்டவர் என்பது புலனாகும். ஊர் அறிய இல்லறம் ஏற்பதற்கு முன் மரியா இயேசுவைக் கருதரிக்க பெற்ற அழைப்பை அவர் சந்தேகிக்கவில்லை. தன் வருங்கால கணவரான யோசேப்பிடம் கலந்து பேசி சம்மதம் பெற வேண்டும் என்றும் முடிவு செய்யவில்லை. மரியாவைப் பொறுத்தமட்டில் அது பெரும் அதிர்ச்சி தரும் செய்தியாக இருந்த போதிலும், அவர் நம்மைப் போன்று உலகக் கண்ணோட்டதில் கடவுளின் செய்தியைப் பார்க்கவில்லை. 

‘மங்கள வார்த்தை’ என்று நாம் அழைக்கும் இந்நிகழ்வு வியப்புக்குரியது என்ற போதிலும், ‘கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை’ என்பதை மரியா மிக ஆழமாக நம்பினார். அவரால் கன்னியாகவே இயேசுவைப் பெற்றெடுக்க முடிந்தது. 

கடவுள் விரும்பினால் நம்மையும் அவரது உலக மீட்புப் பணிக்கு ஒரு கருவியாகப் பயன்படுத்த முடியும். அவர் அதை விரும்புகிறார். நாம்தான் அவரோடு ஒத்துழைக்க மறுத்து  பின்வாங்குகிறோம். ‘கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை’ என்ற நம்பிக்கையில் ஆழ்ந்தவர்கள் கடவுளின் குரலுக்கும் அழைப்புக்கும்  செவிசாய்த்தார்கள். அவர்கள்தான் மனித நிலையிலிருந்து புனிதர் என்ற நிலைக்கு உயர்வு கொண்டவர்கள்.  

எனவே, இன்றைய நாளில் அன்னை மரியைவைப போற்றி மாட்சிபடுத்தும் அதே வேளையில்,  கடவுள் நம்மீது தயவு கொண்டு, தம் ஒரே மகனுடனான மீட்பின் கருவிகளாகப் பங்குபெற அழைத்துள்ளார் என்பதை முதலில் நம்புவோம்.  இயேசு அன்னை மரியில் கருவுற்ற இந்நாள் திருஅவை அவரில் கருவுற்றது என்றால் மிகையாகாது. எனவேதான் அன்னை மரியா திருஅவையின் தாய் என்றும் நாம் போற்றுகிறோம். 

இன்றைய பெருவிழா நமக்கு அளிக்கும் மற்றொரு செய்தி யாதெனில், கடவுளின் மீட்புத் திட்டம் நிறைவேற நாம் அவருடைய திட்டத்திற்கு ஒத்துழைக்கவேண்டும் என்பதாகும். நமது 


இறைவேண்டல்.


அன்பு இயேசுவே, நீர் மனுவுருவாக கன்னி மரியா, “உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்றதுபோல, இவ்வுலகில் இறையாட்சிக்கான பணிகளில் என்னை முழுமையாகக் கையளிக்கும் வரத்தைத் தந்தருள்வீராக. ஆமென்.

ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452