AI திருமடல்: உலகளாவிய கலந்துரையாடல் | Veritas tamil
செயற்கை நுண்ணறிவு யுகத்தில் மனித மாண்பைப் பாதுகாப்பதை மையமாகக் கொண்ட திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் முதல் திருமடலான "Magnifica Humanitas" குறித்து ஆய்வு செய்யும் அனைத்துலக இணையவழி வட்டமேசைக் கலந்துரையாடல், ஜூலை 3-ஆம் தேதி தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள புனித ஜான் பல்கலைக்கழகத்தின் ஆசிய சமயம் மற்றும் சமூகத் தொடர்பியல் ஆய்வு மையம் (ARC) சார்பில் நடைபெறுகிறது.
"Magnifica Humanitas: Reactions, Reflections, and Directions" என்ற தலைப்பில் நடைபெறும் இந்த இரண்டு மணி நேர நிகழ்ச்சியில், ஆசியா மற்றும் இலத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த கத்தோலிக்க அறிஞர்கள், தகவல் தொடர்பியல் நிபுணர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்கள் பங்கேற்று, திருமடலின் மேய்ப்புப்பணி, அறநெறி மற்றும் சமூகப் பரிமாணங்கள் குறித்து தங்களது கருத்துகளைப் பகிரவுள்ளனர்.
ARC-இன் செயல் இயக்குநரான அருட்பணி அந்தோனி லெ டுக், SVD அவர்கள், செயற்கை நுண்ணறிவு மனிதகுலத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கம் குறித்து திருத்தந்தையின் முதல் திருமடலை ஆழமாக ஆராய்வதற்கான தொடக்க மேடையாக இந்தக் கலந்துரையாடல் அமையும் என்று தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு பேச்சாளரும், திருமடலின் முக்கியக் கருத்துகள், தொழில்நுட்ப வளர்ச்சியில் அது ஏற்படுத்தக்கூடிய தாக்கம் மற்றும் அதன் போதனைகளை திருஅவை பல்வேறு நிலைகளில் எவ்வாறு நடைமுறைப்படுத்தலாம் என்பன குறித்து தங்களது கருத்துகளை முன்வைக்க உள்ளனர். அதைத் தொடர்ந்து திறந்த கலந்துரையாடலும் கேள்வி–பதில் நிகழ்வும் நடைபெறும்.
இந்தக் கலந்துரையாடலில் SIGNIS அமைப்பின் பொதுச் செயலாளர் முனைவர் பீட்டர் ரச்சடா மொந்தியென்விச்சியன்சாய், பெரு நாட்டைச் சேர்ந்த முனைவர் ஆல்பர்டினா நவாஸ், இறைவார்த்தை சபையின் தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் அருட்பணி முனைவர் காஸ்மிர் நேமா, SVD, மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் அருட்பணி முனைவர் செபாஸ்டியன் பெரியண்ணன் ஆகியோர் சிறப்பு உரையாற்றுகின்றனர்.
திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் வலியுறுத்தும் வகையில், தொழில்நுட்ப வளர்ச்சி மனித மாண்பிற்கும் பொதுநலனுக்கும் சேவை செய்ய வேண்டும் என்ற அழைப்பை உலகளாவிய அளவில் ஆழமாக விவாதிக்க இந்த இணையவழி கலந்துரையாடல் முக்கிய வாய்ப்பாக அமையும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.