பீகார் மாநிலத்தில் நம்பிக்கையின் அடிப்படையில் ஒருங்கிணையும் பல மதங்கள். | Veritas Tamil

நம்பிக்கையின் அடிப்படையில் ஒருங்கிணையும் பல மதங்கள்.


பீகார் மாநிலம் பாட்னாவில் இளைஞர்கள் ஒன்றிணைந்து சமய வேறுபாடுகளை கடந்து நம்பிக்கையின் அடிப்படையில் ஒருங்கிணைக்கும் மற்றும் பல மதங்களின் நல்லுறவுக்கான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பாட்னா, செப்டம்பர் 2, 2025: பீகார்  பிராந்திய சமயம் மற்றும் பல மதங்களின் நல்லுறவுக்கான பேச்சுவார்த்தை ஆணையம் ஆகஸ்ட் 29 முதல் 31 வரை மூன்று நாள் பயிற்சித் திட்டத்தை வட்டார இளைஞர் ஒருங்கிணைப்பாளர்கள், மத குருக்கள், அருட்சகோதரர்கள் இளம் குருமார்கள் மற்றும் பொதுநிலை பணியாளர்களுக்காக நடத்தியது. பிஹார் முழுவதும் உள்ள நான்கு முக்கிய மதங்களைச் சேர்ந்த தொண்ணூற்றாறு பேர், பாட்னாவில் உள்ள பிராந்திய மதப் பணி மையம், நவ்ஜோதி நிகேதனம், எனுமிடத்தில் ஒன்று கூடினர்.

இந்த நிகழ்ச்சியின் போது, ஆணையத்தின் வட்டார  தலைவர் ஆயர் கஜேதன் பிரான்சிஸ் ஓஸ்டா, திருப்பலி  நிறைவேற்றினார். பங்கேற்பாளர்களுக்கு கடவுளின் ஆசீர்வாதத்தை வேண்டிய அவர், சமயங்களின் ஒருங்கிணைப்பு மற்றும் பல மத நல்லுறவுக்கான பேச்சுவார்த்தை ஆகியவை "நவீன இந்தியாவில் ஒரு உலகளாவிய ஒருங்கிணைந்த திருஅவையை (Universal Synodal Church in modern India.”)  நிறுவுவதற்கான இரண்டு முக்கிய தூண்கள்" என்று வலியுறுத்தினார். "தொடர்ச்சியான உரையாடல் மற்றும் பகிர்வு மூலம், பரஸ்பர தெய்வீக அனுபவங்கள், வளமான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட மத இறையியல் நுண்ணறிவுகளைப் பரிமாறிக்கொள்வதற்கும், நம் தாய்நாடான பிஹாரில் நல்லிணக்கம், அமைதி, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்காக ஒத்துழைப்பதற்கும் நாம் நமது கதவுகளைத் திறக்கிறோம்" என்றும் அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து, "ஒருங்கிணைந்த திருஅவை (Ecumenism in Synodality) இல் சமயங்களின் ஒருங்கிணைப்பு: அனைத்து திருஅவைகளுக்கும் இடையே அமைதி, ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்புக்கான ஒரு ஒளிவிளக்கு" என்ற அமர்வு நடைபெற்றது. அருட்தந்தை கிராந்தி, அருட்தந்தை ஜெரி, அருட்தந்தை  சுனில், சமூக ஆர்வலர் சகோதரி பிளெஸ்ஸி, அருட்தந்தை ஜேம்ஸ் ரொசாரியோ மற்றும் அருட்தந்தை ரஞ்சித் ஜோசப் ஆகியோர் வள நிபுணர்களாக இருந்தனர். இதில் ஆயர் ஓஸ்டா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதிகரித்து வரும் வகுப்புவாத சவால்களுக்கு மத்தியில்இ உரையாடல் மூலம் சமயங்களின் ஒருங்கிணைப்பு உறவுகளை வலுப்படுத்துவதன் அவசரத்தை அனைவரும் வலியுறுத்தினர்.

உலகளாவிய திருஅவையைச் சேர்ந்த அருட்தந்தை ஜெரி, “கிறிஸ்தவம் என்பது அன்பும் அமைதியும் நிறைந்த மதம். நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இந்த உள்ளூர் நிலப்பரப்பில் ஒத்துழைப்பையும் ஒற்றுமையையும் மீட்டெடுக்க அனைத்து தத்துவார்த்த வேறுபாடுகளையும் பிரிவுகளையும் கைவிட உரையாடல் அவசியம்” என்று கூறினார். வட்டார செயலாளர் அருட்தந்தை ரஞ்சித் ஜோசப், “கிறிஸ்தவ ஒற்றுமைக்காக இணைந்து பணியாற்றுவது அனைத்து திருஅவைகளின் தலையாய பொறுப்பாகும். இதன் மூலம் நமது தாய்நாட்டில் கடவுளின் ராஜ்யத்தை கூட்டாக நிறுவவும் மேம்படுத்தவும் முடியும்” என்று கூறினார். CNI திருச்சபை பாட்னாவைச் சேர்ந்த பாஸ்டர் சுனில், திருச்சபைகள் அடிக்கடி ஒற்றுமையைப் பற்றிப் பேசினாலும், “ஒருமுறை அவர்கள் பிரிந்தால், ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பிற்காக ஒரு விரலை கூட தூக்காமல் முழுவதுமாகப் பிரிந்துவிடுகிறார்கள்” என்று வருத்தம் தெரிவித்தார். சகோதரி பிளெஸ்ஸி, ஒத்துழைப்பை வளர்ப்பதற்கான தெளிவாக வரையறுக்கப்பட்ட விதிகளுடன் ஒரு எழுத்துப்பூர்வ முன்னோக்குத் திட்டத்தை உருவாக்குமாறு வலியுறுத்தினார்.

ஒரு கலந்துரையாடல் அமர்வின் போதுஇ பங்கேற்பாளர்கள் திருஅவைகளுக்கு இடையேயான பிரிவுகள் குறித்து கேள்விகளை எழுப்பினர். அதற்கு பதிலளித்த அருட்தந்தை ஜேம்ஸ் ரொசாரியோ, “திருஅவை என்பது கிறிஸ்துவின் ஒரே உடல்; நாம் கிறிஸ்தவர்கள், நமது சித்தாந்தங்களைப் பொருட்படுத்தாமல், நமது ஆண்டவரும் மீட்பருமாகிய  இயேசு கிறிஸ்துவை வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் வாழத் தொடங்கும்போது, ஒற்றுமையும் ஒத்துழைப்பும் இயல்பாகவே வரும்” என்று குறிப்பிட்டார். மாலையில், திரு. அஜித் மற்றும் திரு. முக்தி பிரகாஷ் வழிகாட்டுதலின் கீழ் பயிற்சி பெறுபவர்கள் கலாச்சார நடவடிக்கைகளை வழங்கினர். இதன் மூலம் ஒற்றுமைக்கான ஆக்கபூர்வமான தீர்வுகளை முன்வைத்தனர். மதிப்பிற்குரிய பிரனாய் மற்றும்மதிப்பிற்குரிய  டார்சியஸ் தலைமையில் நடைபெற்ற குழு விவாதங்களில், பிரிவுகளுக்குக் காரணமான சமூக மற்றும் மத ரீதியான தீமைகள் ஆராயப்பட்டன, பங்கேற்பாளர்கள் நாடகங்கள், கலை மற்றும் பாடல்கள் மூலம் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினர்.

இரண்டாம் நாளில் அருட்தந்தை ரஞ்சித் ஜோசப் திருப்பலி நிறைவேற்றினார். மேலும் மத்தேயு 25:14-30 வசனத்தை அடிப்படையாகக் கொண்டு, பங்கேற்பாளர்கள் தங்கள் திறமைகளை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். அன்றைய நாளின் முக்கிய கவனம் பல மதங்களுக்கிடையேயான பேச்சுவார்த்தை ஆகும். பிஹாரின் சமூக-அரசியல்-மத யதார்த்தங்கள் குறித்த அமர்வில், திரு. பிரேந்திர ஜீ பாகுபாடு, தீண்டாமை மற்றும் வறுமை ஆகியவற்றை எடுத்துக்காட்டினார். மேலும், பங்கேற்பாளர்கள் நீதி மற்றும் சகோதரத்துவத்திற்கான முகவர்களாக மாற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

வைஷாலியில் உள்ள சட்பவனா சதானின் இயக்குனர் அருட்தந்தை பிரனாய் ஐ.எம்.எஸ். சமணம், பௌத்தம் மற்றும் இந்து மதம் ஆகியவற்றின் ஒப்பீட்டு ஆய்வை வழங்கினார். இவர்களின் புனித நூல்கள் கடவுள், மனிதகுலம் மற்றும் படைப்பின் மீதான அன்பின் நற்பண்புகளைக் கொண்டுள்ளன என்று வலியுறுத்தினார். இது ஊக்கம் அளித்ததால், பங்கேற்பாளர்கள் "நாம் வெல்வோம்" என்று பாடி ஒற்றுமைக்கு உறுதியளித்தனர். பின்னர், டாக்டர் ஆண்டனி சுவாமி "பல மத நல்லுறவுக்கான பேச்சுவார்த்தை சூழலில் இயேசு கிறிஸ்துவும் அவரது போதனைகளும்" குறித்து பேசினார். பேச்சுவார்த்தை, நீதி மற்றும் அன்பு மூலம் கிறிஸ்துவின் சீர்திருத்த அணுகுமுறையை எடுத்துரைத்தார்.

முஸ்லிம் அறிஞரும் பாட்னா உயர் நீதிமன்ற வழக்கறிஞருமான எம்.கே. யூனுஸ், "இந்திய கலாச்சாரம் மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் இஸ்லாம் மற்றும் அதன் பங்களிப்பு" குறித்து பேசினார். அவர் இஸ்லாத்தின் ஆன்மிகம் மற்றும் பிரார்த்தனை, ஈகை, தவம், அன்பு மற்றும் நீதி போன்ற முக்கிய நற்பண்புகளை விளக்கினார். ஜிஹாத் பற்றிய தவறான கருத்துக்களைத் தெளிவுபடுத்திய அவர், அது மக்களுக்கு எதிரான போராட்டம் அல்ல, தீமைக்கு எதிரான போராட்டம் என்று கூறினார். இந்தியாவின் சுதந்திரத்திற்கு பங்களித்த முஸ்லிம் தேசபக்தர்களை மேற்கோள் காட்டி "இஸ்லாம் எப்போதும் அனைவருடனும் ஒற்றுமை, ஒருமைப்பாடு, அன்பு மற்றும் நீதியுடன் வாழ்கிறது  என்று கூறினார்.

மூன்றாம் நாளில் அருட்தந்தை ஜேம்ஸ் ரொசாரியோ திருப்பலி நிறைவேற்றினார். மேலும் மதத்தின் பங்குஇ ஒழுக்க மற்றும் ஆன்மீக மதிப்புகளை வளர்ப்பதில் உள்ளது என்றும், வகுப்புவாதம் மற்றும் வெறுப்பு ஆகியவை அழிவுகரமானவை என்றும் கண்டித்தார். பின்னர் பங்கேற்பாளர்கள் பாட்னா சாஹிப் குருத்வாரா, ஒரு சிவன் கோவில் மற்றும் ஒரு மசூதி உட்பட பாட்னாவில் உள்ள வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்றனர். குருத்வாராவின் தலைவர் அனைவரையும் வரவேற்றார். சீக்கிய மதத்தின் அமைதி மற்றும் சேவையின் நற்பண்புகளை வலியுறுத்தினார். ரோட்டரி கிளப்பின் உறுப்பினர்கள் இந்த சுற்றுப்பயணத்தில் இணைந்து, மதங்களுக்கு இடையே ஒற்றுமையை வளர்த்த தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

நவ்ஜோதி நிகேதனம் திரும்பியதும், பங்கேற்பாளர்கள் தங்கள் சமூகங்களில் சமய ஒருங்கிணைப்பு மற்றும் பல மத நல்லுறவுக்கான பேச்சுவார்த்தையை மேம்படுத்துவதற்காக ஒரு வருட, ஆறு மாத மற்றும் மாதத் திட்டங்களை முன்வைத்தனர். இவை அருட்தந்தை ஜேம்ஸ், அருட்தந்தை பிரனாய், அருட்தந்தை டார்சியஸ், அருட்சகோதரி பிளெஸ்ஸி மற்றும் திருமதி ஷல்லி ஆகிய அமைப்பாளர்களுடன் விவாதிக்கப்பட்டன.

அருட்தந்தை ரஞ்சித் ஜோசப் நவ்ஜோதி நிகேதனம், ஒத்துழைப்பாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு நன்றி தெரிவித்தார். "நான் அனைத்து குழுக்களையும் அவ்வப்போது சந்தித்து, சமய ஒருங்கிணைப்பு மற்றும் பல மத நல்லுறவுக்கான பேச்சுவார்த்தை துறையில் அவர்களின் பணிகளை ஊக்குவிப்பேன் மற்றும் மதிப்பீடு செய்வேன்" என்று அவர் உறுதியளித்தார்.

பங்கேற்பாளர்கள் கருத்தரங்கிற்கு நன்றி தெரிவித்தனர் மற்றும் பீகார் முழுவதும் ஒற்றுமை, பேச்சுவார்த்தை மற்றும் அமைதியை ஊக்குவிக்க தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினர்.
பீகார்