பொன்விழா கொண்டாட்டத்தில் ஒளிர்ந்த நம்பிக்கையும் சமூக ஒற்றுமையும் !! | Veritas Tamil

2025 டிசம்பர் 28–29 தேதிகளில் வங்காளதேசத்தின் காசிபூர் மாவட்டம், காலிகஞ்ச் உபஜிலாவில் அமைந்துள்ள ரங்கமாட்டியா உயர்நிலைப் பள்ளி, நம்பிக்கை, தியாகம் மற்றும் சமூக அர்ப்பணிப்பில் வேரூன்றிய 50 ஆண்டுகால கல்விச் சேவையை நினைவுகூர்ந்து தனது பொன்விழாவை சிறப்பாகக் கொண்டாடியது.

இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் வந்த முக்கிய விருந்தினர்கள், முன்னாள் மற்றும் தற்போதைய ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், மாணவ–மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகள் உள்ளிட்ட சுமார் 1,000 பேர் கலந்து கொண்டனர்.

விழா டிசம்பர் 28 அன்று மாலை 3 மணிக்கு பள்ளி வளாகத்தில் தொடங்கியது. பள்ளியின் ஸ்கவுட் குழு இசைக் குழுவுடன் அணிவகுத்து விருந்தினர்களை மேடைக்கு அழைத்துச் சென்றது; இது விழாவுக்கு மகிழ்ச்சிகரமான தொடக்கமாக அமைந்தது.

டாக்கா மறைமாவட்டத்தின் துணை ஆயர் மேதகு சுப்ரோட்டோ போனிஃபேஸ் கோம்ஸ் அவர்கள் விழாவின் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டார். இதர முக்கிய விருந்தினர்களாக பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் அருள்பணி ஆல்பின் கோம்ஸ், தலைமையாசிரியர் அருள்சகோதரி மேரி ஸ்கொலாஸ்டிகா பால்மா (SMRA), பள்ளியின் நிறுவனர் தலைவர் திரு. லூயிஸ் அனில் கோஸ்டா, மற்றும் காலிகஞ்ச் உபஜிலா நிர்வாக அதிகாரி திரு. A.T.M. காம்ருல் இஸ்லாம் ஆகியோர் பங்கேற்றனர்.

விழா தொடக்கத்தில் பைபிள், குர்ஆன் மற்றும் கீதா வாசிக்கப்பட்டது; இது பள்ளியின் மதங்களுக்கிடையிலான ஒற்றுமை குறித்த உறுதியை வெளிப்படுத்தியது. தொடர்ந்து அனைவரும் இணைந்து தேசிய கீதம் பாடினர். அதன் பின்னர் தேசியக் கொடி ஏற்றப்பட்டு, பள்ளி வளாகத்தில் பொன்விழா சின்னம் திறந்து வைக்கப்பட்டது.

வரவேற்பு உரையில், தலைமையாசிரியர் அருள்சகோதரி மேரி ஸ்கொலாஸ்டிகா, கடந்த ஐம்பது ஆண்டுகளாக பள்ளிக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

“இந்த பள்ளி இப்பகுதி மக்களால் தொடங்கப்பட்டது; அவர்களின் ஆதரவினாலேயே இது தொடர்ந்து வளர்ச்சி கண்டுள்ளது. 50 ஆண்டுகளை எட்டியிருப்பது மிகப் பெருமைமிக்க சாதனையாகும்,” என்று அவர் கூறினார்.

அமெரிக்காவில் வசித்து வரும் பள்ளியின் நிறுவனர் தலைவர் திரு. லூயிஸ் அனில் கோஸ்டா, பள்ளியின் எளிய தொடக்கமும் ஆரம்ப கால சவால்களும் குறித்து நினைவுகூர்ந்தார்.

“ரங்கமாட்டியா உயர்நிலைப் பள்ளியின் 50 ஆண்டுகால வரலாறு போராட்டங்களால் நிரம்பியது. இப்பகுதி மிகவும் பின்தங்கியிருந்தது; கல்வி பலருக்கும் கனவாகவே இருந்தது. அதனால் தான் இந்தப் பள்ளியைத் தொடங்கத் துணிந்தோம்,” என்று அவர் கூறினார்.

பள்ளி சமூகத்தினரை வாழ்த்திய ஆயர் கோம்ஸ், மேலாண்மை குழு, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பல ஆண்டுகளாக பள்ளியை நிலைநிறுத்தி வளர்த்துள்ள அர்ப்பணிப்பை பாராட்டினார். மேலும், பள்ளியின் வளர்ச்சிக்கு பங்களித்த முன்னாள் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் நினைவஞ்சலி நிகழ்வில் பங்கேற்றனர்.

பள்ளியின் முன்னாள் மாணவரும், பொன்விழா ஊடக மற்றும் ஆவணப்படக் குழு செயலாளருமான ஜெஃப்ரி ஜார்ஜ் கோஸ்டா, பள்ளி நிறுவப்பட்ட காலத்தில் இருந்த தியாக உணர்வை எடுத்துரைத்தார்.

“இப்பகுதியின் கத்தோலிக்கர்கள்—பெரும்பாலும் விவசாயிகள்—அரிசி, வெங்காயம், பூண்டு போன்றவற்றை தானமாக வழங்கி பள்ளியை ஆதரித்தனர். ஆரம்ப காலங்களில் பல ஆசிரியர்கள் சம்பளம் இல்லாமலே கற்பித்தனர்,” என்று அவர் RVA செய்தியிடம் தெரிவித்தார்.

1993 ஆம் ஆண்டு முதல் ‘அப்போஸ்தலர்களின் ராணி மரியாவின் துணையாளர் சபை’ (SMRA) பள்ளியை ஆதரித்து வந்தது; 2018 இல் முழு பொறுப்பையும் அவர்கள் ஏற்றுக்கொண்டனர்.

இன்றைய நிலையில், ரங்கமாட்டியா உயர்நிலைப் பள்ளியில் கிறிஸ்தவர், முஸ்லிம் மற்றும் இந்து குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 300 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். கடந்த 50 ஆண்டுகளில் 3,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இங்கு கல்வி கற்றுள்ளனர். இவர்களில் பலர் அருள்பணியாளர்கள், துறவிகள் மற்றும் சமுதாயத்திற்கும் திருச்சபைக்கும் சேவை செய்யும் தொழில்முனைவோர்களாக உருவாகியுள்ளனர்.

முதல் நாள் விழா, கலாச்சார நிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தது. இரண்டாம் நாளில் மத வழிபாடுகள், யூபிலி பேரணி, கேக் வெட்டுதல், பள்ளி வரலாறு குறித்த ஆவணப்பட வெளியீடு, நினைவுப் புத்தக வெளியீடு, பங்களித்தவர்களுக்கு பாராட்டு, கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் அதிர்ஷ்டச் சீட்டு குலுக்கல் ஆகியவை நடைபெற்றன.

1975 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பள்ளி, 1985 இல் MPO பட்டியலில் சேர்க்கப்பட்டது. 1994 இல் டாக்கா மேல்நிலை மற்றும் உயர்கல்வி வாரியத்தின் அங்கீகாரம் பெற்றதைத் தொடர்ந்து, மாணவர்கள் முதன்முறையாக SSC பொதுத் தேர்வை பள்ளியின் பெயரில் எழுதியனர்.

இந்த பொன்விழா, ஆண்டுகளின் எண்ணிக்கையை மட்டும் கொண்டாடிய நிகழ்வு அல்ல; நம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் சமூக ஒற்றுமையின் நிலையான சக்தியை சாட்சியமாக்கிய விழாவாக அமைந்தது.