சரியான பாடம் | அருள்பணி. முனைவர் அ. பவுல்ராஜ் | Veritas Tamil
கல்வியை யாரும் களவாட முடியாது.
வெள்ளத்தால் போகாது.
வெந்தணலால் வேகாது.
வேந்தராலும் கொல்லத்தான் முடியாது.
கொடுத்தாலும் நிறையுமேயொழிய குறைவுபடாது.
கள்ளர்க்கோ மிகவரிது.
காவலுக்கோ மிகஎளிது (தமிழ்ப்பாடல்).
வெளியே நிறைய வாசித்தும், உள்ளே நிறைய யோசித்தும் தனித்தன்மையோடு வாழ்வதே கல்வி. இத்தகைய கல்வியைக் கற்றுக்கொள்ள உயிர்த்துடிப்பு வேண்டும். உயிர்த் கற்றுக்கொள்ளும் துடிப்புள்ளவர்களுக்கு மழையும் ஆசான்; மலரும் குரு; மயானமும் போதகர். உடலுக்கான கல்வியும், மனதுக்கான கல்வியும், மூளைக்கான அறிவும், இதயத்துக்கான உணர்தலும் ஒருங்கிணையும் போதுதான் முழுமையான கல்வி பிறக்கிறது.
இன்று நம்முடைய கல்வி நம்மைச் சத்தங்களின் ஆரவாரத்திற்கு அழைத்துச் செல்கிறது. மௌனத்தின் மையத்திற்குள் நுழைய அனுமதிக்கவில்லை. இந்தக் கல்வி, எதிர்காலத்தில் நாம் என்ன ஆகப்போகின்றோம் என்ற வினாவையே மையமாக்குவதால், நம் கால்களுக்கடியில் உள்ள நிகழ்காலம் நழுவுகிறது. மூளைக்கு மட்டுமே ஊட்டச்சத்துகளை எடுத்துச் செல்வதால் ஆத்மா சூம்பிப்போய் விடுகிறது. இத்தகைய எதிர்மறை நிலையைக் களைந்து ஆன்மிகப் பரிணாமம் உள்ள கல்வியைப் பெற முயல்வோம்.
கிராமத்து ஆசாமி அவர். கடவுள் பக்தி அதிகம் கொண்டவர்; தவறாமல் கோவிலுக்குச் செல்வார்; ஆண்டவரை வேண்டுவார்; தினந்தோறும் காட்டுக்குச் செல்வார். விறகுகளை வெட்டி, சந்தையில் கொண்டு விற்று, அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தால் நிம்மதியான வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்தார்.
இந்நிலையில் ஒரு நாள் வழக்கம்போல் அவர் காட்டுக்குப் போனார். அங்கே ஒரு நரியைப் பார்த்தார். அந்த நரிக்கு முன்னங்கால்கள் இரண்டும் இல்லை. அது மரத்தடியில் அமர்ந்திருந்தது. அதன்மீது பரிதாபப்பட்டு, 'இந்த நரிக்கு எப்படி உணவு கிடைக்கும்!' இதனால் வேட்டையாட முடியாதே!' என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே அவ்வழியாய் ஒரு புலி வந்தது. அதைப் பார்த்தவுடன் இவர் ஒரு மரத்திற்குப் பின்னால் ஓடி ஒளிந்து கொண்டார். மறைந்து நின்றுகொண்டு அங்கே என்ன நடக்கிறது என்பதைக் கவனித்தார்.
அந்தப் புலி ஒரு பெரிய மானை அடித்து இழுத்துக்கொண்டு வந்து அதைச் சாப்பிட்டது. சாப்பிட்டது போக மீதியை அப்படியே அங்கேயே போட்டுவிட்டுப் போய்விட்டது. புலி சென்ற பிறகு காலில்லா நரி மெதுவாக நகர்ந்து சென்று மிச்சமிருப்பதைச் சாப்பிட்டது. பின் மெல்ல நகர்ந்தவாறே தன் இருப்பிடத்திற்குப் போய் சேர்ந்தது.
இவ்வளவையும் மரத்துக்குப் பின்னால் ஒளிந்திருந்து பார்த்துக் கொண்டிருந்த ஆசாமி யோசிக்க ஆரம்பித்தார். இரண்டு காலும் இல்லாத இந்த வயசான நரிக்கே இறைவன் சாப்பாடு போடுகிறார். அப்படி இருக்கும்போது தினமும் கோயிலுக்குச் சென்று சாமி கும்பிடுகின்ற எனக்கு சாப்பாடு போடாமல் விட்டுவிடுவாரா? நமக்குதான் கடவுள் பக்தி அதிகமாயிற்றே. ஏன் பனியிலும், வெயிலிலும் கஷ்டப்பட வேண்டும்? ஏன் வியர்வை சிந்த விறகு வெட்ட வேண்டும்? இவ்வாறு நினைத்துக் கோடரியைத் தூக்கி எறிந்தார். விறகு வெட்டச் செல்லவில்லை. கோயிலுக்குப் போனார். ஒரு மூலையில் உட்கார்ந்துகொண்டார்.
கடவுள் நம்மைக் காப்பாற்றுவார் நமக்கு வேண்டிய உணவைக் கொடுப்பார் என்று நம்பினார். ஒவ்வொரு நாளாகப் போய்க் கொண்டிருந்தது. உணவு வந்த பாடில்லை. பசியால் வாடிப்போனார். உடல் மெலிந்தது. ஒரு நாள் இரவு கடவுளிடம் முறையிட்டார். "ஆண்டவா, என்மேல் உமக்குக் கருணையில்லையா? காட்டிலே அந்த நரிக்குப் புலி மூலமாகச் சாப்பாடு போட்டாயே... அதைப் பார்த்து விட்டுத்தானே இங்கே வந்தேன். என்னை இப்படித் தவிக்க விட்டுவிட்டாயே, இது நியாயமா?" என்று கேட்டார்.
அப்போது கடவுள் பேச ஆரம்பித்தார். "முட்டாளே... நீ பாடம் கற்றுக்கொள்ள வேண்டியது நரியிடமிருந்து இல்லை.... புலியிடமிருந்து.'
பல இதே மாதிரிதான் நாமும் வாழ்க்கையின் தவறான பாடங்களைக் கற்றுக் கொள்கிறோம். நம்முடைய கல்வி முறையிலும் இத்தகைய தவறான பாடங்களை நமதாக்குவதற்கான வழிமுறைகளை நாமே உருவாக்கிக்கொள்கிறோம். சந்தர்ப்பங்களிலே
கல்வியில் நாம் கற்றுக்கொள்ளும் பாடங்கள் ஏராளம். பாடசாலைகளோடு முடிவதில்லை. வாழ்க்கைக் கல்வியாக வாழ்வு முழுவதும் தொடர்கிறது. பல நிலைகளின் கல்வியைப் பெற்றவர்களின் எண்ணிக்கை இன்று அதிகமாக இருந்தும் உலகம் உற்சாகமற்று இருப்பதற்கு காரணம் கல்வியில் ஆன்மிகப் பரிமாணம் இல்லாததுதான்.
எனவே, இந்த ஆன்மிகப் பரிமாணத்திற்கான கல்வியை அன்றாடம், அனைத்திடமிருந்தும் பெறுவோம். அறிவை மட்டும் உயர்த்திப் பிடிக்காமல், புதிய தகவல், புதிய அனுபவம், தெளிந்த தகவல், தெளிந்த அனுபவம் இத்தகைய கல்வியைப் பெறுவோம். இது அறிந்தவற்றை இன்னும் ஆழப்படுத்துகிறது. அறியாதவற்றை அகலப்படுத்துகிறது. தனித் தன்மையான இக்கல்வியைப் பெற்று நம்மைப் பக்குவமாக்குவோம்.