அனுபவக் கல்வி | அருள்பணி. முனைவர் அ. பவுல்ராஜ் | Veritas Tamil
அநேக துறைகளில் நாம் அறிவுடையவர்களாக இருக்கிறோம். அவ்வாறு இருக்கவும் விரும்புகிறோம். ஆனால், இதைவிட மேலான ஒன்று உண்டு. அதுவே ஞானம். பள்ளி வாழ்க்கையில் நாம் கற்றுக்கொண்ட பாடங்கள் அறிவைச் சார்ந்தவை. அந்தப் பாடங்களை நம் அனுபவமாக்குவது ஞானமாகும். ஆம், நாம் செய்கின்ற செயல்பாடுகளின் தொகுப்பாகிய அனுபவத்திலிருந்து கிடைப்பதே ஞானம். இதுவே மிகச் சிறந்த உயர்ந்த கல்வி.
ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர் ஒருவரிடம், "பணி ஓய்வில் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்க, "நான் 'முதுகலைப் பல்கலைக்கழகத்தில் 'ஞானம்' என்னும் கல்வியைக் கற்றுக் கொண்டிருக்கிறேன்" என்றார். கல்வி என்பது கருவறை முதல் கல்லறை வரை நடைபெறுகின்ற தொடர் நிகழ்வு. இதில் நாம் கற்றுக்கொள்வது ஏராளம். ஏட்டுக்கல்வி அறிவைக் கொடுக்கிறது. அனுபவக் கல்வி ஞானத்தைக் கொடுக்கிறது.
பெஸ்ஸி என்னும் ஒரு வயதான பெண்மணி ஃபுளோரிடாவுக்குச் சென்றுகொண்டிருந்த விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்தார். அவருக்கு அருகில் கல்வியாளரும், குழந்தைகள் உளவியல் நிபுணருமான ஒருவர் பயணித்துக்கொண்டிருந்தார். அவர் தான் நடத்தவிருக்கிற குழந்தைகள் வளர்ப்புப் பற்றிய கருத்தரங்கிற்குக் குறிப்புகள் எடுத்துக்கொண்டே பயணம் செய்துகொண்டிருந்தார். பெஸ்ஸி அவரிடம் பேச்சுக் கொடுத்தார். “எனக்கு 6 பிள்ளைகள், 18 பேரப்பிள்ளைகள், 10 கொள்ளுப் பேரப்பிள்ளைகள் இருக்கின்றனர். பாஸ்டனுக்குச் சென்று அவர்களுடன் இரண்டு வாரங்கள் தங்கிவிட்டு, இப்போது மியாமிக்குத் திரும்ப வந்துகொண்டிருக்கிறேன்' என்று தன்னைப் பற்றி அறிமுகம் செய்துகொண்டார்.
பின்னர் அவரைப் பற்றிக் கேட்டார். தன்னைப் பற்றி முழுவதுமாகச் சொன்னால், அநேகப் பேரப்பிள்ளைகள், கொள்ளுப் பேரப்பிள்ளைகளைக் கொண்ட இந்தப் பெண்மணி, குழந்தை வளர்ப்புப் பற்றி இலவசமாக அறிவுரை கேட்பார். என்னுடைய இந்த மூன்று மணி நேரப் பயணம் வீணாகப் போய்விடுமே என்று பயந்து, தான் குழந்தைகளுக்கான உளவியல் மருத்துவர் என்று மட்டும் கூறினார். மாறாக, அந்தப் பெண்மணி சற்று வசதியாக அமர்ந்துகொண்டு, “டாக்டர், பிள்ளைகள் வளர்ப்புப் பற்றியோ, அவர்களின் மனநிலை பற்றியோ ஏதாவது கருத்துகள் தேவைப்பட்டால் என்னிடம் தாராளமாகக் கேட்கலாம்" என்றார்.
எந்த ஒரு பட்டமும் வாங்காமல் பல ஆண்டுகளாக பிள்ளைகளை, பேரப்பிள்ளைகளை, கொள்ளுப் பேரப்பிள்ளைகளை வளர்த்த அனுபவத்தின் வாயிலாக இவர் பெற்றதுதான் ஞானம். கருத்தரங்கில் கொடுக்கப்படுகின்ற கருத்துகளுக்கும் மேலானவற்றைத் தன் அனுபவத்தின் வாயிலாக சொல்லிக்கொடுக்க இவரிடம் ஞானம் இருக்கிறது. "அறிவைப்பெற கல்வி கற்பது என்பது சில விலைமதிப்பில்லாதவற்றைத் தரும் என்றால், அனுபவத்தின் வாயிலாகப் பெறப்படுகின்ற ஞானம் நமக்கு எல்லாவற்றையும் தரும்."
அறிவைத் தரும் கல்வியைக் கற்பதோடு அனுபவத்தால் கிடைக்கும் ஞானத்தையும் பெறுவோம். அதையே நம் சந்ததிக்கும் விட்டுச் செல்வோம்.