மனிதத்தன்மையை மதிக்க வேண்டும் ! | Veritas Tamil
திருத்தந்தை தனது உரையில், கருத்தியல் ரீதியாகப் பிளவுபட்டுள்ள இன்றைய உலகில், பல்வேறு கலாச்சாரக் கண்ணோட்டங்களை முன்வைப்பதற்கும், ஆக்கப்பூர்வமான உரையாடல்களை ஊக்குவிப்பதற்கும் TG2 செய்தி நிறுவனம் கொண்டுள்ள வலிமையைப் பாராட்டினார் திருத்தந்தை
எண்மமுறை, தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றின் வளர்ச்சிக்கு மத்தியில், இதழியல் துறையில் படைப்பாற்றல், விமர்சனப் பகுத்தறிவு மற்றும் சிந்தனைச் சுதந்திரம் ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்தினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
மார்ச் 16, இத்தாலிய அரசுக்குச் சொந்தமான பொது ஒளிபரப்பு நிறுவனமான RAI (Radiotelevisione Italiana)-ன் ஒரு முக்கிய செய்திப் பிரிவான TG2 RAI செய்தி நிறுவனத்தின் 50-வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, அதன் ஆசிரியர் குழுவினரைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை, தொலைக்காட்சி இதழியல் துறையின் மாறிவரும் சூழலில் அந்தச் செய்தி நிறுவனம் கடந்து வந்த பயணத்தைப் பாராட்டினார்.
மேலும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் தகவல் தொடர்பில் உள்ள மனிதத்தன்மையை மறைத்துவிடக் கூடாது என்று எச்சரித்த திருத்தந்தை, செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஊடகங்கள் மனித மதிப்பீடுகளுடன் ஒத்துப்போகும் வகையில் முறைப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துக்காட்டினார்.
மதச்சார்பின்மை மற்றும் பன்மைத்துவம் இரண்டையும் TG2 செய்தி நிறுவனத்தின் அடிப்படை கொள்கைகளாக சுட்டிக்காட்டிய திருத்தந்தை, இவ்விரு கொள்கைகளுமே அந்தச் செய்தி நிறுவனம் தொடங்கப்பட்ட காலம் முதல் அதன் அடையாளமாக விளங்கி வருவதையும் சுட்டிக்காட்டினார்.
கருத்தியல் ரீதியாகப் பிளவுபட்டுள்ள இன்றைய உலகில், பல்வேறு கலாச்சாரக் கண்ணோட்டங்களை முன்வைப்பதற்கும், ஆக்கப்பூர்வமான உரையாடல்களை ஊக்குவிப்பதற்கும் TG2 செய்தி நிறுவனம் கொண்டுள்ள வலிமையைப் பாராட்டிய திருத்தந்தை, "சமூகத்தில் நிலவும் தீவிரமான கருத்து வேறுபாடுகளுக்கு இடையே இது ஓர் அத்தியாவசியமான பண்பு" என்று குறிப்பிட்டார்.
"போரின் கோரப் பிடியில் சிக்குண்டு தவிக்கும் பாதிக்கப்பட்டவர்களின் கதைகளைத் தொடர்ந்து உலகுக்குச் சொல்ல வேண்டும்" என்றும், "போரின் கொடூரமான உண்மைகளைப் பற்றிப் பார்வையாளர்களுக்கு ஓர் ஆழமான புரிதலை வழங்க வேண்டும்" என்றும் அச்செய்தி நிறுவனத்திற்கு அழைப்பு விடுத்தார் திருத்தந்தை.
உண்மையை மறைத்து பொய்யான செய்திகளைப் பரப்புரைச் செய்யாமல் இருப்பதில் ஊடகவியலாளர்கள் பொறுப்புடன் செயல்படுமாறும், குறிப்பாக, போர் காலங்களில் அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நேர்மையான செயல்பாடுகள் குறித்தும் வலியுறுத்தினார் திருத்தந்தை.
இறுதியாக, அவர்கள் தங்களது பணியில் தொடர்ந்து அர்ப்பணமுடன் பணியாற்றி வெற்றி பெற வாழ்த்தியதுடன், அவர்களுக்குத் தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கி தனது உரையை நிறைவு செய்தார்.
நன்றி வத்திக்கான் செய்தி