திறந்த மனநிலை, உரையாடல் மற்றும் விசுவாசிகள் மீது அக்கறை கொண்டு வாழ ஆயர்களுக்கு அழைப்பு- திருத்தந்தை லியோ | Veritas Tamil

திறந்த மனநிலை, உரையாடல் மற்றும் விசுவாசிகள் மீது அக்கறை கொண்டு வாழ ஆயர்களுக்கு அழைப்பு- திருத்தந்தை லியோ
புதியதாக நியமிக்கப்பட்ட ஆயர்கள், தங்கள் பணி காலத்தில் குருக்கள் மீதான தவறுகள் மற்றும் குற்றச்சாட்டுகளை தைரியத்துடன், வெளிப்படையாக எதிர்கொண்டு, தங்கள் பணியை ஒருமைப்பாடு, உரையாடல் மற்றும் இறைமக்களோடு நெருக்கமான உறவு ஆகியவற்றில் வேரூன்றச் செய்ய வேண்டும் என திருத்தந்தை பதினான்காம் லியோ அறிவுறுத்தினார்.
செப்டம்பர் 11 அன்று வத்திக்கானில் நடைபெற்ற ஆயர்களுக்கான வத்திக்கான் மேம்பாட்டு பயிற்சி நிறைவு விழாவில் உரையாற்றிய திருத்தந்தை அவர்கள், செபத்தில் நிலைத்திருக்கவும், தூய ஆவியின் துணையுடன் சவால்களை எதிர்கொள்ளவும், மூடிய வட்டத்திற்குள் தனிமைப்படுத்திக் கொள்ளாமல் இருக்கவும் கேட்டுக்கொண்டார்.
குருக்கள் குற்றங்கள் குறித்து, எக்காரணம் கொண்டும் மறைக்காமல், பாதிக்கப்பட்டவர்களுக்கும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் நீதி மற்றும் கருணையுடன் அணுக வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
ஒன்றித்துப்பயணிப்பதே திருஅவையின் பணி என்பதை வலியுறுத்திய அவர், ஆயர்கள் பாலங்களை அமைக்கவும், சாதாரண விசுவாசிகளை மதிக்கவும், “ஆயுதமற்றதும், ஆயுதங்களை களைவிக்கும்” அமைதியை வளர்க்கவும் ஊக்குவித்தார். சமூக ஊடகங்களை பொறுப்பில்லாமல் பயன்படுத்த வேண்டாம் என எச்சரித்த அவர், விவேகம், அமைதி, மற்றும் தகவல் தொடர்பு வல்லுநர்களின் ஆலோசனையுடன் செயல்பட பரிந்துரைத்தார்.
இறை அழைத்தலை ( vocations ) திறந்த மனதுடன் வழிநடத்தவும், “நம்பிக்கையின் ஊற்றாக” உள்ள சாதாரண விசுவாசிகளின் இயக்கங்களுடன் இணைந்து பணியாற்றவும், பிற மதங்களைச் சேர்ந்தவர்களுடன் உரையாடவும் அவர் வலியுறுத்தினார்.
புகழனைத்தும் உமதே! (Laudato Si’) வெளியீட்டின் பத்தாவது ஆண்டு நிறைவைக் குறிப்பிட்ட அவர், ஆயர்கள் தங்கள் பணியில் சுற்றுச்சூழல் குறித்த அக்கறைகளை இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், செபம், ஒற்றுமை, மற்றும் ஆழ்ந்த ஆன்மீகத்திற்காக ஏங்கும் இளைஞர்களுக்கு பயிற்சி பாசறைத் தேவை — இவை டிஜிட்டல் தளங்களாலும், வழக்கமான பங்குச் செயல்களாலும் பூர்த்தி செய்ய முடியாது என்பதை சுட்டிக்காட்டினார்.
நிறைவாக, தான் ஆயர்களுக்காக தொடர்ந்து செபிப்பதாக உறுதி அளித்தார். திருஅவையானது உங்களின் ‘ஆம்’-ஐ (ஆண்டவரின் அழைப்புக்கு ஆகட்டும் என்று கூறிய அர்ப்பணிப்பை மதிக்கிறது). நீங்கள் தனியாக இல்லை; நாம் ஒன்றாகச் சுமையைத் தாங்கி, ஒன்றாக இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்கிறோம்” என்றார்.
Daily Program
