மதுரை உயர் மறைமாவட்டம் எல்லீஸ் நகர் பங்கின் இளைஞர் இயக்கம் ! | Veritas Tamil
மதுரை உயர் மறைமாவட்டம் எல்லீஸ் நகர் பங்கில் அருள்பணி ஜோக்கின்(பங்கு தந்தை) மற்றும் அருட்சகோதரி.ஜென்னி (இளைஞர் இயக்க பெண்கள் பிரிவு வழிகாட்டி) அவர்களின் வழிகாட்டலில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கத்தோலிக்க இளைஞர் இயக்க இளைஞர்கள் முன்னெடுத்துள்ள 'இளைஞர் வாசகர் வட்டம்' கடந்த ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 23 அன்று முதல் கூட்டத்தை நடத்தினர்.
ஆளுமை வளர்ச்சி, தலைமைப் பண்பு, சொல்லாற்றல், சமூக, அரசியல் தெளிவு எனப் பன்முகத் திறன்களை வளர்க்கும் ஓர் அரிய வாய்ப்பாக இந்த முயற்சி பாராட்டப்பட்டது. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கூடும் இந்தக் கூட்டத்தில், ஒவ்வொருவரும் தான் படித்த ஒரு புத்தகத்தை (இந்த முறை, "பூவுலகின் நண்பர்கள்" வெளியீடான 'பிழைத்தல் அல்ல வாழ்தல்’ தொடரின் பத்து நூல்களிலிருந்து)
3-4 நிமிடங்களுக்குள் சுருக்கமாக அறிமுகம் செய்து, தங்களின் பார்வையைப் பகிரலாம் எனவும், பின்னர் கேள்விகள், தெளிவுகள், ஆழமான விவாதங்கள் ஆகியவற்றிற்கு நேரம் ஒதுக்கப்படும் எனவும் இளைஞர் இயக்க பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.
வாசிப்பில் ஆர்வம் உள்ளவர்களும் புதிய கருத்தியலை கற்றுக்கொள்ள விரும்புபவர்களுமான இளைஞர்கள் முன்னெடுத்துள்ள இந்த முயற்சியின் முதல் கூட்டம் தமிழ்நாடு கத்தோலிக்க இளைஞர் இயக்கத்தின் இயக்க பாடலுடன் தொடங்கியது. பின்னர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரை வாசிக்கப்பட்டது.
தொடர்ந்து வாசக வட்டத்தின் வரவேற்புரையும் நோக்கவுரையையும் தொண். அருண் மைக்கேல் வழங்கினார். இவ்வாசகர் வட்டத்தில் இந்திய அரசியலமைப்பு முகப்புரையும் இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 51 A(H) "அறிவியல் மனப்பான்மை, மனிதநேயம், கேள்வி கேட்கும் மனப்பான்மை (விசாரணை மனப்பான்மை), சீர்திருத்தம் ஆகியவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும். " ஆகியன நோக்கமாகவும் இலக்காகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தன.
பிறகு ஜியோ டாமின் அவர்கள் எழுதி பூவுலகின் நண்பர்கள் வெளியிட்டுள்ள பிழைத்தல் அல்ல வாழ்தல் என்ற தொடரின் 10 புத்தகங்களைப் பற்றியும் அதனை வாசித்த இளைஞர் இயக்க உறுப்பினர்களான சுஜி, சுஜிதா, ஏஞ்சல், ஆண்டோ சுஸ்ருதா, பிஷோன் ஆகியோர் தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர். பிறகு பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தின் தன்னார்வலரான செல்வன். அபிசேக் அவர்கள் 10 புத்தகங்களில் உள்ள கருத்துக்களையும் தொகுத்து வழங்கினார்.
தொடர்ந்து பணி. நித்தின் பிரபு அவர்கள் புத்தக வாசிப்பிற்கான சில உத்திகளை அறிமுகப்படுத்தினார். மதுரை உயர் மறைமாவட்ட இளைஞர் பணி குழுவின் செயலரான பணி. சின்னதுரை அவர்கள் சில வரலாற்று குறிப்புகளுடன் வாசிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
இறுதியாக ,இந்த வாசகர் வட்டத்தில் அருகில் உள்ள பங்குகளான ஞான ஒளிபுரம் மற்றும் சமயநல்லூரில் இருந்தும் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.