லெபனோனில் சிதையும் குழந்தைகளின் எதிர்காலம் ! | Veritas Tamil
மத்திய கிழக்கு நாடுகளில் இனிமேலும் உயிரிழப்புகள் ஏற்படாமல் இருக்கவும், மக்களின் துயரங்களைத் துடைக்கவும் காலம் தாழ்த்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது யுனிசெஃப் நிறுவனம்.
லெபனோனில் தொடர்ந்து இடம்பெற்று வரும் வன்முறையினால் ஏற்பட்டுள்ள கோரமான பாதிப்புகள் குறித்து தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளது யுனிசெஃப் நிறுவனம்.
மார்ச் 9, திங்களன்று, வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இந்தக் கவலையை வெளிப்படுத்தியுள்ள யுனிசெஃப் நிறுவனம், கடந்த ஏழு நாட்களில் மட்டும் குறைந்தது 83 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 254 குழந்தைகள் காயமடைந்துள்ளனர் என்றும் எடுத்துக்காட்டியுள்ளது.
மார்ச் 2, திங்கள்கிழமை முதல் நாளொன்றுக்கு சராசரியாக 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழப்பதாக தெரிவித்துள்ள அதன் அறிக்கை, போர் தீவிரமடைந்துள்ள நிலையில், குழந்தைகள் பாதிக்கப்படும் விகிதம் மிகக் கடுமையாக உயர்ந்துள்ளதையும் உறுதிப்படுத்தியுள்ளது.
லெபனோனில் இடம்பெறும் வன்முறையினால் குழந்தைகள் கொல்லப்படுவது குறித்துத் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ள மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்க மாநிலத்திற்கான யுனிசெஃப் நிறுவனத்தின் இயக்குநர் எட்வர்ட் பிக்பெடர் அவர்கள், "இந்தத் தரவுகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன" என்றும், "இந்தப் போர் குழந்தைகளைப் பொறுத்தவரை ஒரு மிகப்பெரிய பேரழிவு" என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இந்த மோதலினால் குழந்தைகள் சந்தித்து வரும் பேரிழப்புகளை இந்தத் தரவுகள் நமக்குத் தெள்ளத்தெளிவாக உணர்த்துகின்றன என்று கூறியுள்ளார் பிக்பெடர்.
குழந்தைகள் உயிரிழப்பு ஒருபுறமிருக்க, இந்த வன்முறை மிகப்பெரிய அளவிலான இடப்பெயர்வை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஏறத்தாழ 2,00,000 குழந்தைகள் உட்பட மொத்தம் 7,00,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர் என்றும் அதன் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
தொடர்ந்து மனிதாபிமானச் சூழல் மிகவும் மோசமடைந்துள்ளதால், பல குடும்பங்கள் தங்குவதற்கு இடமின்றி தவிக்கின்றன என்றும், இதனால் குழந்தைகள் நெரிசல் மிகுந்த மற்றும் மிகக் கடினமான சூழலில் உறங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்றும் உரைத்துள்ளது.
கடந்த 28 மாதங்களுக்கு முன்பு இந்த மோதல் தொடங்கியது முதல், உயிரிழந்த குழந்தைகளின் மொத்த எண்ணிக்கை தற்போது 412-ஐ எட்டியுள்ள நிலையில், மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரும் அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்களைப் பின்பற்ற வேண்டும் என்றும், பொதுமக்கள், குறிப்பாக, வலுக்குறைந்த குழந்தைகளைப் பாதுகாக்கவும் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளது அந்நிறுவனம்.
இனிமேலும் உயிரிழப்புகள் ஏற்படாமல் இருக்கவும், மக்களின் துயரங்களைத் துடைக்கவும் காலம் தாழ்த்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது யுனிசெஃப் நிறுவனம்.