தித்வா புயலின் பாதிப்பிலிருந்து மீண்டு வரும் இலங்கை ! | Veritas Tamil
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இலங்கையில் ஏற்பட்ட 'தித்வா' புயல் 600-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்தியதோடு, ஏறக்குறைய 91,000 வீடுகளையும் சேதப்படுத்தியுள்ள நிலையில், இப்பேரழிவிலிருந்து அந்நாடு தற்போது மெல்ல மெல்ல மீண்டு வருகிறது என்று தெரிவித்துள்ளது பீதேஸ் செய்தி நிறுவனம்.
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட 'தித்வா' புயலின் பேரழிவிலிருந்து இலங்கை மெல்ல மெல்ல மீண்டு வருகிறது என்று தெரிவித்துள்ளது பீதேஸ் செய்தி நிறுவனம்.
இதற்குத் தீர்வு காணும் வகையில் அரசு தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதாகவும், இருப்பினும் பலர் இன்னும் புலம்பெயர்ந்தோர் முகாம்களில் தங்கியிருப்பதோடு வேலையில்லாத் திண்டாட்டத்தால் அவதிப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார் பாப்பிறை மறைபரப்புப் பணிகள் அமைப்பின் (POM) இயக்குனர் அருள்பணி பாசில் ரோஹன் பெர்னாண்டோ.
மேலும், இத்தகைய இன்னல்களுக்கு மத்தியிலும், மக்களின் மன உறுதி மற்றும் ஒன்றிப்பைப் பாராட்டிய அருள்பணி பெர்னாண்டோ அவர்கள், "மக்களிடையே நம்பிக்கையும், ஒருமித்த குறிக்கோளுடன் கூடிய ஒன்றிப்பும் நிலவுகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
தவக்காலத்தின் போது கத்தோலிக்கச் சமூகத்தின் ஆன்மிகச் செயல்பாடுகளை முன்னிலைப்படுத்திய அருள்பணி பெர்னாண்டோ அவர்கள், குறிப்பாகத் துயருறுவோருக்கு உதவும் வகையில் இறைவேண்டல், தியாகம் மற்றும் தர்மம் ஆகியவற்றில் விசுவாசிகள் கவனம் செலுத்துவதாகக் கூறியுள்ளார்.
இலங்கையின் அரசு தலைவர் அனுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில், அந்நாட்டு அரசு சீர்திருத்தங்கள், ஊழல் எதிர்ப்பு முயற்சிகள் மற்றும் பொருளாதார மீட்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருவதாகவும், குறைந்த வருமானம் கொண்டோருக்கான வீட்டுவசதி மற்றும் பொதுத்துறை வேலைவாய்ப்பு உருவாக்கம் போன்ற திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் அருள்பணி பெர்னாண்டோ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தொடர்ந்து நீடித்து வரும் பொருளாதார சவால்களுக்கு மத்தியில், இலங்கை மாதாவிடம் (Our Lady of Lanka) பாதுகாப்பு வேண்டி இறைவேண்டல் செய்யுமாறு விசுவாசிகளை ஊக்குவித்துள்ளார் கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட 'தித்வா' புயல் 600-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்தியதோடு, ஏறக்குறைய 91,000 வீடுகளையும் சேதப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி வத்திக்கான் செய்தி