பழிக்குப் பழியை வென்ற பாசம் | அருட்பணி. ஜெ.ஞானசேகரன் | Veritas Tamil

உறவுகள் நிலைக்கச் செய்வதற்காகச் கேட்கப்படும் ஒரு வார்த்தை மன்னிப்பு மட்டுமே.

மிண்டி கார்டர் ஷா என்ற இளம்பெண்ணின் மகன் பிரிட்கர் ஒருநாள் சைக்கிளில் சென்றபோது, ஒரு சக்தி வாய்ந்த வாணவேடிக்கையில் சிதறிய வெடி தவறுதலாக அந்தச் சிறுவன்மீது பாய்ந்து வந்து வெடித்தது. அதனால் அவனது வயிற்றுப்பகுதி கிழிந்து, அவனது முதுகு முற்றிலும் தீயினால் வெந்துபோனது.

2008ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த விபத்திலிருந்து மீண்டு வந்த அச்சிறுவனுக்கு வாழ்நாள் முழுவதும் மருத்துவ உதவிகள் தேவைப்பட்டன. இந்த விபத்திற்குக் காரணமான கிரய்க் மில்லர் என்பவரைச் சிறையில் அடைத்து, அவர் மிண்டிகும், பிரிட்கருக்கும் இழப்பீடு தொகை தரவேண்டுமென்று பலரும் விரும்பினர். மிண்டியை வழக்குப்பதிவு செய்யப் பலரும் தூண்டினர்.

ஆனால், மிண்டியின் தாய்மை உள்ளம் அனைவரையும் வியக்க வைத்தது. தன் மகனை விபத்துக்குள்ளாக்கிய கிரய்க் மில்லரைத் தண்டனையிலிருந்து தப்பிக்க வைக்கவே மிண்டி முயன்றார். தன் மகனும் அந்த மனிதரை மன்னிக்கவே விரும்புவதாகவும் பலரிடமும் கூறினார்.


ஒருமுறை மிண்டி தம் மகனிடம், "மகனே, உன்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய மில்லருக்குத் தண்டனை கொடுக்க விரும்பினால் எப்படிப்பட்ட தண்டனை கொடுக்க விரும்புகிறாய்?" என்று கேட்டார். அதற்கு மகன் தம் தாயிடம், "வெடிகளால் வரும் விபத்துகள் பற்றி ஊர் ஊராகச் சென்று மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதுதான் நான் அவருக்குக் கொடுக்கும் தண்டனை” என்று கூறினான் அந்தப் பதினொரு வயது சிறுவன்.

விபத்து நடந்தபொழுது பயத்தில் தற்கொலை செய்துகொள்ள விரும்பினார் மில்லர். ஆனால், மிண்டி மற்றும் பிரிட்கர் ஆகிய இருவரும் கூறிய வார்த்தையால் மில்லருக்கு மறுவாழ்வே கிடைத்துள்ளது.


எழுத்து 
அருட்பணி. ஜெ.ஞானசேகரன்.

Tamil Survey Popup Image