தனி ஒரு மனிதனாக ஆலயத்தை கட்டிய சீன மனிதர். | Veritas Tamil

வட-மத்திய சீனாவின் ஷான்ஷி மாகாணம், ஜோவ்ஜி மறைமாவட்டத்தில் உள்ள புசாங் அசோசியேஷனின் வரலாற்றில், மிகுந்த பாசத்துடன் நினைவுகூரப்படும் சிலருள் ஒருவர் ஃஜாங் ஹுவான்ஜோங். கடின சூழ்நிலையிலும் உறுதியான உழைப்பும் விசுவாசமும் இணைந்த வாழ்வைக் கொண்ட அவர், அர்ப்பணிப்பின் உயிரோவியம் என எல்லோராலும் மதிக்கப்படுகிறார். அவருடன் பணியாற்றிய அருள்தந்தைகளும், உள்ளூர் விசுவாசிகளும், அவரது தன்னலமற்ற சேவையை இன்னும் ஆழ்ந்த மரியாதையுடன் நினைவுகூருகின்றனர்.

ஃபெய்த் ப்ரஸ் வெளியிட்ட தகவல் படி, ஃஜாங் அவர்களின் சேவைப் பயணம் மாற்றுத் திறனாலும், அதற்கெதிரான மன உறுதியாலும் வரையறுக்கப்பட்டது. ஒரு விபத்தில் கை ஒன்றை இழந்த அவர், அதை எந்தச் சூழலிலும் தடையாகக் கருதவில்லை. மாறாக, அந்த வேதனையையே தமது விசுவாசத்திற்கும் பணிக்கும் எரிபொருளாக பயன்படுத்தினார்.

மரியாவிற்கு நிலையான ஆலயம் ஒன்று இல்லாத காலங்களில் கூட, பெரிய பண்டிகைகள் மற்றும் திருவிழாக்களில் தற்காலிக திருப்பிடம் அமைக்கும் பணியில் எப்போதும் முன்னிலையிலிருந்தார். அவரது அசைவுகள் மெதுவாகவும், சிரமமாகவும் இருந்தாலும், அவர் ஒருபோதும் தயங்கியதில்லை. ஒரே கை இருந்த போதிலும், அவர் கயிறுகளை இறுகப் பிடித்து, கனமான மரங்களை தோளில் சுமந்து, வியர்வியில் நனைவதுவரை உழைத்தார். மேலும் இரண்டு குழுத் தலைவர்களுடன் சேர்ந்து, எளிய திருப்பிடங்களை கூட விசுவாசிகளை ஒன்றிணைக்கும் புனித இடங்களாக மாற்றினார்.

"ஒரு தேவாலயம் கட்ட வேண்டும்" என்பது அவரது வாழ்நாள் கனவும், அவரை முழுமையாக ஆக்கிரமித்த இலட்சியமும் ஆகும். தேவையான பொருட்களை ஒருங்கிணைக்க தொலை தூரம் பயணம் செய்து, குடும்பங்களைச் சந்தித்து ஒத்துழைப்புக்காக வேண்டி, பகலில் கட்டுமானத்தை கண்காணித்து, இரவில் விளக்கெண்ணெய் விளக்கின் வெளிச்சத்தில் கணக்குகளை சரிபார்த்து, அடுத்த படிகளைத் திட்டமிட்டார்.
மாற்றுத் திறன் கொண்டவர் என்றாலும், மற்றவர்களை விட அதிகமாக உழைக்க வேண்டியிருந்தது.
இறுதியில், அவரது கனவு நனவானது. தேவாலய ஜன்னல்கள் வழியாகப் பிரவேசித்த முதல் வெயில்கதிர்கள் தரையில் விழுந்த போது, ஃஜாங் அமைதியாக ஒரு மூலையில் நின்று கண்ணீர் மல்கக் கண்டார். அந்தக் கட்டிடம் அவரது ஆயிரக்கணக்கான மணிநேர உழைப்பையும், முழு சமூகத்தின் பகிர்ந்த நம்பிக்கையையும் சுமந்து நிற்கிறது.

புசாங் அசோசியேஷனின் தலைவராக இருந்த ஃஜாங் ஹுவான்ஜோங், நேர்மையாலும் நீதியாலும் உயர்ந்த மரியாதையைப் பெற்றவர். அவர் ஒருபோதும் தனிப்பட்ட நலனை தேவாலயத்தின் மேல் வைக்கவில்லை. ஒவ்வொரு பணியும், ஒவ்வொரு காசும் துல்லியமாகவும் வெளிப்படையாகவும் நிர்வகிக்கப்பட்டது. முரண்பாடுகள் ஏற்பட்டால், அவற்றை பொறுமையுடன் சமரசப்படுத்தி, சமூகத்தில் ஒற்றுமையையும் அமைதியையும் பேணினார்.

இன்று, ஃஜாங் மூதாதையார் உடலில் இல்லாவிட்டாலும், ஒரே கையை வைத்தே வாழ்ந்த அவரது விசுவாசமும், வாழ்நாள் முழுவதும் நடைமுறைப்படுத்திய சேவை மனப்பான்மையும் அந்த சமூகத்தின் இதயங்களில் ஆழமாக வேரூன்றியுள்ளன. தேவாலயத்தின் சுவர்களில் இன்னும் பக்தி பாடல்கள் ஒலிக்கின்றன; திருவிழாக்களில் தற்காலிக கூடாரங்களை அமைத்த அவரது உழைப்புக் கதைகள் இன்னும் மதிப்புடன் சொல்லப்படுகின்றன.“ஒருகை விசுவாசி” இனி நம்மிடத்தில் இல்லாவிட்டாலும், அவர் விட்டுச் சென்ற சேவையின் சின்னம் தலைமுறைகளுக்கு ஒரு ஈர்ப்புத் தீபமாக விளங்குகிறது — உண்மையான அர்ப்பணிப்பும் உறுதியான விசுவாசமும் மலைகளையும் நகர்த்த முடியும் என்பதை நினைவூட்டுகிறது.