மண் வளம், மக்கள் நலம் ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 27.09.2024
மண் வளம், மக்கள் நலம்
"மண் என்றுமே எங்களை கைவிட்டதில்லை.
பசியுடன் படுக்க வைக்கவுமில்லை.
நோயுடன் போராட வைக்கவும் இல்லை ."
முன்பெல்லாம் என்பது தொண்ணூறுகளில் கூட மண் பரிசோதனை செய்யும் வழக்கமெல்லாம் எங்களுக்கு கிடையாது. மண்னோடு மண்ணாக வாழும் பெரியவர்கள் மண்ணை பார்த்தும் மிதித்தும் உணர்ந்தும் என்ன செய்ய வேண்டும் என சொல்லிவிடுவார்கள்.
வளமாக்குவது எப்படி ?
1. நிலத்திற்கு ஓய்வு :
தை மாதத்தில் அறுவடை எல்லாம் முடிந்த வயல்கள் ஓய்வில் இருக்கும் . கால்நடைகள் வயலிலே திரிந்து சாணி கோமியதையும் சேர்க்கும் . அறுவடையின் மிச்சமெல்லாம் வயலிலே சிறிது சிறிதாக மக்கும் . பல விதமான களை செடிகளும் முளைத்து சத்து குறைபாட்டை போக்கும். மண்ணின் கரிம வளம் கூடும். நுண்ணுயிர் பெருகும்.
2. வண்டல் மண் சேர்பது :
தண்ணீர் கட்டும்போது, மடை மாற்றும்போது மண் கரைந்து ஓடினல் அந்த வயலுக்கு வண்டல் ஓட்டியாக வேண்டும் என சொல்லுவார்கள்.
கோடைகாலம் தொடங்கியதுமே ஏரியிலிருந்து வண்டல் அடிக்க தயாராவோம். முன்பாகவே நல்ல வண்டல் உள்ள இடத்தை பார்த்து வைத்துக்கொள்வோம் . கோடைகாலம் என்பதால் மாலை வேளை தான் சரியாக இருக்கும். வெய்யில் தாழ்ந்த பின்பு நன்றாக சாப்பிட்ட பின்பு அப்போதிருந்து நள்ளிரவு வரை வண்டல் அள்ளுவோம்.அப்போது அரசாங்க அனுமதி எல்லாம் வாங்க தேவை கிடையாது. கோடை மழை வரும் வரை இது தொடரும்.நாள் ஒன்றுக்கு இருபது முப்பது நடை மாட்டுவண்டியில் வண்டல் ஓட்டுவோம். வயலில் மண் இறைப்பதும் இரவில்தான். வீட்டிலுள்ள சிறுவர்கள் முதல் அனைவரும் சேர்ந்து இறைப்போம் .
3. கிடை போடுவது :
உழவு ஓடும்போது அதிகமாக கட்டிகள் வந்தால் கிடைபோட சொல்லுவார்கள் . ஆடுகளை பட்டியில் அடைத்து அந்த வயலில் மாற்றி மாற்றி கிடை போட்டு வளமாகிய பின்பே அந்த வயலில் பயிர் வைப்போம்.
4. இலை தழை போடுவது :
நெல் நடவு செய்யும் முன் இலை தழைகளை கொண்டு வந்து போடுவோம் . மலையிலிருந்தும் வாங்கிப் போடுவோம். தழைகளை துண்டு துண்டாக நறுக்கி போடும்போது தான் உழவு செயும்போது எளிதாக இருக்கும். இலைதழைகள் ஊறிய வயல் சேறு வெண்ணெய் போல் வரவேண்டும். அப்போதுதான் பயிர் விரைவில் வேர்பிடித்து கட்டை கட்டும்.
இப்போதெல்லாம் மண் பரிசோதனை சத்துக்குறைவு என ஆயிரம் ரசாயனம் பரிந்துரை . அன்று விளைச்சலை குறி வைத்து யாரும் வேளாண்மை செய்யவில்லை. உணவுக்கு என வந்ததை மகிழ்வுடன் உழைப்பவருடன் பகிர்ந்தும், மற்றதை சேமித்தும் வாழ்ந்தோம் . அதே வேளையில் மண் என்றுமே எங்களை கைவிட்டதில்லை. பசியுடன் படுக்க வைக்கவுமில்லை. நோயுடன் போராட வைக்கவும் இல்லை .
உணவுக்கு வேளாண்மை
சாமானியன்
ஞா சிங்கராயர் சாமி
கோவில்பட்டி