உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி கிட்டும்! | அருட்பணி.குழந்தை இயேசு பாபு | Veritas Tamil

பாஸ்கா 5-ம் வாரம் – செவ்வாய்
தி.பணிகள்  14: 19-28
யோவான்  14: 27-31b

 
உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி கிட்டும்!

முதல் வாசகம்.

இன்றைய வாசகங்களில், பவுல் அடிகளும் இயேசுவும் தங்கள் சீடர்களுக்கு அளித்த "பிரியாவிடை" உரைகளைக் கேட்கிறோம்.   முதல் வாசகமானது  பவுல் மற்றும் பர்னபா இவரும் மறைதூதுப் பயணத்தில் எதிர்கொண்ட சவால்களையும் கடவுளின் அருளால்  அவர்கள் எவ்வாறு சவால்களையும் எதிர்ப்புகளையும்  வெற்றிகொண்டனர்  என்பதையும் நமக்கு விவரிக்கிறது.  

நற்செய்தி அறிவித்துக்கொண்டிருந்த பவுல் மீது வன்முறை கட்டவிழ்க்கப்படுகிறது. கொடிய யூதர்கள்  மக்களைத் தூண்டிவிட்டு, பவுல்மேல் கல் எறிந்தார்கள்; அவர் இறந்துவிட்டார் என்று எண்ணி நகருக்கு வெளியே அவரது உடலை தூக்கி எறிந்தார்கள். ஆனால், பவுலோ சீடர்கள் மத்தியில்  எழுந்து நகரினுள் சென்றார் என்றும், மறுநாள் அவர் பர்னபாவுடன் தெருபைக்குப் புறப்பட்டுச் சென்றார் என்றும் லூக்கா செய்தியில்  குறிப்பிடுகிறார்..

தெருபையில், இறையரசில் நுழைவதற்கு பல சோதனைகள் அவசியம் என்பதையும், கடவுளின் அருளால்  நாம் எவ்வாறு நம்பிக்கையில் நிலைத்திருக்க முடியும் என்பதையும் விவரிக்கிறார் பவுல் . 'நாம் பல வேதனைகள் வழியாகவே இறையாட்சிக்கு உட்பட வேண்டும்' என்று கூறி அங்கிருந்த மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுகின்றனர் இருவரும்.
 
நற்செய்தி.
 
இன்று நற்செய்தியில் இயேசு  தம் சீடர்களுக்கு உரைத்த இறுதி உரையின் தொடர்ச்சியைக் கேட்கிறோம்.   அவர், ‘அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல’ என்கிறார். அடுத்து, ‘நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்; மருள வேண்டாம். ‘நான் போகிறேன், பின் உங்களிடம் திரும்பி வருவேன்’ என்கிறார்.  
நிறைவாக, ‘இனி நான் உங்களோடு மிகுதியாகப் பேசப் போவதில்லை; ஏனெனில் இவ்வுலகின் தலைவன் வந்துகொண்டிருக்கிறான்’ என்று முடிக்கிறார்.

சிந்தனைக்கு.

திருத்தூதர் பணி நூலில்,  ஆரம்ப திருஅவை பல சவால்களையும் எதிர்ப்புகளையும் சந்தித்தது. இருந்தாலும், அவர்கள் அஞ்சவில்லை. அவர்கள் செய்தது ஒன்றே — இறைவனுடைய வார்த்தையை தைரியமாக பல ஊர்களில் அறிவித்தார்கள்.
இன்றைய நற்செய்தியை சற்று ஆழ்ந்து வாசித்தால்  இயேசு தரும் ஓர் ஆழமான படிப்பினை ,  “நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்; மருள வேண்டாம். ‘நான் போகிறேன், பின் உங்களிடம் திரும்பி வருவேன்’ என்பதாகும்.  இயேசுவை நம்புகிறவன் நற்செய்திக்கு எதிரான  உலக மிரட்டலுக்கு ஒருபோதும் மருள மாட்டான், அஞ்சமாட்டான் மற்றும் பின்வாங்கமாட்டான். 
    
நாமோ, இந்த உலகம் தரும் அமைதிக்காக அல்லும் பகலும் ஏங்குகிறோம். சில வேளைகளில் பல ஆயிரம் செலவு செய்து அமைதி தேடி சுற்றுலா சென்று வருகிறோம். ஆனால் அது நீடிப்பதில்லை.  மேலும், உலகம் தரும் அமைதியில், அமைதியைப் பெற நாம் ஒன்றை அல்லது ஒருவரைச் சார்ந்திருக்க வேண்டியுள்ளது.   

இயேசு வாக்களிக்கும் அமைதி எனும் கொடையானது இருளின் சக்திகளை விரட்டக் கூடியது.  அது ஆன்மாவைச்  சார்ந்தது, யாரையும் சாராதது. இயேசுவின் அமைதி நம் உடல் அல்லது மூளையையும் தாண்டியது.  இன்றைய முதல் வாசகத்தில்  திருத்தூதர்கள் பவுலும் பர்னபாவும் தாங்கள் எவ்வளவு துயருற்றாலும் அவர்களால் எப்படி தொடர்ந்து முன்னேற முடிந்ததென்றால்,   அவர்கள் துன்பதிலும் ஆண்டவரின் அமைதியில் உழன்றார்கள். ஆண்டரின் அமைதி அவரகளில்  பயத்தை நீக்கி, அவர்கள் அறிவித்த நற்செய்தியில் நிலைத்திருக்கச் செய்தது. 

இயேசுவின் அமைதி என்பது உலக காரியங்களை, உலக மாயைகளைச் சார்ந்திருக்காமல், ஆண்டவர் மீது வைக்கும் நம்பிக்கையால் கிடைக்கும் ஆழமான மன அமைதி எனபதை மனதில் கொள்ள வேண்டும்.  “நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள்” (யோவா 14:1) என்ற அவரது உறுதிமொழியில் இயேசுவின் அமைதி ஊற்றெடுக்கிறது. இயேசு, "உங்கள் உள்ளம் கலங்க வேண்டாம், அஞ்ச வேண்டாம்" என்று கூறி, சீடர்களின் கவலையான மனநிலையை மாற்றும் அமைதியை வழங்கினார் என்று அறிகிறோம்.

நிறைவாக, மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் கூறுவது போல், இயேசு தரும் அமைதி ஆழ்கடலில் நிலவும் அமைதி போன்றது. புயல் மேலே இருந்தாலும், ஆழத்தில் அமைதி இருப்பது போல, வாழ்வில் சோதனைகளும் துன்பங்களும் இருந்தாலும், மனதிற்குள் நிலைத்திருக்கும் அமைதி இதுவாகும்.

இறைவேண்டல்.

அமைதியின் அரசராகிய இயேசுவே, எனக்கு வாழுவும், வழியுமாக இருப்பதற்காகவும் உமது அமைதியை என்னோடு பகிர்வதற்காகவும் உமக்கு நன்றி கூறுகிறேன்.  ஆமென். 

   

ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
அலைப்பேசி +6 0122285452