தந்தையை நம்மிலே வெளிப்படுத்த ...... | அருட்பணி.குழந்தை இயேசு பாபு | Veritas Tamil
பாஸ்கா காலம் 5 வாரம் ஞாயிறு மறையுரை 03.05.2026)
மு.வா: தி ப: 6: 1-7
ப.பா: திபா 33: 1-2. 4-5. 18-19.
இ.வா: 1 பேதூ: 2: 4-9
ந.வ: யோவா: 14: 1-12
தந்தையை நம்மிலே வெளிப்படுத்த ......
இன்றைய வாசகங்கள் அனைத்தும் நாம் தந்தை கடவுளின் பிள்ளைகள் அவரை நம்மிலே வெளிப்படுத்த வேண்டும் அவரோடு ஒன்றாக இணைய வேண்டும் என்ற நமக்கான அழைப்பை நமக்கு நினைவூட்டும் விதமாக அமைந்துள்ளன. சிறுவயதிலே திருமறைச்சுவடியில் நாம் இவ்வாறாக படித்திருக்கிறோம். நாம் படைக்கட்டத்தின் நோக்கமே கடவுளை அறிந்து அவரை அன்பு செய்து அவரை அடைவதற்கே. இந்நிலையை அடையவே கடவுள் மனிதனை தன்னுடைய உருவிலும் சாயலிலும் படைத்தார். அவ்வாறெனில் நாம் கடவுளின் ஞானைத்தையும் நற்குணங்களையும் ஆற்றலையும் தெய்வீகத்தையும் நம்மிலே கொண்டுள்ளோம் என்பது தெளிவு.
இயேசு இதை முழுமையாக அறிந்திருந்தார். உணர்ந்திருந்தார். எனவே தான் நானும் தந்தையும் ஒன்றே. என் வழியாய் நீங்கள் தந்தையை காண்கிறீர்கள் என துணிச்சலாக குழப்பமோ கலக்கமோ இன்றி சொல்ல முடிந்தது.
அந்த இறைவனின் இருத்தலை நம்மில் நாம் உணர முடிகிறதா? இல்லையென்றால் அதற்கான காரணத்தை நாம் சிந்தித்திருக்கிறோமா?
இதற்கு சரியான விடையைசொல்லித்தருகிறது இன்றைய முதல் வாசகம்.முதல் வாசகத்திலே உணவுப்பந்தியில் கிரேக்க கைம்பெண்கள் சரியாக கவனிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது சீடர்கள் அறிவுத்தெளிவோடு தங்களுடைய பணி இறைவேண்டலும் இறைவார்த்தை அறிவுப்பும் என்பதை உறுதிப்படுத்தி அப்பணிக்காக சிலரை தேர்ந்துதெடுத்தார்கள். இந்நிகழ்வு நமக்கெல்லாம் சுட்டிக்காட்டுவது நாம் இறைவனுக்குகந்தசிறந்தவற்றை தேர்தெடுக்க வேண்டும் என்பதை தான். உணவு பரிமாறுதல் நல்ல காரியம் தான். ஆனால் அதைவிட சிறந்தது இறைவேண்டலிலும் இறைவார்த்தையிலும் நிலைத்திருப்பது. எனவேதான் சீடர்கள் இயேசுவை பிரதிபலிக்கும் சீடர்களாக இறையன்பின் தூதுவர்களாக இறைமையை தங்களிலே வெளிப்படுத்தினார்கள்.
உலக காரியங்கள் தேவைதான். நல்லவைதான். ஆயினும் சிறந்தவை நம் ஆன்மீக காரியங்கள் என்பதை பல வேளைகளில் நாம் உணரத்தவறிவிடுகிறோம். இறைவேண்டலில் நாம் ஆழப்படும்போது இறைவனோடு ஒன்றாகிறோம். இறைவார்த்தையின் படி வாழும் போது இறைவனை வெளிப்படுத்துகிறோம். அப்படியென்றால் நானும் தந்தையும் ஒன்றே ....என்னில் கடவுள் வெளிப்படுகிறார் என இயேசுவைப் போல நாமும் கூறலாமன்றோ.
எனவே நம்நம்பிக்கையை
ஆழப்படுத்துவோம். நாம் இறைவனின் உருவிலும் சாயலிலும் படைக்கப்பட்டவர்கள் எனை உணர்வோம். கடவுளை நம் வாழ்வில் நம் இருத்தலால் சொல்லால் செயலால் வெளிப்படுத்தி பிறரை கடவுளிடம் அழைத்துச்செல்லும் வழியாக மாற முயல்வோம். இயேசு இவ்வாறாக நாம் மாற நமக்கு முன்மாதிரியாகவும் வழிகாட்டியாகவும் விளங்குவார். ஆமென்.
இறைவேண்டல்
அன்பு கடவுளே உம்மை எம்மிலே பிறர் காண அருள் பொழிவீராக. ஆமென்.