உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

பாஸ்கா4-ம் வாரம் – வெள்ளி
தொழிலாளர் தினம்

 தி.பணிகள்  13: 26-33
மத்தேயு 13: 54-58 (தொழிலாளரான புனித யோசேப்பு நினைவுக்கு உரியது.)


உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்!

முதல் வாசகம்.

பவுல், யூதர்களுக்கும், இயேசுவை ஏற்றுக்கொண்ட புறவின கிறிஸ்தவர்களக்குமிடையே உரையாற்றுகிறார். அவர் அவர்களை “அபிரகாம் ” வழிமரபினர் என்று அழைக்கிறார். இது அவர்கள் யூத மரபைச் சேர்ந்தவர்கள் என்பதைக் காட்டுகிறது.  
தொடர்ந்து, கடவுள் இயேசுவை நம்முடைய மீட்பராக நமக்கு அனுப்பினார் என்றும் எருசலேமில் வாழ்ந்த யூதர்களும், அவர்களது தலைவர்களும் இயேசுவை உண்மையிலேயே யார் என்பதை அறியவில்லை என்றும், அவர் எந்தத் தவறும் செய்யவில்லை என்றபோதும், அவர்கள் இயேசுவை மறுத்து, மரணதண்டனைக்குக் கட்டாயப்படுத்தினர் என்றும் விவரிக்கிறார்  
ஆனால்,  சிலுவையில் மரித்து அடக்கம் செய்யப்பட்ட அவரை கடவுள்  உயிர்த்தெழச் செய்தார் என்றும், திருத்தூதர்கள்  எல்லாம் அந்த நிகழ்வுகளுக்கு நேரடி சாட்சிகள் என்றும்  இவ்வாறு, கடவுள்  பழைய ஏற்பாட்டில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றினார் என்றும் சாட்சியம் பகிர்கிறார்.  
 
நற்செய்தி.

பகுதி இயேசு தம் சொந்த ஊரான நாசரேத்தில் தொழுகைக்கூடத்தில் போதித்த நிகழ்வை விளக்குகிறது. இயேசு இங்கு  போதிக்கும்போது மக்கள் அவரது ஞானத்தையும் அற்புதங்களையும் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள். அவர் சாதாரண மனிதர் போல இருந்தாலும், அவருடைய வார்த்தைகளில் வல்லமை இருந்தது.

ஆனாலும், மக்கள் அவரை “தச்சனின் மகன்” என்று நினைத்து, அவருடைய குடும்பத்தை அறிந்திருந்ததால் அவரை சிறுமைப்படுத்தினர்.
அவர்கள், “இவர் நம்மிடையே வளர்ந்தவர் தான்; இவ்வளவு ஞானம் இவருக்கு எப்படிக் கிடைத்தது?” என்று சந்தேகப்பட்டார்கள்.  அவர்களின் மனப்பான்மையைக் கண்டு, இயேசு, “ஓர் இறைவாக்கினர் தன் சொந்த ஊரிலும் வீட்டிலும் மதிக்கப்படமாட்டார” என்று கூறுகிறார்.  

சிந்தனைக்கு.
 
இன்று அனைத்துலக தொழிலாலளர் தினம் கொண்ட்டப்படுகிறது. தொழிலாளர் தினத்திற்கும் (மே 1) கிறிஸ்தவத்திற்கும்  நெருங்கிய தொடர்பு உண்டு, குறிப்பாக கத்தோலிக்க திருஅவையில் இந்த நாள் தொழிலாளர்களின் பாதுகாவலரான புனித யோசேப்பின் (St. Joseph the Worker) நினைவு நாளாகக் கொண்டாடப்படுகிறது.

முதல் வாசகத்தில், கடவுளால் அழைக்கப்பட்ட பவுல் சோம்பித் திரியவில்லை. உழைப்பால் நற்செய்தி பணியாற்றினார் என்று லூக்கா குறிப்பிடுகிறார்.
புனித யோசேப்பு, ஒரு தச்சராகப் பணியாற்றி, இயேசுவுக்கும் மரியாவுக்குமாக   உழைத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்தவர். எனவே, அவர் உழைக்கும் வர்க்கத்தின் முன்மாதிரியாகக் கருதப்படுகிறார்.  உழைப்பு கடவுளின் பார்வையில் மாட்சிக்குரியது. 

அவர்தான் மனிதனைப் படைத்து, மண்ணுலகை ஆளுமை செய்யவும், உழைப்பை  ஆற்றலுக்கு உட்படுத்தவும் ஆசி வழங்கினார் (தொ. நூ. 1:28). எனவே மனித உழைப்பை கடவுளின் ஆசியாகப் பார்க்க வேண்டும். 

உழைப்பவர்களின் மாட்சியையும் உரிமைகளையும் எப்போதும் முன்னிறுத்துவது திருஅவையின் (நமது) கடமையாகும். தொழிலாளர்களின் மாட்சியும் உரிமைகளும் மீறப்படும் சூழல்களை கண்டிக்கவும் திருஅவை (நாம்) தவறக்கூடாது. கடவுள் உலகத்தின் முதலாளி. உலகில் நாம் அனைவரும் அவரது தொழிலாளி என்பதை நினைவில் கொள்வோம். 

நிறைவாக, "உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்" எனும் மகாகவி பாரதியாரின் கவிதை வரிகளை நினைவுகூர்ந்து அனைத்து நிலையிலான தொழிலாளர்களுக்காவும் இறைவேண்டல் செய்வோம்.

   
இறைவேண்டல்.
 
இயேசுவே! உழைக்கும் அனைவரது  உழைப்பை ஆசீர்வதித்து, நீதி மற்றும் மரியாதையுடன் வாழும் அருளை அருள்வீராக, ஆமென்.


ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
அலைப்பேசி +6 0122285452