உண்மையான இறைவேண்டல்– வார்த்தைகளில் அல்ல, இதயத்தில்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil
பொதுக்காலம் 11 ஆம் வாரம் – வியாழன்
சீராக் 48: 1-15
மத்தேயு 6: 7-15
உண்மையான இறைவேண்டல்– வார்த்தைகளில் அல்ல, இதயத்தில்!
முதல் வாசகம்.
நேற்றை தொடரச்சியாக சீராக் நூலிலும் எலியா பற்றிய சில தகவல்களை அறிகிறோம். இறைவாக்கினர் எலியா மற்றும் அவரது சீடரான எலிசா பற்றிய புகழுரை இடம்பெறுகிறது. எலியா இறைவனின் வல்லமையால் சில வல்ல செயல்கள் செய்து, மக்களை மனமாற்றத்திற்கு அழைத்தார். அவர் வறட்சியைக் கொண்டுவந்ததோடு, இறைவனின் வார்த்தையால் இறந்தவர்களையும் உயிர்ப்பித்தார். கர்மேல் மலையில் பொய்த் தெய்வ வழிபாட்டை எதிர்த்து, இஸ்ரயேல் மக்களை உண்மையான இறைவனிடம் திருப்பினார் என்று வசிக்கிறோம்.
மேலும், எலியா சுழற்காற்றில் விண்ணுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். அவரது ஆவியும் அதிகாரமும் எலிசாவுக்கு அளிக்கப்பட்டது. எலிசாவும் பல அற்புதங்களைச் செய்து, தனது வாழ்நாளிலும் இறப்பிற்குப் பின்னரும் இறைவனின் வல்லமையை வெளிப்படுத்தினார் என்று ஆசிரியர் விவரிக்கிறார்.
நற்செய்தி.
இன்றைய நற்செய்தி நேற்றைய தொடர்ச்சியாகும். இன்று, இயேசு, இறைவனிடம் இறைவேண்டல் செச்யும்போது, வார்த்தைகளை அடுக்கிக் கொண்டு, இறைவேண்டலை அழகுப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டிருக்க வேண்டாம் என்று போதிக்கிறார். ஏனெனில் நாம் கேட்பதற்கு முன்பே நமக்குத் தேவையானவற்றைத் தந்தை அறிந்திருக்கிறார் என்றும், தொடர்ந்து, அவர் தமது சீடர்களுக்கு “விண்ணில் உள்ள எங்கள் தந்தையே” என்ற இறைவேண்டலை கற்றுக்கொடுக்கிறார்.
இந்தச் செபத்தில் இறைவனின் பெயர் தூய்மைப்படுத்தப்படவும், அவரது அரசாட்சி வரவும், அவரது திருவுளம் நிறைவேறவும் வேண்டுமாறு பணிக்கிறார். அன்றாட உணவு, பாவமன்னிப்பு மற்றும் சோதனையிலிருந்து பாதுகாப்பு ஆகியவற்றையும் இறைவனிடம் கேட்கக் கற்பிக்கிறார். மேலும், நாம் பிறரை மன்னிப்பது போல நம்மையும் மன்னிக்கும்படி வேண்டுகிறோம்.
சிந்தனைக்கு.
இறைவேண்டலில் முதலில் தற்பெருமை ஆகாது என்றும் உண்மை இருக்க வேண்டும் என்றும் நாம் அறிவுறுத்தப்படுகிறோம். உண்மையான மனதோடும் நம்பிக்கையோடும் இறைவனை அணுக வேண்டும்; பிறரை மன்னிக்கும் மனப்பான்மை கொண்டவர்களுக்கே இறைவனின் மன்னிப்பு முழுமையாகக் கிடைக்கும் என்பதும் இன்றைய இன்றியமையாத செய்தியாக உள்ளது.
இன்றைய இரு வாசகங்களையும் ஆழ்ந்து சிந்திக்குப் போது, எலியாவின் வல்லமை அவரது இறைவன் மீதான நம்பிக்கையிலிருந்து வந்தது என்பதும், இயேசு கற்பிக்கும் இறைவேண்டலும் அதே நம்பிக்கையை வளர்க்கிறது என்பதும் உணர்த்தப்ப்டுகிறது. மேலும், நாம் இறைவனிடம் மன்னிப்புக் கேட்கும் முன்பாக பிறரையும் மன்னிக்க வேண்டும் என்று ஆண்டவர் நினைவூட்டுகிறார்.
இயேசுவின் காலத்து புறச்சமயத்தினர் பலர், மணி கணகக்கான நீண்ட இறைவேண்டல்களால் இறைவன் மயங்கிவிடுவார் என்றும் எண்ணி செய்லபட்டனர். இயேசுவோ இதை உண்மையான இறைவேண்டலுடன் வேறுபடுத்திக் காட்டுகிறார்; உண்மையான இறைவேண்டல் என்பது வற்புறுத்துதலால் அல்ல, மாறாக தந்தையின் பராமரிப்பின் மீது நம்பிக்கை வைப்பது என்பது தெளிவாகிறது.
முதலில், கடவுள் நமது வானகத் தந்தை. உலக மாந்தர்களுக்கான ஒரே தந்தை. எனவே அவரில் அனைவரும் ஒரே மக்கள். ஆகவே, மனிதரில் நிறம், மொழி, பண்பாடு, இனம், சமயம் போன்ற வேற்றுமைகள் இறைவனில் இல்லை. பாகுபாடுகளுக்கும் வேறுபாடுகளுக்கும் மனிதரே காரணம்.
கவியரசர் கண்ணதாசன் எழுதிய 'கேள்வி பிறந்தது அன்று' என்ற புகழ்பெற்ற திரைப் பாடலின் வரிகளில், மனிதர்களுக்கு இடையே ஆண்டான், அடிமை, மேலோர், கீழோர் என்ற ஏற்றத்தாழ்வுகள் இருக்கக் கூடாது என்ற சமத்துவக் கருத்துக்களை வலியுறுத்தி இருப்பார். அவரது சிந்தனைக்கு எட்டியதுகூட மறையநூல், நற்செய்திகள் கற்ற நம்மில் பலருக்கு எட்டவில்லை.
இன்று இந்த உன்னதமான இறைவேண்டலைப் பற்றி தியானிக்க வேண்டும். ஒவ்வொரு விண்ணப்பத்தையும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். ஆண்டவர் கற்பித்த முதல் மூன்று மன்றாட்டுகள், நமது தேவைகளை விட, மிக உயர்ந்த நன்மையாகிய கடவுளின் மாட்சியின் மீது கவனம் செலுத்துவதாக உள்ளது. அவரது ஆட்சி நம்மில் நிலவ ஆசிக்க வேண்டும் என்கிறார் ஆண்டவர். இல்லையேல் சாத்தானின் ஆட்சியால் இன்னலுறுவோம் என்பது உறுதி.
அடுத்து வரும் இரண்டாம் பகுதியில், நமது சொந்தத் தேவைகளின் பக்கம் திருப்புகிறார் ஆண்டவர். இங்கே பேராசைக்கு இடம் கொடாமலும், பிறரை மன்னித்து வாழும் தூய வாழ்வுக்கான மன்றாட்டையும் முன் வைக்கிறார் ஆண்டவர். நிறைவாக, சோதிப்பவன் (அலகை) நிச்சயம் நம்மை சோதிப்பான். அவனது சோதனையில் சிக்காமல் விலகி நிற்க கடவுளின் உதவியை நாம் நாடி வாழ வேண்டும் என்கிறார் ஆண்டவர். ஆகவே, நமது இவ்வுலக வாழ்வானது அன்பான தந்தையாம் கடவுளைச் சார்ந்த வாழ்வாக அமைய வேண்டும் என்று அறிவுறுத்தப்ப்டுகிறோம்.
இறைவேண்டல்.
விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே
உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக!
உமது ஆட்சி வருக
உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல
மண்ணுலகிலும் நிறைவேறுக
எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும்
எங்களுக்கு எதிராக குற்றம் செய்வோரை
நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும்
எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும்,
தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும். ஆமென்
ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452