உண்மை அன்பே அனைத்தின் மையம் | ஆர்.கே. சாமி | Veritas Tamil

பொதுக்காலம் 9 ஆம் வாரம் – வியாழன்.

2 திமொ 2: 8-15
மாற்கு  12: 28b-3

 

உண்மை அன்பே  அனைத்தின் மையம் 


முதல் வாசகம் 

பவுல் திருத்தூதர் திமொத்தேயுவை நோக்கி, இயேசு கிறிஸ்துவை எப்போதும் நினைவில் கொள்ளும்படி அறிவுறுத்துகிறார். மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்த இயேசுவே நற்செய்தியின் மையம் என்றும்,  நற்செய்திக்காக அவர் துன்பங்களையும் சிறைவேதனைகளையும் அனுபவித்தாலும், எதனாலும்  கடவுளின் வார்த்தையைச் சிறைப்படுத்த முடியாது.
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் மீட்புக்காக எல்லா துன்பங்களையும் சகித்துக்கொள்கிறேன் என்றும் அவர் தனது துன்பங்களுக்கான காரணத்தை விவரிக்கிறார் “நாம் அவருடன் இறந்திருந்தால் அவருடன் வாழ்வோம்; அவருடன் துன்பங்களைச் ஏற்றால் அவருடன் ஆட்சி செய்வோம்” என்ற நம்பிக்கையூட்டும் உண்மையையும் எடுத்துரைக்கிறார். மனிதர்கள் நம்பிக்கையில்லாமல் இருந்தாலும், கிறிஸ்து எப்போதும் உண்மையுள்ளவராக இருக்கிறார் என்று பவுல் வலியுறுத்துகிறார்.
இறுதியில், கடவுளுக்கு ஏற்ற பணியாளனாக இருக்க திமொத்தேயு முயற்சி செய்ய வேண்டும் என்றும், இறைவார்த்தையை நேர்மையாக போதித்து, பயனற்ற வாதங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் பவல் அறிவுறுத்துகிறார்.

நற்செய்தி.

இன்றைய செய்தியில், பகுதியில், ஒரு மறைநூல் அறிஞர் இயேசுவிடம், “அனைத்து கட்டளைகளிலும் முதன்மையானது எது?” என்று கேட்கிறார். அதற்கு இயேசு, “உன் முழு இதயத்தோடும், முழு ஆன்மாவோடும், முழு மனதோடும், முழு பலத்தோடும் ஆண்டவராகிய கடவுளை அன்பு செய்” என்பதே முதல் கட்டளை என்றும், ‘உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக’கூறுகிறார்.
இந்த இரு கட்டளைகளே இறைநம்பிக்கையின் அடிப்படையும் முழுமையுமானது  என்பதை இயேசு எடுத்துரைக்கிறார். வெளிப்புற பலிகளையும் சடங்குகளையும் விட அன்பே உயர்ந்தது என்பதை மறைநூல் அறிஞரும் ஒப்புக்கொள்கிறார். அவருடைய புரிதலைக் கண்டு இயேசு, “நீ இறையாட்சிக்கு தூரத்தில் இல்லை” என்று பாராட்டுகிறார்.
 
சிந்தனைக்கு. 

இன்றைய நற்செய்தியில்,  மறைநூல் அறிஞருள் ஒருவர் இயேசுவிடம் "எல்லாக் கட்டளைகளிலும் முதன்மையானது எது?" என்று கேட்கிறார். கேள்வி சற்று தந்திரமானது. மேலும், அவரது கேள்வி சட்டத்தை மையமாகக் கொண்டது.  அதிலும், அவரது கேள்வியானது  தர்க்கரீதியானது. இக்கேள்விநை கேட்பவரோ, சாதாரண மனிதர் அல்ல, மறைநூல் அறிஞர், ஒரு பரிசேயர் (மத் 22: 34-35)

1.    உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழு மனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்புகூர்வாயாக’
2.    ‘உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக’  
இவை இரண்டும் பழைய ஏற்பாட்டில் விவரிக்கப்பட்டவை. முதலாவது இணைச்சட்டம்  6:4-5, அடுத்தது லேவியர்  19:18’
மறைநூல் அறிஞரின் கேள்விக்கு இவற்றைவிட மேலான கட்டளை வேறு எதுவும் இல்லை” என்பது இயேசுவின் பதிலாக வந்தது.  
அந்த மறைநூல் அறிஞர் இயேசுவின் பதிலைக் கேட்டதும் கோபம் கொள்ளவில்லை. அவர் இயேசுவுக்கு எதிரான பரிசேயர் கூட்டத்தோடு  சேரவில்லை.  மாறாக, கடவுளையும் அண்டை வீட்டாரையும் அன்புசெய்வதற்கான  இயேசுவின் பதிலை  ஏற்கிறார். எனவேதான் ஆண்டவர் “நீர் இறையாட்சியினின்று தொலையில் இல்லை” என்றார்.என்று அவரை மிகவும் பாராட்டுகிறார்.


ஒவ்வொரு நபரும் தனது சீடராக இருக்க வேண்டும், கடவுளையும் அண்டை வீட்டாரையும் ஒரே மாதிரியாக அன்புசெய்ய வேண்டும் என்பதே இயேசுவின் அவா.   

முதல் வாசகத்தில் பவுல் திருத்தூதர் திமொத்தேயுவிடம், ‘நாம் அவரோடு இறந்தால், அவரோடு வாழ்வோம்; அவரோடு நிலைத்திருந்தால், அவரோடு ஆட்சிசெய்வோம்; நாம் அவரை மறுதலித்தால் அவர் நம்மை மறுதலிப்பார். நாம் நம்பத்தகாதவரெனினும் அவர் நம்பத்தகுந்தவர் என்று கூறுகிறார்.
பவுல் சிறையில் இருந்தாலும், துன்பங்களை அனுபவித்தாலும், நற்செய்தியை அறிவிப்பதை நிறுத்தவில்லை. ஏனெனில் அவர் நம்பியது மனித சக்தியல்ல; உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் வல்லமையே என்பதில அவர் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார்.

நாம் உண்மையில் கடவுளையும் அடுத்திருப்பவர்களையும் அன்பு செய்கிறோமென்றால், தடைகளுக்கும் துன்பத் துயரங்களையும் அஞ்ச வேண்டியதில்லை. புனித பவுலைப்போல் எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்களாக வாழ முற்பட வேண்டும். 

 இறைவேண்டல்.

ஆண்டவரே, கடவுளை அன்பு செய்வதில் எனக்கிருக்கும் ஆர்வம் எனக்கு அடுத்திருப்பவரை அன்பு செய்வதிலும் பெருக்கெடுக்க அருள்புரிவீராக. ஆமென்.

ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452